சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிந்த பின்னர், இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை தாமே வடக்குமாகாணசபையில் முன்மொழிந்து விவாதிக்க ஏற்பாடு செய்வதாக, வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற வடக்கு மாகாணசபையின் அமர்வின்போது, இந்த தீர்மானம் குறித்து விவாதம் எழுந்தது.
கடந்த வாரம் நடந்த முந்திய அமர்வின் போது, இனப்படுகொலை குறித்த தமது தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் மறுப்புத் தெரிவித்ததையடுத்து, மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் செங்கோலைத் தூக்கி வீசியிருந்தார்.இதனால் செங்கோல் உடைந்தது.
இந்த விவகாரம் குறித்து நேற்றைய அமர்வின்போது உறுப்பினர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.அதையடுத்து செங்கோலை வீசியெறிந்த சம்பவத்துக்காக சிவாஜிலிங்கம் கவலை தெரிவிக்க வேண்டும் என்றும், செங்கோலைப் பழுதுபார்ப்பதற்கான செலவை வழங்க வேண்டும் என்றும் அவைத்தலைவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் சிவாஜிலிங்கம் அந்தச் சம்பவத்துக்கு தாம் கவலை வெளியிடப் போவதில்லை என்றும், அதற்காக தனது பதவி பறிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்றும் பதிலளித்தார்.
இந்த விவகாரத்தின் போதே, அடுத்தமாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்குப் பின்னர் தாமே இனப்படுகொலை குறித்த தீர்மானத்தை அவையில் முன்மொழிந்து விவாதிக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.