எனது கணவரை கொன்றவரை சட்டத்தின்முன் நிறுத்தி கூடிய தண்டனை வழங்க வேண்டும் என மன்னாரில் சுட்டுக் கொல்லப்பட்ட கிருஷ்ணசாமி நகுலேஸ் வரனின் மனைவியான நகுலேஸ்வரன் கவிதா நீதிமன்றில் சாட்சியமளிக்கையில் கோரிக்கை விடுத்தார்.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் உள்ள ஈசன் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த விடுதலைப் புலிகளின் காவல் துறையில் கடமையாற்றி பின் அரசிடம் புனர்வாழ்வு பெற்று குடும்பத்துடன் வாழ்ந்த நபரான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் (40) கடந்த மாதம் 12 ஆம் திகதி வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன் வழக்கு நேற்று முன்தினம் புதன் கிழமை மன்னார் நீதிமன்றில் நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலை யில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.அச்சமயம் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு பொலிஸார் இக் கொலை தொடர்பாக ஒரு கிராம அலுவலகர் உட்பட ஏழு சந்தேக நபர்களை மன்னார் நீதிமன்றில் ஆஜராக்கினர்.
அத்துடன் இவ் வழக்கில் இறந்தவரின் மனைவி உட்பட மூன்று பேர் மன்றில் சாட்சியம் அளித்தனர்.
இறந்தவரின் மனைவி நகுலேஸ்வரன் கவிதா (வயது 37) நீதிமன்றில் தனது சாட்சியத்தில், நான் 1997ஆம் ஆண்டு தொடக்கம் ஒரு தொண்டர் ஆசிரியையாக இருந்து பின் 2001 ஆம் ஆண்டிலிருந்து ஒரு நிரந்தர ஆசிரியையாக வெள்ளாங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கடமை புரிந்து வருகின்றேன்.
எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மூத்தவள் மகள் (வயது 11) அடுத்தது மகன் (வயது 8) கடந்த 12.11.2014 அன்று இரவு 8.25 மணியளவில் எனது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவ நேரம் எனது மகள் படித்துக் கொண்டிருந்தாள். நான் சமையல் அறைக்குள் ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தேன். மகன் ஒப்படை செய்து விட்டு எனக்கு காட்டிக் கொண்டிருந்தான்.
அச்சமயம் எனது கணவர் எங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்துக்காக கல் அரிவதற்காக வெளியில் மூன்று ரியூப் லைற் எரியவிட்டு எனது தம்பியுடனும் எனது மைத்துனியின் கணவருடனும் கல் அரிந்து கொண்டிருந்தார்.
அவ்வேளையில், திடீரென அருகில் வெடிச் சத்தம் கேட்டது. இச் சத்தம் என்ன வென்று நான் கேட்பதற்கு முன் 'அக்கா ஓடி வா அக்கா ஓடி வா' என எனது தம்பி சத்தம் போட்டான்.
உடனே நான் ஓடிப்போய் பார்த்தபோது எனது கணவர் வலது பக்கமாக விழுந்து கிடந்தார். அப்பொழுது அவரின் தலையிலிருந்து இரத்தம் குமு குமு என பாய்ந்தது. நானும் தம்பியும் அக் காயத்தை ஒரு துணியால் பொத்தி பிடித்தோம். அந்நேரம் எனது கணவரின் உடலிலிருந்து எவ்விதமான அசைவுகளும் இருக்கவில்லை.
இதையிட்டு நாங்கள் சத்தம் போட்ட தைத் தொடர்ந்து அயலவர்கள் ஓடி வந்து எங்களுடன் சேர்ந்து அழுதார்கள். அத்து டன் அந்த நேரம் பொலிஸாருக்கு கையடக்க தொலைபேசியின் மூலம் தகவல் கொடுக்க எனக்கு கையும் காலும் ஓடவில்லை. பின் பக்கத்தில் இருந்தவரிடம் எனது போனைக் கொடுத்து பொலிஸ் நம்பரை எடுத்து நான்தான் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தேன்.
இந்தச் செய்தியைக் கேட்டு பொலிஸா ரும் உடனே சம்பவ இடத்துக்கு வந்து விட்டனர். அச் சமயம் இச் சம்பவம் யாரால் நடத்தப்பட்டது என்பது எனக்குத் தெரி யாது. உடல் கிடந்த இடத்திலே இருக்க அடுத்த நாள் நீதிபதி வந்து பார்வையிட்ட பின்பே அவரின் உத்தரவுக்கமைய எனது கணவரின் உடலை அனுராதபுர வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். நான் அனுராதபுரத்துக்கு போகவில்லை. எனது உறவினர் போயிருந்தனர்.
இவ் மரணம் தொடர்பாக நான் பொலிஸாருக்கு வாக்குமூலம் கொடுத்தேன். இறந்தவர் எனது கணவர்தான் என்று நான் நீதிபதிக்கு முன் அடையாளம் காட்டியிருந்தேன். துப்பாக்கியால் சுடப்பட்டுத்தான் எனது கணவர் இறந்துள்ளார் என்பது தெரியும்.
தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட இடம் சிறியதாகவும் சன்னம் வெளியேறிய இடம் பெரியதாகவும் காணப்பட்டது என்றார்.கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்ததைத் தொடர்ந்து நீதிபதி சாட்சியை நோக்கி வேறு எதுவும் சொல்வதற்கு இருக்கின்றதா எனக் கேட்டபோது சாட்சி எனது கணவரைக் கொன்றவரை சட்டத்தின் முன் நிறுத்தி கூடிய தண்டனை வழங்க வேண்டும் என மன்றிடம் தெரிவித்தார்.
சண்முகம் செல்வரட்ணம் (வயது 45) என்பவர் இக் கொலை தொடர்பாக மன்றில் சாட்சியம் அளிக்கையில்
நான் 17 வருடங்களாக இப் பகுதியிலேயே வசித்து வருகின்றேன். நான் மேசன் தொழில் புரிந்து வருகின்றேன். இறந்தவருடன் நாங்கள் மூன்று பேர் சீமெந்து கல் அரிந்து கொண்டிருந்தோம்.
இறந்தவர் கல்லுக்கான மணலும் சீமெந்தும் கலவை போட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் இரவு 7 மணி தொடக்கம் 8.30 மணி வரை கல் அரிந்து கொண்டிருந்தோம். அந்த நேரம் வீட்டிலிருந்து மின்சாரம் எரியவிட்டிருந்தோம். இரவு 8.30 மணியிருக்கும் வெடிச்சத்தம் கேட்டது. அப்பொழுது இறந்த நகுலேஸ்வரனைப் பார்த்த போது பின் பக்கமாக விழுந்து கிடந்தார்.
அப்பொழுது அவரின் தலையாலும் காதாலும் இரத்தம் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது இறந்தவரின் மனைவியின் சகோதரர் அக்கா ஓடி வா அக்கா ஓடி வா என சத்தம் போட இறந்தவரின் மனைவி சம்பவ இடத்துக்கு ஓடி வந்தார்.
உடனே அவரை பாயில் கிடத்தினோம். இது விடயமாக இறந்தவரின் மனைவியே பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். அவருக்கு வெடிபட்டே இறந்துள்ளார் என் பது எனக்குத் தெரியும். வெடி யாரால் நடத்தப்பட்டது என்பது எனக்குத் தெரியாது.
நீதிபதி சடலத்தைப் பார்த்தபின் அனுராதபுர வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்ட போது நானும் அங்கு சென்றேன் என்றார்.இவ்வாறு இறந்தவரின் மனைவியின் சகோதரன் ராஜகோபால் வாகீஸ்தனும் இவ் மரணம் தொடர்பாக சாட்சியம் அளித்தார்.