முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் 1500 ஏக்கர் காணிகளை மகாவலி அபிவிருத்தி திட்டம் என்னும் போர்வையில் அபகரிக்கப்பட்டு மாற்று சமுகத்தினருக்கு மாகாண காணி ஆணையாளரினால் வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி யுத்தகாலத்தில் தமது காணிகளை அல்லது ஆவணங்களை இழந்த மக்களுக்கு தீர்வை பெற்றுத்தருவதற்காக நடைபெறும் 2 வருட வேலைத்திட்டத்தின் இறுதிமாதமான இம்மாதத்தில் இது தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் தமிழர்களுக்கு பாதகமான இரண்டு முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு மாகாண காணி ஆணையாளர் பொ. தயானந்தன் பிரதேச செயலாளர்களிற்கு உத்தரவிட்டார்.
குறிப்பாக கரைதுறைப்பற்று கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழருக்குச் சொந்தமான 1500 ஏக்கர் வயல் காணிகள் மகாவலி அபிவிருத்தி திட்டம் என்னும் போர்வையில் அபகரிக்கப்பட்டு மாற்று சமுகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்காணிகளுக்காக 1980 இற்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழர்களிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டதுக்கு ஆதாரமாக காணி உத்தரவுப்பத்திரத்தை வைத்திருக்கின்றனர்.
அக்காணிகளை மீட்டுத்தருமாறு கோரி சுமார் 600 குடும்பங்கள் தமது காணிப்பிரச்சனை தொடர்பாக விண்ணப்பித்திருக்கின்றனர். இதற்கு எதுவித தீர்வும் அம்மக்களிற்கு பெற்றுக்கொடுக்கப்படாமல்; குறித்த பிரச்சனை தீர்வுகாணப்பட்டதாக அறிக்கையை மாற்றியமைக்க வட மாகாண காணி ஆணையாளர் பொ. தயானந்தன் பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டார்.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணியற்றவர்களாக பதிவு செய்த 3000 தமிழ்மக்களின் பிரச்சனைக்கும் தீர்வுகாணப்பட்டதாக அறிக்கையை மாற்றியமைக்கவும் இவரால் சகல பிரதேச செயலாளர்களிற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ் அனைத்து அறிக்கைகளும் இவ்வருட இறுதியில் காணி அமைச்சால் ஜக்கிய நாடுகள் சபைக்கு சமர்பிக்கப்படவுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
600 தமிழர்களின் பூர்வீக காணி உரித்தை அவர்களின் முகவரியை அழித்தொழிப்பதற்கு தயானந்தனிற்கு அதிகாரம் வழங்கியது யார்? மன்னார் மாவட்டத்தில் 2000 ஏக்கர் அரச வன ஒதுக்கை சட்டத்திற்கு புறம்பா வழங்க உடந்தையாக இருந்தவரும் இவரே.
சம்பந்தப்பட்டோர் , வட மாகாண காணி ஆணையாளர் பொ. தயானந்தனின் இச்செயற்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள். இவ்வரலாற்றுத்தவறு இடம்பெறாதிருக்க இவ்விடயத்தில் உடனடியாக செயற்படவேண்டியது காலத்தின் அவசியமாகும்