யாமிருக்க பயமே திரை விமர்சனம் - TK Copy யாமிருக்க பயமே திரை விமர்சனம் - TK Copy

  • Latest News

    யாமிருக்க பயமே திரை விமர்சனம்


    'கழுகு' கிருஷ்ணா கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும்
    கலர்புல், காமெடி, த்ரில், திகில் திரைப்படம் தான் 'யாமிருக்க பயமே!' கிரண் எனும் கிருஷ்ணா, காதலி ஸ்மிதா எனும் ரூபா மஞ்சரியுடன் வசதியான வாழ்க்கை வாழ வேண்டுமென ஊரை அடித்து உலையில் போடும் காரியங்களில் இறங்கி, அடிக்கடி உதைபடுகிறார். ஒருநாள் கிருஷ்ணாவுக்கு அவரது இறந்து போன அப்பா, கொல்லியூரில் ஒரு பெரும் பங்களாவை சொத்தாக விட்டு சென்றிருப்பது தெரிய வருகிறது. 

    உடனடியாக நடிகை சோனாவை கல்யாணம் செய்து வைப்பதாக கூறி அப்பாவி பாலாஜி மோகனிடம் 40 லட்சத்தை அடித்துக் கொண்டு காதலி ரூபா மஞ்சரியுடன், கொல்லியூர் போகும் கிருஷ்ணா, அங்கு சரத் எனும் கருணாகரனுடனும், அவரது சகோதரி சரண்யா எனும் ஓவியாவுடனும் சேர்ந்து, அப்பா விட்டுச் சென்ற பாழடைந்த பங்களாவை கையில் இருக்கும் காசில் புதுப்பித்து, அதை அவரது அப்பாவின் ஆசைப்படி பெரும் தங்கும் விடுதியாக்கி துட்டு பார்க்க விழைகிறார். 

    ஆனால் அந்த ஹோட்டலுக்கு வந்து இரவில் தங்குபவர்களை எல்லாம் போட்டு தள்ளுகிறது மோகினி அனஸ்வரா எனும் பேய்! இதுதெரியாமல் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, கருணாகரன், ஓவியா உள்ளிட்டோர் ஒருத்தரை ஒருத்தர் சந்தேகப்பட்டு சண்டை போட்டுக் கொள்வதோடு, பேய் செய்த கொலைகளை எல்லாம் வெளியுலகிற்கு தெரியாமல் புதைத்து போலீஸ்க்கு பயந்து வாழ்கின்றனர். ஒருகட்டத்தில் பேய் இவர்களை போட்டு தள்ளியதா.? அல்லது உண்மை தெரிந்து மோகினி பேயை இவர்கள் விரட்டி அடித்தனரா.? எனும் கதையுடன் காமெடி, கலர்புல் காதல், காமநெடி, மோகினி பேய்க்கு லவ் ப்ளாஷ்பேக், போலீஸ், திரில், திகில் எல்லாம் கலந்து கட்டி வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் யாமிருக்க பயமே என பயமுறுத்தியிருக்கிறார் இயக்குநர் டி.கே.! 

    யாமிருக்க பயம் ஏன்? எனும் தமிழ்க்கடவுள் முருகனின் பேமஸ் வாசகத்தையே யாமிருக்க பயமே எனும் திகில் பேய் படத்தின் டைட்டிலாக்கி செம காமெடியாக த்ரில் கதை சொல்லி முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார் இயக்குநர் டி.கே. எனும் டி.கார்த்திகேயன். சபாஷ்! இயக்குநர் டி.கே. எதிர்பார்த்ததை எள் அளவும் பிசகாமல் நட்சத்திரங்கள் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, காமெடி கருணாகரன், மகாநதி சங்கர், பாலாஜி மோகன், மோகினி அனஸ்வரா, போஸ்வெங்கட், தேவிபிரியா, ரயில் ரவி, நமோ நாராயணா, சோனா, மயில்சாமி, ஆதவ் கண்ணதாசன் உள்ளிட்ட அனைவரும் செய்து அசத்தியிருப்பது யாமிருக்க பயமே படத்தின் பெரும்பலம்! 

    அதிலும் மகாநதி சங்கருடன், கிருஷ்ணாவும், போலி சாமியார் மயில்சாமியுடன் கிருஷ்ணா, கருணாகரன் இருவரும் மல்லுக்கட்டும் இடங்கள் செம காமெடி! நம்பமுடியாத பேய் கதையை, நம்பும் படியாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ராம்மியும், இசையால் மிரட்டியிருக்கும் பிரசாத்.என்-னும் படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கின்றனர். ஒரு சீரியஸ் சீன், ஒரு சிரிப்பு சீன், ஒரு திகில் காட்சி, ஒரு காதல் காட்சி என அழகாக கத்திரி போட்டிருக்கும் படத்தொகுப்பாளர் ஸ்ரீதர் பிரசாத்தின் பங்கும் அளப்பரியது! ஆக மொத்தத்தில், இயக்குநர் டி.கே.இயக்கத்தில், தமிழ் சினிமாவில் புதுமுயற்சியாக வெளிவந்திருக்கும் யாமிருக்க பயமே - நல்ல கதையம்சம் இருக்க பயம் ஏன்? என கேட்க வைத்து வசூலை வாரி குவிக்க இருக்கிறதென்றால் மிகையல்ல!!
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: யாமிருக்க பயமே திரை விமர்சனம் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top