இராணுவத்தின் இரத்தத்தில் வெற்றி கொள்ளப்பட்ட யுத்தத்தினை ஒரு குடும்பம் மாத்திரம் உரிமை கொண்டாடுகின்றது. ஒரு குடும்பத்தின் அராஜக ஆட்சிக்கு எதிராக முழுக்குடும்பங்களும் ஒன்று திரண்டு மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து வருகின்றன என தெரிவிக்கும் பொது எதிரணி அழகான பெண்ணை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய காரணத்திற்காக அப்பெண்ணை வன்புணரும் குற்றத்தை மஹிந்த ராஜபக்ஷ செய்கின்றார் எனவும் குறிப்பிட்டது.
பொது எதிரணியின் உத்தியோகபூர்வமான முதலாவது செய்தியாளர் சந்திப்பு நேற்று எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போதே பொது எதிரணியின் ஊடகப் பேச்சாளர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் நல்லாட்சிக்கான ஆண்டாக 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மைத்திரிபால சிறிசேனவின் தூய்மையான ஆட்சி ஆரம்பமாகவுள்ளது. நாட்டில் அனைத்துக் குடும்பங்களும் எதிர்பார்க்கும் மைதிரிபாலவின் ஆட்சியும் ஒரு குடும்பம் மட்டுமே எதிர்பார்க்கும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியும் மோதிக்கொண்டிருக்கின்றது. ஆயினும் இறுதியில் இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சி அமையும். இன்று பொது எதிரணியின் பக்கம் பாராளுமன்ற மாகாண மாவட்ட சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வருகின்றனர். இதுவே எமக்கு கிடைத்த மிகப்பெரிய உற்சாகமாகும்.
மேலும் யுத்தத்தை வைத்து அரசாங்கம் வியாபாரம் செய்து வருகின்றது. இராணுவத்தினர் இரத்தம் சிந்தி பெற்ற வெற்றியினை ஒரு குடும்பம் மாத்திரம் உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. இந்த யுத்தத்தில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சிறிய அளவு உரித்து உள்ளது. அதை நாம் மறக்கவில்லை. ஆனால் அதையும் தாண்டி இராணுவ வீரர்களுக்கும் படைத் தளபதிகளுக்கும் அதிக பங்கு உள்ளது. அதை மறந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது புகழை பரப்பிக் கொண்டிருக்கின்றார். இதற்கும் குடும்ப அரசியலின் சர்வாதிகார ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க நாம் பொது எதிரணியாக களமிறங்கியுள்ளோம்.
அழகான பெண் ஒருத்தி ஆபத்தான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டுள்ள போது அவளை இளைஞன் ஒருவன் காப்பாற்றிய பின்னர் காப்பாற்றிய பாவத்திற்காக அவளை வன்புணரவோ துஷ்பிரயோகிக்கவோ முடியாது. அவ்வாறானதொரு குற்றத்தினையே இன்று மஹிந்த ராஜபக்ஷ செய்து வருகின்றார். யுத்த சூழலில் இருந்து அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை காப்பாற்றி விட்ட பின்னர் அந்த நாட்டின் தூய்மையான தன்மையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் குடும்ப அரசியல் சீரழிக்கின்றது.
மேலும் எமக்கு இன்று அன்னம் கிடைத்துள்ளது. அரசாங்கத்தில் இருந்து அன்னப் பறவை போன்று மைத்திரிபால எமக்கு கிடைத்துள்ளார். எம்மில் இருந்து அன்னத்திற்குப் பதிலாக நீர் பாம்பு ஒன்று போயுள்ளது. இதனை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எமது வெற்றிக்கு எது தேவையோ அதன் அடிப்படையில் முன்செல்ல வேண்டும். எம்மில் இருந்து போனவர்களை நினைத்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.