போர் வெற்றிக்கு யார் காரணம் என்பது படையினருக்கு தெரியும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.யாபகூவவில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சி, இராணுவத்தை விட்டு தப்பிச் சென்ற தம்பி போரை வெற்றி கொண்டதாக சொல்லப்படுகின்றது.யார் உண்மையில் போரை செய்தார்கள் என்பது படையினருக்குத்தான் தெரியும்.
5000 படையினர் உயிரிழந்தனர்,7000 படையினர் ஊனமுற்றுள்ளதுடன் 27000 படையினர் காயமடைந்தனர்.இன்று சொல்கின்றார்கள் மீண்டும் இந்த நாடு புலிகளிடம் செல்லுமாம். அனைத்து புலிகளும் ஆட்சியாளரின் ஆடைக்குள்ளே பதுங்கியிருக்கின்றனர்.
போர்க் குற்றச் செயல் குறித்த மின்சார நாற்காலியில் தண்டனை விதிக்கப்பட்டால் எங்களுக்கே தண்டனை விதிக்கப்படும், ஆட்சியாளருக்கு அல்ல.ஜனாதிபதியை மின்சார நாற்காலியில் அமர்த்தி தண்டனை விதித்தால் மின்சாரம் படாது. அந்த அளவிற்கு ஊழல் மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாம் கோருவதெல்லாம் கருணையான ஓர் ஆட்சி முறைமையேயாகும்.இந்த நாட்டில் ஜனநாயகம் கிடையாது. மக்களின் அடிப்படைத் தேவைகளை இந்த ஆட்சியாளர் பூர்த்தி செய்யத் தவறியுள்ளார்.
தண்ணீர் கேட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகின்றது.மக்கள் கொடுப்பதனை சாப்பிட்டு விட்டு வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டின் பத்து வீதமானவர்கள் 95 வீதமான பணத்தை அனுபவிக்கின்றார்கள்.ஆட்சியாளர்களுக்கு இந்த நாடு ஆச்சரியமானதுதான் எனினும் மக்களுக்கு அவ்வாறு கிடையாது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.