வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஆளுநர் செயலகத்திற்கான நிதி ஒதுக்கீடு அவைத் தலைவரினால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் அலுவலகம், முதலமைச்சர் அலுவலகம் மற்றும் பிரதம செயலாளர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டு முன்மொழிவு பிரேரணைகள் இன்று வடமாகானசபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
மதிய போசன இடை வேளையினை அடுத்து இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போது ஆளுநர் செயலகத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஆளுநர் அலுவலகத்தின் செயலாளர் அவைக்கு சமுகமளிக்காமையினால் ஒத்திவைக்கப்பட்டது.அதனையடுத்து மாகாண பேரவைச் செயலகத்தினுடைய நிதி ஒதுக்கீடு விவாத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாதப்பிரதிவாதங்களுக்கு அடுத்து அங்கிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆளுநரின் செயலாளர் வருகைதந்ததையடுத்து மீண்டும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது ஆளுநர் செயலகத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆளும் கட்சியினர் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டினர்.
இதனையடுத்து ஆளும்கட்சி உறுப்பினர் சிவாஜிலிங்கம் குறித்த சபையில் விவாதம் வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார் அதனை உறுப்பினர் அனந்தி வழிமொழிந்தார்.
இருப்பினும் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவைத்தலைவர் வாக்கெடுப்புக்கு விடமுடியாது என கூறி நிபந்தனையுடன் ஆளுநர் செயலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை இந்த சபை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.