எலும்புக்கூடுகளுடன் இறுதிப்போர் நடக்கிறது ! - TK Copy எலும்புக்கூடுகளுடன் இறுதிப்போர் நடக்கிறது ! - TK Copy

  • Latest News

    எலும்புக்கூடுகளுடன் இறுதிப்போர் நடக்கிறது !


    முன்னொரு காலம்

    யார் நீட்டும் எலும்புகளுக்கும்
    தங்களை நாய்களாக்கிக் கொள்ளாதவர்கள்
    நிறைய இருந்தனர்

    அவர்கள் பதவிகள் கேட்கவில்லை
    பட்டங்கள் கேட்கவில்லை
    பிறிசில் போட் பனர் போஸ்டர் போராட்டங்கள் செய்து
    பத்திரிகை இணையங்களில் போட்டு
    விளம்பரங்கள் செய்ததில்லை

    ஆறு சிலிண்டர் ஏசி வாகனங்கள்
    ஏதும் கேட்டதாய் வரலாறில்லை
    தலைமையைத் தூற்றிக்கொண்டு சதிராடவுமில்லை
    தங்கள் உடல் வெடித்துச் சாகும்போதும்
    கொண்ட கொள்கை மாறாத மனிதர்கள் அவர்கள் 

    அவர்களுக்கு தெரிந்தது எல்லாம்
    இலக்கு ஒன்று மட்டும்தான்
    அர்ச்சுனனின் கண்ணுக்கு தென்பட்ட கிளியின் கழுத்துப்போல
    இலக்கை அடைவதற்காய் எதையும் இழந்தனர்
    யாரின் எலும்புகளுக்கும் அடிபணியாத அவர்கள் இன்று
    எலும்புக்கூடுகளாய் வெளிவந்தவண்ணம் இருக்கின்றனர்.

    அது எலும்புக்கூடு
    வெறும் எச்சம்
    அதற்கு என்ன உணர்வா இல்லை உயிரா இருந்துவிடும்
    கூடுகளைச் சுற்றியிருந்த சதைகள்
    கூடுகளுக்குள்ளேயிருந்த அந்த மனிதர்களின் உணர்வுகள்
    அவர்களின் இறுதி மூச்சு
    அவர்களுக்குள் இருந்த கனவு

    காதல்
    நெருப்பு
    வலி
    இறுதி நேர விருப்பங்கள்
    எல்லாம் அந்த மண்ணுக்கு மட்டும்தான் தெரியும் 

    உடலில் கட்டியிருந்த தகடுகள்
    உன் உணர்வுகளை பதிவு செய்து வைத்திருக்குமா ?
    தகடுகளை சுற்றியிருந்த கயிறுகள்
    உன் கடைசித்தருணங்களைச் சொல்லுமா
    கடிக்கப்படாத சயனைட் குப்பிகள்
    உன் சாவின் வலி கூறுமா

    அழுகிறேன்
    ஆரடி பெண்ணே…. உன்னைப் பெற்ற அன்னை
    ஆரடி உன் தந்தை
    உற்றார் உள்ளனரா
    உறவுகள் இருந்தனரா…
    உனக்குள் காதல் இருந்ததா..?
    ஆசைகள் இருந்தனவா..? 

    கவிதை புரியுமா உனக்கு
    உரத்துக் கத்த வேண்டும் போல
    உள்ளிருந்து பீறிடும் உணர்வு
    ஐந்து வருடம் அழாதவர்களையெல்லாம்
    இந்தக்கூடுகள் அரற்ற வைத்துவிடுகின்றன.

    மூடாத உங்கள் வாய்கள் அந்த இறுதிக்கணங்களில்
    என்ன சொல்லிருக்கும்
    கனவுகளைச் சொன்னாயா
    தாகத்தைச் சொன்னாயா
    எங்களிடம் கல்லறைகள் கூட இல்லை

    தோல்வியிடம் கல்லறைகள் இருக்குமாம்
    அதைக்கூட விடவில்லை
    வேர்பிடித்துவிடும் என்று- உழுது தள்ளிவிட்டார்கள்
    பற்றியெரிகிறது மூச்சு
    மழையில்லாத தேசம்
    ஈரமில்லாத மனங்கள்

    இப்போதெல்லாம் மனிதர்கள் போனவைகளை நினைப்பதில்லை
    கடந்து வந்த வலிகள்
    ரணங்கள்
    பட்ட பாடுகள்
    இழப்புகள்
    கலாசார மாற்றங்கள்
    எதையும் நினைப்பதில்லை

    தேசம் வெளவாலும் புலுமைச்சிலந்தியும் நிறைந்துள்ளது
    விழுந்ததையும்
    எழுவதையும்பற்றி இவர்கள் சிந்திக்க மாட்டார்கள்
    யாரோ ஒரு சிலர்
    கையை உயர்த்தி போராட்டம் செய்தனர்
    கோஷம் எழுப்பினர்
    அடுத்த தேர்தலில் வரும்வரை போராட்டம் தொடர்ந்தது

    வென்றவர் போக மற்றவர்
    அதிகாரத்திடம் அடி பணிந்து வாலாட்டினர்.
    வென்றவர் பதவியை தக்க வைக்க
    இங்கொரு முகமும்
    சலுகைகள் பெற
    அங்கொரு முகமுமாய்
    முகமிழந்து நின்றனர்

    எங்கள் துயரங்களில்
    மாலை போட்டுக் கொண்டவர்கள்
    பருந்துகள் போன்றவர்கள்
    அதனால் வருந்துவதில்லை

    பக்கத்தில் அம்மன் கோவில் திருவிழா
    அம்மனுக்கு அபிஷேகம்
    ஐயர் புரியாத மொழியில் தெரியாமல் ஏதோ சொல்கிறார்
    எல்லோரும் அரோகரா
    அரோகரா ஓசையில்
    வலிகள் மறையவில்லை

    மாறாக பேய்களின் இரைச்சல் போல
    அது வெருட்டுகிறது
    தூக்கம் தொலைத்தவனை துவம்சம் செய்கிறது
    பட்டுகளும் பவளங்களும்
    வாசனைகளும்
    தீட்டுகளாய் அருவருக்க

    நாதஸ்வர ஓசை நாராசமாய் ஒலிக்கிறது
    கற்பூரம் கந்தகமாய் மணக்கிறது
    உடுக்கு ஓசை உன்மத்தம் பிடிக்க வைக்க
    பெருவெளியில் அலைகிறது மனம்
    நேற்றுத் தொலைந்தவர்களை தேடுகிறது

    அவர்களிடம் இருந்த கனவுகளை தேடுகிறது
    கவிதைகளைத் தேடுகிறது
    காதல்களைத் தேடுகிறது
    வெறி பிடித்த
    பச்சையுடைக்காரனின் நெஞ்சு நட்சத்திரங்களை
    இழுத்து பிடுங்கச் சொல்கிறது

    தொப்பியை புரட்டிப் போடச் சொல்கிறது
    சப்பாத்தை ஓங்கி மிதிக்கச் சொல்கிறது
    ஆண்குறியை அறுத்துப் போடச்சொல்கிறது
    அறிவு ஆழ்ந்து தடுக்கிறது
    ஆனாலும் ஆழுவதைத் தவிர வேறோனறும் தெரியாத மனம்
    நைந்து பொகிறது

    அதோ
    அப்பாவின் படத்துடன் ஒரு சிறுமி
    கணவனின் படத்துடன் இன்னும் குங்குமப்பொட்டுடன் ஒரு தாய்
    கோஷமிட்டு கலைந்த கேசம்
    வியர்வை குங்குமத்தைக் கரையவைக்கிறது
    அவர்களும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்
    எலும்புக்கூடோன்று இன்றும் வெளிவந்ததாம்...

    ச. நித்தியானந்தன்
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: எலும்புக்கூடுகளுடன் இறுதிப்போர் நடக்கிறது ! Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top