தம்மைப் பதவியிலிருந்து இறக்கி சர்வதேச யுத்த நீதிமன்றதுக்குக் கொண்டு செல்லும் சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைக்கு ஹர்சன, விஜேசிங்க போன்றோர் தூண்டுகோளாக செயற்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.தாம் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை இதனைச் செய்ய முடியாது என்பதால் தம்மைப் பதவியிலிருந்து இறக்கி சர்வதேச யுத்த நீதிமன்றத்தில் ஒப்படைத்து தண்டனை பெற்றுக்கொடுக்க சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை இழந்திருந்த மக்களுக்கு அபயமளித்ததற்கு எனக்குப் பெற்றுக்கொடுக்கவுள்ள பிரதிபலன் இதுதானா என நான் சம்பந்தப்பட்ட சூழ்ச்சியாளர்களிடம் கேட்க விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அல்ஜசீரா தொலைக்காட்சி என்னை சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் கொண்டு போவது பற்றி தகவல்களை வெளியிட்டுள்ளது. என்னைத் தோல்வியுறச் செய்து யுத்தக் குற்றச்சாட்டின் பேரில் மின்சாரக் கதிரைக்கு அனுப்புவதே அதன் நோக்கம்.
ஜனாதிபதியாக நான் பதவி வகிக்கும் வரை என்னை சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடியாத காரணத்தால் இத்தகைய சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. “தோல்வியுறச் செய்துதாருங்கள் நாம் அவரைக் கொண்டு சென்று சர்வதேச யுத்த நீதிமன்றத்தில் நிறுத்துவோம்” என்றே சம்பந்தப்பட்டவர்கள் கோருகின்றனர். இதற்கு மறைமுகமாக தூண்டிவிடும் செயற்பாடுகளில் ஹர்சவும் விஜேசிங்கவும் செயற்படுகின்றனர். இதுவே தற்போதைய நிலமை.
எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை இழந்திருந்த மக்களுக்கு நாம் உயிர்தானம் வழங்கியதற்கு எமக்குக் கிடைக்கும் பிரதிபலன் இதுதான். நாடு பற்றி சிந்திக்காத மக்கள் பற்றி சிந்திக்காதவர்களே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
தாய் நாடு மீது நம்பிக்கைகொண்டு தாய் நாட்டின் மீதான உணர்வைக் கொண்டிருப்பதே எம் ஒவ்வொருவரதும் கடமையாக வேண்டும். நாம் எதிர்கால சந்ததி மட்டுமன்றி பிறக்கப்போகும் பிள்ளைகளுக்காகவுமே இந்த நாட்டை கட்டியெழுப்பி வருகிறோம். இது முக்கியமாகும். இல்லாவிட்டால் இன்று உள்ளதை சாப்பிட்டுவிட்டு அன்றாடங்காய்ச்சிகள் போல் செயற்படுவதல்ல. அவ்வாறு சிந்திக்கும் சமூகம் எமக்குத் தேவையில்லை.
நாம் மக்களின் மேம்பாடு தொடர்பில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகையில் எமக்கெதிராகக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அந்த குற்றச்சாட்டுக்களுக்குப் பயந்து நாம் செயற்படாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை மக்கள் உணரவேண்டும்.
கடந்த காலங்களில் யுத்தம் இடம்பெற்றது பெருமளவு நிதி செலவானது பெறுமதியான மனித உயிர்கள் இழக்கப்பட்டன. எனினும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. நாட்டில் நிலையான அரசாங்கம் இல்லாவிட்டால் தொடர்ந்து அரசு மாறி மாறி வந்தால் அபிவிருத்தியை முன்னெடுப்பது கடினம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.