எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்களில் யார் வெற்றி பெற்றாலும் எதிர்வரும் ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நடப்பு நாடாளுமன்றம் ஏப்ரல் மாத இறுதியில் கலைக்கப்பட உள்ளது.ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றால், நாடாளுமன்றத்தை ஏப்ரல் மாதம் கலைக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிக்கும் புதியவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வேண்டுமாயின் அவர்கள் 5 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்திருக்க வேண்டும்.இதனடிப்படையில் 5 வருடம் எதிர்வரும் ஏப்ரல் மாதமே பூர்த்தியாகிறது.இதனால், முன்கூட்டியே நாடாளுமன்றத்தை கலைக்கும் எண்ணம் இல்லை என அந்த பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவானால், தற்போதைய நாடாளுமன்றத்தை அரசியல் அமைப்புச் சைபயாக மாற்றி, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்து, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக ஏற்கனவே வாக்குறுதி வழங்கியுள்ளார்.இதனால், ஏப்ரல் மாதம் வரை நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என்பது எதிர்க்கட்சித் தரப்பில் இருந்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.