அரசியல் யாப்புக்கு முரணான வகையில் இராணுவத்தின் காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு துணைபோகும் வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்ய வேண்டும் என வடக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
வடக்கு மாகாண சபையின் 21 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது உறுப்பினர் சிவமோகனால் குறித்த பிரேரணை சபைக்கு முன்மொழியப்பட்டது. அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் யாப்புக்கு முரணாக இராணுவத்தின் காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு துணைபோன மத்திய அரசின் 1882/ 6ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்ய வேண்டும்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலர்பிரிவு மக்களை தற்காலிகமாக இடம்பெயரச் செய்து வவுனியா செட்டிகுளத்தில் முட்கம்பி முகாம்களில் அடைத்துவிட்டு இராணுவம் தன்னிச்சையாக மக்களின் பூர்வீக காணிகளை கபளீகரம் செய்தது. எனினும் மீண்டும் மக்கள் குடியமர்ந்த போதும் பொதுமக்களுக்கு சொந்தமான புதுக்குடியிருப்பு கிழக்கு கிராமசேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட 3.1363 ஹெக்டேயர் காணி இராணுவத்தின் ஆயுதமுனைக் கட்டுப்பாட்டில் எவரும் செல்லாதவகையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல மேலும் பல காணிகள் விஸ்வமடு , தொட்டியடி , சுதந்திரபுரம் , கிளிநொச்சி காடு ஆகிய பிரதேசங்களிலும் அபகரிக்கப்பட்டுள்ளன. எனவே 30.09.2014 திகதியிடப்பட்ட 1882/6ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலை அரசியலமைப்புக்கு முரணான காணி அபகரிப்பு நடவடிக்கை என பின்வரும் காரணங்களை மேற்கோள்காட்டி இச்சபை மத்திய அரசை ரத்துச் செய்யக் கோருகின்றது. ஆயுதமுனையில் இராணுவத்தினர் அத்துமீறி மக்களின் காணிகளுக்குள் மக்கள் இல்லலாத நேரம் புகுந்து கொண்டமை ஜனநாயகமற்ற அடாவடிச் செயலாகும்.
காணி அபகரிப்புக்கு என ஒரு அதிகாரியை இட்டு மக்களின் கருத்து அறியப்படாது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை ஏற்கக்கூடியதல்ல. மக்கள் நேரடியாக ஒருதடவை பாரிய போராட்டம் ஒன்றை நடாத்தி பிரதேச செயலருக்கும், ஜனாதிபதிக்கும் மகஜர் கையளித்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது தவறாகும். காணி அபகரிப்பிற்கு முன் வடக்கு மாகாண காணி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சரிடம் விதப்புரை பெற்றிருக்க வேண்டும். அந்த நடவடிக்கை அங்கு கடைப்பிடிக்கவில்லை. மேலும் காணி உத்தியோகத்தரோ பிரதேச செயலாளரோ காணி ஆணையாளரோ வடக்கு மாகாண சபைக்கு சிபார்சு செய்து தெரிவிக்காது நேரடியாக செயற்பட்டிருந்தால் அரசியல் யாப்புக்கும் சட்டத்திற்கும் முரணானதாகையால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக வடக்கு மாகாண காணி அமைச்சை ஒரு நேரடி விசாரணை செய்து தெரியப்படுத்துமாறு இச் சபை கோருகின்றது என்றார்.
குறித்த விடயம் அவசர ஒத்திவைப்பு வேளைப்பிரேரணையாக உறுப்பினர் சிவமோகனால் கொண்டுவரப்பட்ட நிலையில் சபையில் பிரேரணையாக மாற்றப்பட்டு உறுப்பினர் ரவிகரனால் வழிமொழியப்பட்டமை குறிப்பிடத்தகக்து.
திட்டமிட்டே மக்களின் காணிகள் சுவீகரிப்பு- ரவி
தமிழ் மக்களுடைய காணிகள் திட்டமிடப்பட்டே சுவீகரிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பு வர்த்தமானியில் உள்ளது போல எல்லைகளும் சரியான முறையில் குறிப்பிடப்படவில்லை. எனவே தீர்வு ஒன்றினைப் பெற்றுக்கொள்ள சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
காணி சுவீகரிப்புக்கு எதிராக மாகாண சபை சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்-சிவாஜிலிங்கம்
தற்போது தாயகப்பகுதியில் பரவலாக காணி சுவீகரிப்பு இடம்பெற்று வருகின்றது. நாங்கள் தடுப்பதும் திருட்டுத்தனமாக கொழும்பில் இருந்து வரும் நிலஅளவையாளர்கள் அளவீடுகளை மேற்கொண்டும் செல்கின்றனர். எனவே காணி சுவீகரிப்புக்கு எதிராக வடக்கு மாகாண சபை சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கமைய மாவட்ட நீதிமன்றங்களிலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். எவர் ஆட்சிக்கு வந்தாலும் காணி சுவீகரிப்பையே செய்வார்கள். ஆட்சிக்கு வருபவர்களால் எமக்கு விடிவு வரப்போவதில்லை. எங்கள் கையே எமக்கு உதவி என்று செயற்படவேண்டும் என்றார்..
அரசியல் ரீதியாகவே காணி விடயத்திற்கு தீர்வு பெறலாம்; சீ.எம் காணி சுவீகரிப்பு தொடர்பில் எமக்கு இருக்கும் மனோநிலையினை வெளிப்படுத்துவதில் எனக்கு எதுவித மாற்றுக் கருத்தும் இல்லை எனினும் பயன்கிடைக்குமா என்றுதான் நாம் பார்க்கவேண்டும். வழக்குகளைப் போடுவதால் தீர்வு கிடைத்துவிடாது. இது அரசியல் சார்ந்த பிரச்சினை அரசியல் ரீதியாகவே தீர்வு பெற்றுக்கொள்வது தான் நல்லது.