இலங்கைத் தீவின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் சுன்னாகமும் ஒன்று . குடாநாட்டின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த நகர் விவசாய செயற்பாடுகளுக்கு பெயர்பெற்றது. இன்று வரைக்கும் விவசாயம் என்றால் சுன்னாகம் என்றே கூறும் அளவிற்கு இன்று இந்த நகர் எல்லோரும் உற்று பார்க்கும் நகரமாக மாறி வருகின்றது. கிணறுகளில் எண்ணை படிமங்களின் கசிவே இதற்கு காரணமாகும்.
2009ம் ஆண்டு முதல் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையத்தில் நொதேன் பவர் கம்பனி (பிறைவற்) லிமிட்டட் என்ற டீசலில் இயங்கும் தனியார் நிறுவனம் தன் மின் பிறப்பாக்கிகளை பொருத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றது. இந்த மின் பிறப்பாக்கிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு ஒயில்கள் பாதுகாப்பற்ற முறையில் வெறுமனவே நிலத்தில் கிடங்கு வெட்டி அதற்குள் விடப்படுகிறது. இதன் காரணமாக அந்த பிரதேசத்தை சூழ உள்ள கிணறுகளில் எண்ணை கசிவுகள் ஏற்பட்டிருக்கின்றது.
2012ம் ஆண்டு இவ்வாறான இரண்டு கிணறுகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. ஆனால் இன்று ஐந்து கிலோமீற்றர் சுற்றளவில் உள்ள கிணறுகளுக்கு கழிவு எண்ணெய் படிமங்களின் கசிவால் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன.
2013 முதல் பாராளுமன்றச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட உதுறு ஜெனனி என்ற நிறுவனமும் மேற்கூறியது போல இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. தற்போது யாழ்குடா நாட்டிற்கான மின்சார விநியோகம் நீர் மின்சாரத்தில் இயங்கும் தேசிய மின்வலையமைப்பிலிருந்தே வழங்கப்படுகின்றது. மேற்கூறிய இரு நிறுவனங்களினாலும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மின் அழுத்த சீராக்கலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.
நொதேன் பவர் கம்பனி (பிறைவற்) லிமிட்டட் நிறுவனமும், உதுறு ஜெனனி நிறுவனமும் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது சுற்றாடல் அதிகாரசபை சட்டத்திற்கேற்ப சுற்றாடல் பாதிப்பு தொடர்பான மதிப்பீடுகள் எவற்றையும் செய்யாததோடு பிரதேசசபைகள் சட்டத்திற்கேற்ப வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் அனுமதியினையும் பெறவில்லை.
சுன்னாகம் பகுதியில் உள்ள கிணறுகளில் பரவி வரும் கழிவு ஒயில் கலப்பு தற்போது கட்டுவன் பகுதியில் உள்ள கிணறுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் தற்போது பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சுத்தமான நீர் இல்லாமையையினால் பல்வேறுபட்ட பிரச்சனைகள் எதிர்நோக்கவேண்டிய நிலையில் உள்ளன.
கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பதனால் பொது மக்களுடைய வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அவர்களுடைய விவசாய நடவடிக்கைகளும் ஏனைய செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நீரைப் பருகுவதால் பாரிய நோய்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது. குறிப்பாக நுரையீரல்,இரத்தப் புற்றுநோய்,சிறுநீரக செயலிழப்பு, வலிப்பு போன்ற பல குணப்படுத்த முடியாத நோய்கள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மக்களின் செயற்பாடு
இப் பிரதேச மக்கள் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் இங்கு இருக்கின்ற கிணறுகளின் எண்ணெய் படிமங்களை அறிந்து சுன்னாகப் பிரதேசத்தில் எண்ணெய்வளம் இருப்பதாக நம்பினர். அதன் பின்னர் 2014ம் ஆண்டு ஆடி மாதமளவில் இப்பகுதி விவசாயிகள் தமது கிணற்று நீரை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மூலம் பரிசோதனை செய்து பார்த்தபோது அப்பகுதி மக்களினதும் சுகாதாரத்தை உடல் நலத்தையும் பாதிக்க கூடிய வகையிலும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத வகையிலும் கிணறுகளில் எண்ணை படிமங்கள் கலந்திருப்பதைக் கண்டனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த தனியார் மின்உற்பத்தி நிறுவனத்தை தடை செய்யக்கோரி 2014 நவம்பர் 11ம் திகதி பதினொரு விவசாயிகள் குறித்த நிறுவனத்திற்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலை மேற் கொண்டனர். இதுவரை காலமும் இந்த வழக்கிற்கு எந்த தீர்வும் இல்லாமல் காலம் தாழ்த்தப்பட்டுக்கொண்டே செல்கின்றது.
குடிநீர் பிரச்சினை
மக்கள் அதிகமாக வாழும் இப்பகுதியில் பிரதேச சபையினால் வழங்கப்படும் குடிநீர் போதுமானதளவாகவில்லை. எனவே மக்கள் குடிநீரை இலகுவாகப் பெறுவதற்கான நடவடிக்கைகளை பிரதேசசபை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
வடமாகாண சபையின் செயற்பாடு
கழிவு எண்ணை நாளுக்கு நாள் இப்பகுதி நிலத்தடி நீரினை ஆக்கிரமித்து வருகிறது. ஆனால் வடமாகாண சபையின் செயற்பாடுகளானது வெறுமனவே அறிக்கை வடிவுகளிலும் ஆய்வு செய்வதாகவுமே இருக்கின்றன. மாகாணசபையில் இருக்கின்ற அமைச்சர்கள்,உறுப்பினர்களின் வாதப்பிரதி வாதங்களும், அறிக்கைகளும் குறித்த அனர்த்தத்தை தடுப்பதாக அமையவில்லை.
சுன்னாகத்தில் ஆரம்பித்த எண்ணைப்பரவல் சூராவத்தை, ஏழாலை ஊடாக தற்போது கட்டுவன் வரை பரவியுள்ளது. இந் நிலையில் குறித்த தனியார் மின் உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, சுகாதாரத் திணைக்களங்களின் அறிக்கைகள் குறித்த நிறுவனத்தை உடனடியாகத் தடைசெய்யாமல் நஸ்டஈட்டினைக் கோருவதாக இருப்பது மக்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தீர்வு யோசனை
தற்போது இங்கு பரவிவரும் அனர்த்தத்திற்கு உரிய தீர்வு குறித்த நிறுவனங்களை உடனடியாக மூடுவதே! குடாநாட்டின் மின்சாரத்தேவைக்கு தேசிய வலையமைப்பிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தலாம். அதுபோதாவிட்டால் சூரியமின்சாரம்,காற்று மினசாரம்,உயிரியல் மின்சாரம் என்பவற்றை பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்யலாம்.
யாழ்குடாநாட்டில் வளமான நிலங்களும்,நன்னீர்ப்பிரதேசங்களும் மிகவும் குறைவு. சுன்னாகம் பிரதேசம் அமைந்துள்ளனவலி.வடக்குப்பிரதேசம் இவ்வளங்களையுடையது.இதன் ஒரு பகுதியை உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவம் ஆக்கரமித்து நிற்கின்றது.மீதிப்பகுதிக்கு தற்போது நஞ்சூட்டப்படுகின்றது.சுன்னாகத்திலிருந்துதான் முன்னர் காரை நகர் பிரதேசத்திற்கு குடிநீர் அனுப்பப்பட்டது.மற்றவர்களுக்கு நீரை வழங்கிய மக்கள் தற்போது தமக்கு நீரில்லாமல் தவிக்கின்றனர்.
இந்த எண்ணைய் படிவ விவகாரம் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியா? என சந்தேகிக்கத்தோன்றுகின்றது. தமது இருப்பை இழக்கும் மக்கள் இவ் பிரதேசங்களிலிருந்து இடம்பெயருவர் என பேரினவாத சக்திகள் நினைக்கலாம். இது உண்மையானால் தமிழ்த் தேசிய ஆதாரத்தூண்களில் ஒன்றான பொருளாதாரத்தை சிதைக்கும் நகர்வுகளில் ஒரு பரிணாம வளர்ச்சியை பேரின வாதசக்திகள் பெற்றிருக்கின்றனர் என்றே கூறவேண்டும்.
ஆபத்து தலைக்குமேல் வந்து விட்டது இனிமேலும் நாம் அக்கறையற்றிருந்தால் எல்லோரும் சேர்ந்து அழிய வேண்டியதுதான்.