நாட்டின், 29வது மாநிலமாக, தெலுங்கானா இன்று உதயமானது.
இதன், முதல் முதல்வராக, டி.ஆர்.எஸ்., கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், பதவியேற்றார். ஐதராபாத் நிஜாம் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்த ஐதராபாத் மாகாணம், நாடு விடுதலை அடைந்ததும், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது.
இரண்டு பகுதிகளிலும், தெலுங்கு பேசும் மக்கள் வசித்ததை அடிப்படையாக வைத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.ஐதராபாத் மாகாணத்தில் இருந்த வாரங்கல், அதிலாபாத், கம்மம், மெகபூப் நகர், நலகொண்டா, ரங்காரெட்டி, கரீம் நகர், நிஜாமாபாத், மேடக் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.'ஆந்திராவிலிருந்து பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்' என, 1969லிருந்து, தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
உஸ்மானியா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டம் தான், இதற்கு முன் உதாரணமாக அமைந்தது. இதையடுத்து, கடந்தாண்டு டிசம்பரில், காங்., தலைமையிலான மத்திய அரசு, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க ஒப்புதல் அளித்தது. மார்ச் முதல், அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.
தெலுங்கானாவில், மொத்தம் உள்ள, 119 தொகுதிகளில், 63 தொகுதிகளில், டி.ஆர்.எஸ்., வெற்றி பெற்றது. அந்த கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, டி.ஆர்.எஸ்., அரசு, இன்று பதவியேற்க உள்ளது. நரசிம்மன் முதல் கவர்னராக பதவி ஏற்பு: முன்னதாக இன்று காலை தெலுங்கானா முதல் கவர்னராக நரசிம்மன் பதவி ஏற்றுக்கொண்டார். தெலுங்கானா மாநிலத்தின் முதல் முதல்வர் என்ற பெருமை, சந்திரசேகர ராவுக்கு கிடைக்கப் போகிறது.நாட்டின், 29வது மாநிலமாக, தெலுங்கானா, இன்று முறைப்படி உதயமாகிறது.இதைத் தொடர்ந்து, அங்கு அமலில் உள்ள ஜனாதிபதி ஆட்சி, இன்று முதல் வாபஸ் பெறப்படுகிறது.
தெலுங்கானா அல்லாத ஆந்திர மாநிலத்தில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் அரசு, ஒரு வாரத்துக்கு பின்பே, பதவியேற்கவுள்ளது.புதிய அரசின் பதவியேற்பு விழா, ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில், இன்று காலை, 8:15க்கு நடந்தது. ஐதராபாத் நகரமே டி.ஆர்.எஸ்., கட்சி கொடியின் இளம் சிவப்பு நிறத்தில் ஜொலிக்கிறது.