இலங்கையில் அடுத்த மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஏழாவது ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள அதேவேளை, தேர்தல் நடைமுறைகளை மீறுகின்ற செயற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு குழு கூறியிருக்கின்றது.
குறிப்பாக இராணுவத்தினர் மத்தியில் அரசியல்வாதிகள் அரசியல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது தொடர்பாகத் தமக்குத் தகவல்கள் கிடைத்திருப்பதாக இந்த கண்காணிப்பு குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்திருக்கின்றார்.செவ்வாய்க்கிழமை வவுனியாவில் இத்தகைய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக அவர் பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்
‘வவுனியாவில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிற்குச் சென்றிருந்த இரண்டு முக்கிய அமைச்சர்கள் பிரதேச அரசியல்வாதிகளுடன் கலந்து கொண்ட அரசியல் கூட்டம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது. இராணுவ முகாமுக்குள் உள்ளுர் அரசியல்வாதிகளை அழைத்துச் சென்று அரசியல் கூட்டம் நடத்தப்பட்ட சம்பவமானது, இப்போது நடைபெறவுள்ள தேர்தல் நடைமுறைகள் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமையும் என நாங்கள் கருதுகின்றோம்.
நேற்று முன்தினமே இந்தச் சம்பவம் குறித்து உடனடியாகவே தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தோம்’ என்றார் கீர்த்தி தென்னக்கோன்
‘வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாமல் மேற்கு மாகாணத்திலும் தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருப்பது தொடர்பாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கபே அமைப்பு கூறுகிறது.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரைப் பயன்படுத்துவதையோ, இராணுவத்தினர் மத்தியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதையோ எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இத்தகைய தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் தேர்தல் திணைக்களமே பொறுப்பு கூற வேண்டும்’ என்றார் கபே எனப்படும் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் அவர்கள்.
இந்த விடயம் தொடர்பாக தங்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.இது குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட்,
தேர்தல் சட்டமீறல் சம்பவம் ஒன்று இடம்பெறுமானால், அது குறித்து, அந்தப் பிரதேசத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டு நிலையத்திற்கு உடனடியாக முறையிட வேண்டும் எனவும் அதன் பின்னர் தேர்தல் திணைக்களத்திற்குத் தெரிவித்தால், அந்தச் சம்பவம் குறித்து அங்குள்ள அதிகாரிகள், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை நடத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
அவ்வாறில்லாமல், தேர்தல் திணைக்களத்திற்கு அறிவித்தால், சம்பவம் நடைபெறுகின்ற இடத்தில் உடனடியாக விசாரணைகளை நடத்துவது இயலாத காரியமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இராணுவத்தினரை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவதோ, அவர்கள் மத்தியில் அரசியல் பிரசார நடவடிக்கைளை மேற்கொள்வதோ சட்டம் அனுமதிக்கவில்லை என்றும் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட் கூறினார்