தேர்தல் விதிமுறைகளை மீறி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகச் செயற்படும் அரசாங்க மற்றும் இராணுவ, காவல்துறை அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் இதுகுறித்து தகவல் வெளியிட்ட அவர்,
“தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும், தேர்தல் விதிமுறைகளை மீறும், ஆளும்கட்சிக்கு சார்பாக பரப்புரைகளில் ஈடுபடும் அரசாங்க அதிகாரிகளின் விபரங்களைப் பதிவு செய்யும், கருப்பு பதிவேடு (Black Book) ஒன்றை திறந்துள்ளோம்.
அதில், தேர்தல் விதிகளை மீறும் அரசாங்க அதிகாரிகள் பற்றிய விபரங்களைப் பதிவு செய்து, வாராந்தம். ஒரு செய்திக்கொத்தாக தயாரித்து வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு அனுப்பவுள்ளோம்.அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் வெளிநாடுகளில் நுழைவிசைவு கிடைக்காமல் தடுப்பதே எமது நோக்கம்.அவர்கள் மட்டுமன்றி அவர்களின் பிள்ளைகள் கூட வெளிநாடுகளில் கல்வி கற்கச் செல்ல முடியாத நிலை ஏற்படும்.
அமெரிக்காவின் லெஹி சட்டத்தினால், சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் ஏற்கனவே பயணக் கட்டுப்பாடுகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவப் படைப்பிரிவுகளின் தளபதிகளை கருப்புப்பட்டியலில் சேர்க்கும் இந்தச் சட்டத்தினால் பல சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்க நுழைவிசைவு மறுக்கப்பட்டுள்ளது.
வரும் 18ம் நாள் மூத்த சிவில் சேவை அதிகாரிகளை கொழும்புக்கு அழைத்து, சிறிலங்கா அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு வெள்ளையடிக்கும் முயற்சியில் திறைசேரிச் செயலர் புஞ்சிபண்டா ஜெயசுந்தர ஈடுபட்டுள்ளார்.ஜெயசுந்தரவின் இந்த நடவடிக்கை தேர்தல் சட்டங்களுக்கு முரணானது.
பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுவதற்கு சட்டத்தில் இடமில்லை. ஆனால் அவர் அந்தச் சட்டத்தை மீறிவருகிறார்.சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு சார்பாக செயற்பட்டு, தேர்தல் விதிமுறைகளை மீறுகின்ற இராணுவ, அரசாங்க அதிகாரிகளின் விபரங்களை நாம் வாராந்தம் பகிரங்கப்படுத்துவோம்.
ஏற்கனவே சில அமைச்சுக்களின் செயலர்கள், இராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் எம்மால் இனங்காணப்பட்டுள்ளனர்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.