காணி சுவீகரிப்புக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம் - TK Copy காணி சுவீகரிப்புக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம் - TK Copy

  • Latest News

    காணி சுவீகரிப்புக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்

    மிருசுவில் பகுதியில் படை முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிப்புக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம்.


     மிருசுவில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சுமார் 52 ஏக்கர் தென்னங்காணியை பலவந்தமாகக் கையகப்படுத்திய பின்னர், அதில் 52 ஆவது படையணியின் தலைமையகத்தை  கட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

     மனுவில் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, 52 ஆவது பிரிவின்  கட்டளைத் தளபதி அனுர சுபசிங்க, காணி அமைச்சர், காணி சுவீகரிப்பு அதிகாரி ஆகியோரை எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடவும் நீதிமன்றம் பணித்தது.  

     மேற்படி, 52ஆவது பிரிவில் அமைக்கப்பட்டுள்ள 52 ஏக்கர் நிலமும் தனித் தென்னம் தோட்டக் காணியாக இருந்தது. ஒரு தாய்க்கும் நான்கு மகள்மாருக்கும் அது சொந்தமானது.   அந்தக் காணிக்குள் புகுந்த படையினர் அங்கிருந்த தென்னம் தோட்டத்தை அழித்துவிட்டு அங்கு படையணியின் தலைமையகத்தை அமைத்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.   

    தற்போது அந்தக் காணியைச் சுவீகரிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் அரசுத் தரப்பால் ஆரம்பிக்கப்பட்டமையை அடுத்து காணி உரிமையாளர்கள் அதனை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் மனு செய்திருக்கின்றார்கள்.   பொதுத் தேவைக்காகத் தனியார் காணிகளை அரசு சுவீகரிக்க முடியும் என்ற சட்ட ஏற்பாட்டை மேற்கோள் காட்டியே இந்தச் சுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.   

    இந்த மனு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்றைய தினம் மேன்முறையீட்டு தலைமை நீதியரசர் விஜித மலகொட, நீதியரசர் டிலிப் நவாஸ் ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.   மனுதாரர் தரப்பில் சட்டத்தரணிகள் கே.சயந்தன், லூயி கணேசநாதன் ஆகியோரின் அனுசரணையுடன் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி வாதாடினார்.   

    'பொதுத் தேவைகளுக்கு தனியார் காணியைச் சுவீகரிக்கலாம்' என்றாலும் இராணுவத்துக்குத் தேவையான ஒன்றை 'பொதுத் தேவை' என அர்த்தப்படுத்த முடியாது என்று அவர் விளக்கினார்.   அதனைச் செவிமடுத்த நீதிமன்றம், மனுவை விசாரணைக்கு ஏற்று, எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டது.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: காணி சுவீகரிப்புக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top