ஹீரோக்களுடன் கேமரா முன்பு நடிப்பதோடு சரி, அதன்பிறகு அவர்களுடன்
எந்தவித நட்பும் வைத்துக்கொள்வதில்லை. காரணம், தவறான கிசுகிசுக்கள் வந்தால் அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்கிறார் அட்டகத்தி நந்திதா. தினமலர் இணையதளத்துக்காக அவர் அளித்த பேட்டி...
எந்தவித நட்பும் வைத்துக்கொள்வதில்லை. காரணம், தவறான கிசுகிசுக்கள் வந்தால் அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்கிறார் அட்டகத்தி நந்திதா. தினமலர் இணையதளத்துக்காக அவர் அளித்த பேட்டி...
* நந்திதாவின் நிஜமான கேரக்டர் என்ன?
ரொம்ப நல்ல பொண்ணு. எந்தவொரு விசயத்தையும் பட்டும் படாமலும் செய்ய மாட்டேன். அதன் வேர் வரை தெரிந்து கொண்டு செயல்படுவேன். அதேசமயம் நான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்கிற பிடிவாத குணம் உண்டு. அப்படி நினைத்ததை சாதிக்கிற வரை தூங்க மாட்டேன். அந்த குணம்தான் சினிமாவில் என்னை படிப்படியாக வளர வைத்திருக்கிறது. இன்னும் வளர்ந்து கொண்டேயிருப்பேன்.நந்திதாவினால் எந்தமாதிரியான மெச்சூரிட்டியான வேடங்களையும் பண்ண முடியும் என்பதை நிரூபித்து சினிமாவில் எனக்கென ஒரு நிலையான இடத்தை பிடிப்பேன்.
* ஆரம்பத்தில் இருந்தே கவர்ச்சி விசயத்தில் அடக்கி வாசிப்பதேன்?
ரசிகர்களின் ரசனைதான் காரணம். எனக்கு தெரிந்தது வரை இப்போதைய ரசிகர்கள் நல்ல பர்பாமென்ஸ் நடிகைகளைத்தான் ரசிக்கிறார்கள். வெறும் கிளாமரை மட்டும் வெளிப்படுத்துபவர்களுக்கு அவர்களின் ஆதரவு இல்லை. அதேசமயம், நான் முழுக்க முழுக்க முக்காடு போட்டுக்கொள்ளவில்லை. நான் ஏற்று நடிக்கிற கதாபாத்திரம் என்ன கேட்கிறதோ அதற்கேற்ற நடிப்பை வெளிப்படுத்துகிறேன். அந்தவகையில், மிதமான கிளாமர் கேட்டாலும் கண்டிப்பாக வெளிப்படுத்துவேன். அதற்காக, கவர்ச்சியை மூலதனமாகக்கொண்டு ஒருபோதும் செயல்படமாட்டேன்.
* கன்னடத்தில் அறிமுகமாகி விட்டு பின்னர் முழுநேர தமிழ் நடிகை ஆனதேன்?
என் தாய்மொழியான கன்னடத்தில் 2008ல் நந்தா லவ்ஸ் நந்திதா என்ற படத்தில்தான் அறிமுகமானேன். ஆனால், அதையடுத்து அங்கு எனக்கு புதிய படங்கள் இல்லை. அதனால் 4 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க முயற்சி எடுத்தபோதுதான் அட்டகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த முதல் படமே வெற்றி பெற்றதால், தமிழில் ராசியான நடிகையாகி தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறேன். அதோடு, எனக்கு பொருத்தமான கேரக்டர்களாக தமிழ் டைரக்டர்கள் தருகிறார்கள். அதனால் எனது நடிப்பும் படத்துக்குப்படம் மெருகேறுவதோடு, ரசிகர்களின் பேவரிட் நடிகையாகி வருகிறேன். அதன்காரணமாகவே கன்னட படங்களில் நடிப்பதைவிட தமிழில் நடிப்பதுதான் எனக்கு பிடித்திருக்கிறது.
* பெரும்பாலும் நீங்கள் நடித்த பல படங்கள் இரண்டு ஹீரோயினி சப்ஜெக்டாகவே உள்ளதே?
அட்டகத்தியில் என்னுடன் ஐஸ்வர்யாவும், எதிர்நீச்சலில் ப்ரியாஆனந்தும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவில் சுவாதியும் நடித்தனர். இதெல்லாமே தானாக அமைந்தது. ஆனால், அப்படி மற்ற நடிகைகளுடன் இணைந்து நான் நடித்த படங்கள் எல்லாமே ஹிட்டடித்துள்ளன. அதனால் டபுள் ஹீரோயினி கதைகளில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன். இப்போதுகூட இடம் பொருள் ஏவல் படத்தில் ஐஸ்வர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறேன். ஆக, அந்த படமும் வெற்றி பெறும் என்பதை இப்போதே என்னால் உறுதியாக சொல்லிவிட முடியும்.
* விஜயசேதுபதியுடன் உங்களுக்கு நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகி வருவதாக கூறப்படுகிறதே?
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் அவருக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரிதான். அந்த மாதிரி கதைகளில்தான் இயல்பாக நடிக்க முடியும். குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண் எப்படி இருப்பாளோ அப்படியே என்னை மாற்றி நடிக்க வைத்தனர். அதேபோல் விஜயசேதுபதியும் அருமையாக நடித்திருந்தார். அதனால்தான் அவருக்கு இணையாக நாமும் நடிக்க வேண்டுமே என்று அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்தேன். அந்தவகையில், அந்த படத்தில் நடித்த குமுதா கேரக்டர், நான் நடித்ததில் என்னை அதிகம் கவர்ந்த வேடம். இப்போதுகூட அவுட்டோர் செல்லும்போது அந்த பெயரை சொல்லித்தான் என்னை அழைக்கிறார்கள்.
* இடம் பொருள் ஏவல் படத்தில் நடிக்க விஜயசேதுபதிதான் உங்களுக்கு சிபாரிசு செய்தாரா?
அப்படியெல்லாம் இல்லை. அந்த படத்தில் முதலில் என்னை நடிக்க வைப்பதாக ஐடியாவே இல்லை. மனீஷா உள்ளிட்ட சில நடிகைகளிடம் பேசி வந்தனர். அவர்கள் செட்டாகாததால் கடைசியில் என்னிடம் கேட்டனர். அவர்கள் கேட்ட தேதியில் கால்சீட் இருந்ததால் ஒத்துக்கொண்டேன். அதோடு விஜயசேதுபதி எனக்கு பரிட்சயமானவர் என்பதோடு, இந்த படத்தில் எனக்கு ஒரு வித்தியாசமான வேடத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சீனுராமசாமி. அதனால் இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாராவில் இருந்து இந்த படத்தில் விஜயசேதுபதியும் நானும் இன்னும் மாறுபட்ட பர்பாமென்ஸை கொடுத்து வருகிறோம். இந்த படத்தில் எங்களை இன்னுமொரு மாறுபட்ட கோணத்தில் பார்க்கலாம்.
* முண்டாசுப்பட்டியில் 1980களில் உருவாகியுள்ள கதையில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
போட்டோ எடுத்தால் ஆயுள் குறைந்து விடும் என்று கிராமங்களில் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஆனால், போட்டோ எடுத்தாலே இறந்து விடுவோம் என்று நினைக்கிற ஒரு கிராமத்தில் உள்ள பெண்ணாக நடிக்கிறேன். அதுமட்டுமின்றி விண்ணில் இருந்து ஒரு எரிகல் பூமியை நோக்கி வருகிறது. அது நாங்கள் வசிக்கும் ஊரில்தான் விழுகிறது என்பது கதையின் முக்கிய லைன். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த ஊர் மக்களின் மனநிலை எப்படியிருக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள். சிட்டியில் பிறந்து வளர்ந்த நான், பக்கா கிராமத்து பெண்ணாக அப்படத்தில் நடித்திருக்கிறேன்.
* நீங்களும், விஷ்ணுவும் அந்த படப்பிடிப்பில் நெருக்கமாக பழகியதாக விஷால் கூறியிருந்தாரே?
அது உண்மையில்லை. நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷால் நடித்து வந்தபோது, அப்படத்தின் நாயகி லட்சுமிமேனனை அவருடன் இணைத்து விஷ்ணு கலாய்த்திருக்கிறார். அதனால அதற்கு பதிலாக இவரை கலாய்கக வேண்டுமென்று நாங்கள் எப்.எம்மில் நேயர்களின் கேள்விக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தபோது, விஷால் போனில் வந்து ஸ்பாட்டில் ரொம்ப நெருக்கமாக பழகுனீங்கன்னு கேள்விப்பட்டேன் என்று ஒரு ஜாலிக்காக கலாய்த்தார். அவர்கள் நண்பர்கள் என்பதால் அதை விஷ்ணுவும் ஜாலியாக எடுத்துக்கொண்டார்.
ஆனால் எனக்குதான் பயமாக இருந்தது. நான் எந்த ஹீரோக்களுடனும் அளவோடுதான் பேசுவேன். அதிக நெருக்கம் வைத்துக்கொள்ளமாட்டேன். காரணம் சினிமாவில் கிசுகிசுக்கள் ரொம்ப எளிதாக பரவி விடும். அந்த வகையில் நடிகர்களுடன் இணைத்து தவறான செய்திகள் வந்தால் அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. அதனால், கிசுகிசுக்களை அலர்ஜியாக நினைக்கும் நான், ஹீரோக்களிடம் தேவையில்லாமல் பேசி அதற்கு வழிவகுப்பதில்லை.
* கிசுகிசுக்கள் வந்தால்தானே பரபரப்பான நடிகையாக முடியும்?
அது மற்றவர்களுக்கு வேண்டுமானால் பப்ளிசிட்டியாக இருக்கலாம். ஆனால் என்னைப்பொறுத்தவரை அப்படியொரு தவறான பப்ளிசிட்டிகளே வேண்டாமென்று நினைக்கிறேன். நல்லவிதமாக நடித்து நல்ல நடிகை என்று அனைவராலும் பேசப்பட்டாலும் போதுமானது. வேகமாக வளர்வதை விட, ஒவ்வொரு படியாக வளரவே ஆசைப்படுகிறேன்.
* லட்சுமிமேனன் பாணியில் லிப்லாக் காட்சிகளில் எப்போது நடிப்பீர்கள்?
ஒருநாளும் அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன். அதேபோல் கிளாமரில் லிமிட் தாண்ட மாட்டேன். முத்தக்காட்சியில் நடித்தால் கூடுதல் சம்பளம் தருகிறேன் என்று ஆசை வார்த்தை காட்டினாலும் அதற்கு மசியமாட்டேன். எனக்கு தேவை என் திறமைக்கு தீனி போடும் நல்ல வேடங்கள். அந்த மாதிரி வேடங்களில் நடித்து விருதுகள் பெற வேண்டும் என்பதே எனது நோக்கம் என்கிறார் நந்திதா