அரசாங்கத்திற்கு தோல்வி பீதி ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இதனை ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் வெற்றியீட்டுவேன் என கூறி வந்த ஜனாதிபதி, தோற்றாலும் தாமே ஜனாதிபதி எனக் கூறும் அளவிற்கு பீதியடைந்துள்ளார். சர்வாதிகாரத்தை தோற்கடித்து ஜனநாயகத்தை வெற்றியீட்டச் செய்வோம் என்ற தொனிப்பொருளில் நேற்று பிலியந்தலையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தோற்றாலும் இரண்டாண்டு ஜனாதிபதி மஹிந்த ஆட்சி செய்ய முடியும் என்ற புதிய தர்க்கம் கொண்டு வரப்பட்டுள்ளது.இது தோல்வி தொடர்பிலான பீதியின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்து மஹிந்த ஆட்சி செய்தால், வெற்றியீட்டியவர் வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பாரா?தேர்தல் தோல்வியின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டும்.அவ்வாறு வெளியேறாவிட்டால், ஜனாதிபதியை வெளியேற்ற ஜே.வி.பி சகல வழிகளிலும் போராட்டங்களை முன்னெடுக்கும்.
தேர்தல் ஒன்றுக்காக அதிகம் செலவிடப்படும் சந்தர்ப்பம் இதுவாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கட் அவுட்கள் மட்டும் 4000 மில்லியன் ரூபாவிற்கு அச்சிடப்பட்டுள்ளது.ஏனையவற்றுக்கு எவ்வளவு ரூபா செலவிடப்படும் என்பதனை புரிந்து கொள்ள முடியும்.
ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. போட்டியிடவில்லை என்ற போதிலும், ஜனாதிபதி மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் முனைப்புகளில் ஈடுபட்டுள்ளது.தேர்தல் பிரச்சாரத்திற்காக எவ்வாறு இவ்வளவு பணம் கிடைக்கப் பெற்றது, தொடர்ந்தும் களவாட அனுமதிக்க முடியுமா?
தவறுதலாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த தேர்தலிலும் வெற்றியீட்டினால் நாட்டில் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். நாட்டையும் நாட்டு மக்களையும் ஜனாதிபதி அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்கின்றார்.
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த வெற்றியீட்டினால் எங்களது எதிர்காலம் இருள் சூழ்ந்திருக்கும் என்றால் மக்கள் சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டுமென அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்