வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் வலையமைப்புகளால் நாட்டுக்கு இன்னமும் ஆபத்து உள்ளதாக, மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாணந்துறையில் நேற்றுமாலை இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,“சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் வலையமைப்புகளால் நாட்டுக்கு இன்னமும் ஆபத்து உள்ளது.
வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தமக்கென சொந்தமாக ஒரு நாடாளுமன்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.அவர்கள் சிறிலங்காவின் நலன்களுக்கு எதிராகப் பணியாற்றுகின்றனர்.
வெளிநாடுகளில் இயங்கும் இத்தகைய குழுக்களின் நடவடிக்கைகள் குறித்தும், அவர்களுக்கு ஆதரவாக உள்நாட்டில் செயற்படுவோர் குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டும்.விடுதலைப் புலிகள் சிறிலங்காவில் மீண்டும் தலையெடுக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கமும், மக்களும் தொடர்ந்து தீவிரவாதத்துக்கு எதிராக போராட வேண்டும்.
தேர்தலுக்குப் பின்னரும், போரில் பெறப்பட்ட வெற்றியை நிலைப்படுத்திக் கொள்வதற்கு, வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.