போரில் பங்கெடுத்த படையினரின் விபரங்களைத் தரக்கோரி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. அனுராதபுரவில் நேற்று மாலை தனது முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
”அதிபர் தேர்தலுக்குப் பின்னர், அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பை நடத்த தயார்.நாட்டு மக்கள் கோரினால் என்னால் அரசியலமைப்பை மாற்றமுடியும். ஆனால் அதற்கு பொதுவாக்கெடுப்பின் மூலம் மக்களின் ஆணை தேவை.போர் முடிந்து விட்டாலும் விடுதலைப் புலிகள் இன்னமும் செயற்படுகின்றனர். அவர்களின் வலையமைப்புகள் வெளிநாடுகளில் செயற்படுகின்றன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பங்கெடுத்த படையினர் மற்றும் அவர்களின் பதவிநிலை குறித்த விபரங்களைத் தரக் கோரி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.போர்க்குற்ற்றச்சாட்டுகளை சுமத்தி படையினரை ஹேக்கில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்கு சில சக்திகள் அழுத்தம் கொடுக்கின்றன.
ஆனால், நான் பதவியில் இருக்கும் வரைக்கும் அதனைஅனுமதிக்கமாட்டேன். எமது படையினர் பொதுமக்கள்எவரையும் கொல்லவில்லை.இராணுவத் தலைமைகளை தண்டிப்பதற்கு அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி முயற்சிக்கிறது.
போர் வெற்றி விவகாரத்தில் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் மண்டியிடாது.என் கையில் இரத்தம் படியவில்லை. படிந்தால் கையை வெட்டி வீசிவிடுவேன்.எந்தவொரு வெளிநாட்டு சக்தியும், நாட்டில் அரசியல் ரீதியான குழப்பத்தை ஏற்படுத்த ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்.
எங்கள் எங்கள் செயலாளரை எடுத்தால் நாங்களும் உங்கள் செயலாளரை எடுப்போம்.திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு நாம் ஒன்றும் கொடுக்கவில்லை. இரண்டு பேரும் அமர்ந்து கோப்பி ஒன்று தான் குடித்தோம்.
நாங்கள் நினைத்தால் ரணிலையும் எங்கள் பக்கத்துக்கு இழுக்க முடியும். ஒரு கோப்பை தேனீர் கொடுத்தால் ரணிலும் எங்களோடு இணைந்து விடுவார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.சிறிலங்கா அதிபர் தனது உரையில் வெளிநாட்டுச்சதி, போர்க்குற்றம் குறித்தே முக்கிய கவனம் செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.