சிட்னியில், உணவகம் ஒன்றில் ஆயுததாரியால் 16 மணிநேரமாக பயணம் வைக்கப்பட்டிருந்தவர்கள், காவல்துறையின் அதிரடித் தாக்குதலில் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தையடுத்து அவுஸ்ரேலியாவில் அகதிகள் தொடர்பான கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியங்கள் உருவாகியுள்ளன.
சிட்னியின் மையப்பகுதியில் உள்ள சொக்கலேற் கபே என்ற உணவகத்தில், அவுஸ்ரேலிய நேரப்படி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் 20இற்கும் அதிகமானோரை ஆயுததாரி ஒருவர் பணயமாகப் பிடித்து வைத்திருந்தார்.
இந்தச் சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவுஸ்ரேலிய நேரப்படி செவ்வாய் அதிகாலை 2 மணியளவில் காவல்துறை கொமாண்டோக்கள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர்.உட்புறமாக துப்பாக்கிச் சத்தங்கள் கேட்ட பின்னரே தாம் உள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக அவுஸ்ரேலிய காவல்துறை கூறியுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, துப்பாக்கிதாரி சுட்டுக்கொல்லப்பட்டு, பயணக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.இந்த சம்பவத்தில் 2 பணயக் கைதிகள் கொல்லப்பட்டதுடன், மேலும் 4 பேர் காயமடைந்தனர்.பொதுமக்களைப் பணயமாகப் பிடித்து வைத்திருந்தவர், 1996ம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் தேடிய 49 வயதான ஈரானிய அகதியான ஹரோன் மொனூஸ் என்று தெரியவந்துள்ளது.
தன்னைத் தானே ஒரு இஸ்லாமிய மதகுரு என்று காட்டி வந்துள்ள இவர் மீது அவுஸ்ரேலிய நீதிமன்றங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.முன்னாள் மனைவியை கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்டிருந்த அவர் பிணையில் வெளிவந்திருந்தார்.
இந்தச் சம்பவத்துக்கு ஈரானிய அகதி ஒருவரே காரணம் என்று உறுதியாகியுள்ளதால், அகதிகள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று கோரிக்கை அவுஸ்ரேலியாவில் வலுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அவுஸ்ரேலியாவில் ஏற்கனவே அகதிகள் தொடர்பான சட்டங்கள் குறித்து கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஏற்கனவே இந்த ஆண்டு இடம்பெற்ற கருத்துக்கணிப்பு ஒன்றில் அகதிகள் தொடர்பாக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று 60 வீதமான அவுஸ்ரேலியர்கள் வாக்களித்திருந்தனர்.இந்தநிலையில் சிட்னி பயணச் சம்பவம், அகதிகள் தொடர்பான அவுஸ்ரேலிய அரசின் கொள்கையை மேலும் கடினமாக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்ரேலியாவில், உள்ள மொத்த மக்கள் தொகையில் 27 வீதமானோர் வெளிநாடுகளில் பிறந்தவர்களாவர்.இங்கு சிறிலங்கா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் குடியேறியுள்ளனர்.