காட்டிக்கொடுக்கும் கருணா ஒரு போராளி துரோகியான கதை - TK Copy காட்டிக்கொடுக்கும் கருணா ஒரு போராளி துரோகியான கதை - TK Copy

  • Latest News

    காட்டிக்கொடுக்கும் கருணா ஒரு போராளி துரோகியான கதை

    முரளீதரன் என்னும் இயற்பெயர் கொண்ட கருணா மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று கிராமத்தில் 1966ஆம் ஆண்டு பிறந்தார். அங்கேயே ஆரம்பக் கல்வி கற்றுப் பின், செயிண்ட் மைக்கல் கல்லூரியில் பயின்ற காலகட்டத்தில், 1983ஆம் ஆண்டு கிழக்கிலங்கையின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பாளராகக் கீர்த்தி அம்மன் செயல்பட்டுவந்தார். அவரிடம் போய்ச் சேர்ந்தார் கருணா. ஒரே ஆண்டில் தன் தனித்திறமை, துணிச்சல் காரணமாக இந்தியாவில் போர்ப் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கருணாவின் பெயரும் இடம்பெற்றது. இந்தியாவிலிருந்து பயிற்சிபெற்றுத் திரும்பியவர்களில் கருணா தனித் திறமைகளோடு செயல்பட்டார். திறமை, விவேகம், போர்த்திறன், விசுவாசம் போன்றவற்றால் விடுதலைப் புலிகளின் கமாண்டோ பிரிவில் சிறப்புத் தேர்ச்சி பெற்று மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குத் தளபதியாகப் பொறுப்பேற்றார். 

    இக்காலத்தில் மேற்கண்ட இரண்டு மாவட்டங்களின் லெப்டினன்ட் கர்னல் கண்ணனுக்கு உதவியாளராக இருந்து முக்கியத் தாக்குதல்களில் ஈடுபட்டார். 1985 - 1987ஆம் ஆண்டுகளில் இலங்கை அதிரடிப் படையும் ராணுவமும் பல தாக்குதல்களில் தோல்வியைத் தழுவியமைக்குக் கண்ணனும் கருணாவுமே மூல காரணம். கண்ணன் எக்காலத்திலும் கீழே படுத்துப் பதுங்கிப் போர் செய்பவரல்ல. சிங்களப் படைகளை எதிர்கொண்டு முன்னேறிச் செல்லும் வீரம் படைத்தவர் - தன் படைகளுக்குப் பின்னே நின்று போர் புரியாமல் முன்னே சென்று எதிரிகளை அழிக்கும் இவர் சிங்கள ராணுவத்துக்குச் சிம்மசொப்பனமாக இருந்தார். அதில் கருணாவின் பங்கும் அதிகமாக இருந்தது.
    இந்த நேரத்தில் கிழக்கிலங்கையில் அதிகமான இளைஞர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வந்துசேர்ந்தார்கள். 

    பிரபாகரன் அங்கே தானாகவே இயங்கிப் போர்புரிய ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் தளபதியாகவும் தலைவராகவும் நியமிக்க எண்ணியபொழுது கண்ணனின் பெயரே முன் இருந்தது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தலைவராகக் கண்ணனின் பெயரை நினைத்திருந்த சமயம் 1990இல் ராணுவத்துக்கெதிரான கடும்போர் மூண்டது. அதில் சிங்கள ராணுவம் மோசமான தோல்வியைத் தழுவியமைக்குக் கருணாவின் செயல்பாடுதான் முக்கியக் காரணம். லெப்டினன்ட் கர்னல் கண்ணன் மட்டக்களப்பு, அம்பாறைத் தளபதியாகவே போர்க்களத்திலிருந்து திரும்புகிறார். இந்நேரத்தில் தானே தளபதியாகவும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குத் தலைவனாகவும் ஆக வேண்டுமென்ற எண்ணம் கருணாவின் மனத்தில் எழுந்தது. தனக்கென்று விசுவாசமானவர்களைத் தேர்ந்தெடுத்தார். உள்சதியும் துரோகமும் உருவான இதற்கு உடன்பட்ட லெப்டினன்ட் ரூபன் என்பவர் கருணாவின் உறவினர் மட்டுமல்ல அவருக்கு மிக நெருக்கமானவரும்கூட.

    சிங்களப் படையினரை வெற்றிகொண்டு தலைவராக இருப்பிடம் திரும்பிய லெப்டினன்ட் கர்னல் கண்ணன் ஒரு சிங்கள ராணுவத் தளபதியின் உடலில் அபூர்வமான நவீனத் துப்பாக்கியைப் பார்த்து அதை எடுப்பதற்குக் கீழே குனிந்தபொழுது தலையில் சுடப்பட்டு அங்கேயே இறந்தார். சிங்கள ராணுவம் பல கிலோ மீட்டர் தூரம் பின்தங்கி ஓடிவிட்ட பிறகு கண்ணனை யார் சுட்டிருப்பார்கள்? இந்தக் கேள்வி தலைவர் பிரபாகரனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராணுவத் தாக்குதலில் தளபதி கண்ணன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பிரபாகரனுக்குக் கருணா அறிவித்தார்.
    லெப்டினன்ட் கர்னல் கண்ணனின் இறப்பில் ஏதோ ‘சதி’ நடந்திருக்கிறது என்பதை அறிந்த பிரபாகரன் ரூபனைத் தன்னை வந்து உடனே பார்க்கும்படி உத்தரவிட்டார். ரூபன் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. ரூபனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
    மட்டக்களப்பு மாவட்டத்தில் போராளிகளாலும் மக்களாலும் ‘அம்மான்’ என்னும் சிறப்பு அடைமொழியால் அழைக்கப்பட்ட கருணா இலங்கை ராணுவத்திற்கெதிரான போர்முனைகளில் முதன்மையான போராளியாகப் போற்றப்பட்டார். வீட்டுக்கு ஒருவர் என விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேரக் கருணாவை நம்பியே மக்கள் மனமுவந்து தங்கள் பிள்ளைகளை அனுப்பிவைத்தனர்.

    1994 - 95இல் முல்லைத் தீவு, ஆனையிறவு ஆகிய இடங்களில் கடும்போர் மூண்டது. ஒவ்வொரு நாளும் வெற்றிச் செய்திகள் வந்தவண்ணமிருந்தன. சிங்கள ராணுவம் முழுபலத்துடன் போரிட்டும் பல டாங்கிகளையும் கவச வாகனங்களையும் பறிகொடுத்தது. ஆனையிறவின் கி9 பிரதான சாலையில் 2002இல் யாழ்ப்பாணம் செல்லும்பொழுது இப்படியான சில கவச வாகனங்கள் சிதிலமடைந்து கிடந்ததை நேரில் பார்த்திருக்கிறேன். இந்தக் கடும்போரில் கருணாவின் படையும் ஜெயந்தன் என்னும் மற்றொரு தளபதியின் 5000 புலிப் படையும் மிகப் பெரிய வெற்றியை ஈட்டின. இவ்வெற்றிக்குப் பிறகு, பிரபாகரனின் மிக நம்பிக்கைக்குரியவராகக் கருணா உருவானார். தன் உடன் பிறந்த தம்பிபோலவே இவரை நடத்தினார் பிரபாகரன். பிரபாகரன் தங்கியிருக்கும் எந்த இடத்திற்கும் எந்த நேரத்திலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கருணாவுக்குக் கிட்டியது.
    2002இல் ரனில் விக்கிரமசிங்கே - பிரபாகரன் சமாதானப் பேச்சுவார்த்தை தாய்லாந்தில் நடைபெற இருந்தது. மறுநாள் காலை விமானத்தில் புறப்படுவதற்கு முன் புலிகள் தரப்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்பவர்களின் ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சியில் பிரபாகரன் தலைமையில் இரவு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் கருணாவும் இருந்தார்.

    A9 சாலையைச் சீர்செய்ய ரூபாய் 600 கோடியை உலக வங்கி மூலம் ஒதுக்கியிருந்தது ஸ்ரீலங்கா. இந்தச் சாலையைச் சீர்ப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கவும் நான் கிளிநொச்சிக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. சமாதான காலமான அந்நேரத்தில் யாரும் என்னோடு வர முடியாது என்று சொல்லிவிட்ட பிறகு, நான் தனியாகவே அங்கே சென்றடைந்தேன். போக்குவரத்துப் பிரச்சினைகளைச் சமாளித்துக் கிளிநொச்சியை அடைந்து அன்றே யாழ்ப்பாணம்வரை செல்லத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அன்றுதான் கிளிநொச்சியில் ரகசிய இடமொன்றில் தாய்லாந்து செல்ல வேண்டிய குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் என்னை அங்கே தங்கச்சொல்லிவிட்டார்கள். 

    என் ஆஸ்திரேலிய நண்பர் ஜோய் மகேஸ்வரனும் அந்தத் தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக் குழுவில் இருக்கிறார் என்பதைத் தெரிவித்தனர். அவர் பின்னிரவு முடிந்தால் என்னைச் சந்திக்க வருவதாகச் செய்தியனுப்பினார். அதிகாலை 2:30 மணிக்கு என்னோடு அந்த கி9 சாலை பற்றிப் பேசுவதற்கு உயர் மட்டக்குழு வந்தது. அவர்கள் உலகச் சாலை அமைப்பின் புதிய முறைகளுக்கு 18 ஆண்டுகள் பின்தங்கியிருந்தார்கள். அது அவர்களின் குற்றமல்ல. 18 ஆண்டுகள் போர்ச்சூழலில் அவர்கள் இந்தச் சாலையமைப்பின் புதிய தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தால்தான் ஆச்சரியம். அப்பொழுதுதான் கருணாவை எதேச்சையாகச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.
    அந்த மின்னல் வெட்டு நேரத்தில் என் மனத்திற்கு இவர் ‘சரியான ஆளல்ல’ என்று ஏனோ தோன்றியது. இப்படிப்பட்ட கணிப்புகள் பலமுறை சரியாக இருந்திருக்கின்றன. இம்முறையும் என் அனுமானம் தப்பவில்லை. மறுநாள் நான் யாழ்ப்பாணம் புறப்படும் பொழுது கருணா தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக் குழுவில் புலிகள் தரப்பில் ராணுவப் பேச்சாளராகப் பிரபாகரனால் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்தேன். 

    அதன் பிறகு ஜெனிவா, நார்வே மற்றும் பல இடங்களுக்குக் கருணா, பிரபாகரனின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். இக்காலகட்டத்தில் பிரபாகரனின் மற்றொரு முகம்போலவே கருணா இயங்கினார்.
    வெளிநாட்டுப் பேச்சுவார்த்தைகளின்பொழுதே இவருக்கும் சிங்களத் தரப்பு அரசாங்கத்துக்கும் நெருக்கம் ஏற்பட்டது. கொஞ்சங்கொஞ்சமாகக் கருணா அவர்களின் பக்கம் திரும்ப ஆரம்பித்தார். கொழும்பில் ரகசியமாகத் தங்கிய இடங்களில் இவருக்கும் சிங்கள அரசுக்கும் பேரங்கள் நடைபெற்றன. விடுதலை இயக்கத்தை இரண்டாகப் பிரிப்பதே முதல் வேலையாக இவரிடம் தரப்பட்டது. இதற்கு மில்லியன் கணக்கில் பணம் கைமாறியது. இவர் பிற்காலத்தில் லண்டனுக்குச் சென்றதற்கும் இந்தப் பணம் கைமாறியதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ரனில் விக்கிரமசிங்கே ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செய்யத் அலி ஷாகிர் மௌலானாதான் இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் நடுநிலை நாயகர்.

    இந்நேரத்தில் மற்றொரு தரப்பும் இந்தப் ‘பிரிக்கும்’ பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்குவகித்தது. இந்திய உளவுப் படைப்பிரிவின் ‘ரா’தான் அது. கருணா அவர்களின் பக்கம் மிக ரகசியமாக நெருங்கியதைப் பிரபாகரன் அறியாமல் போனதுதான் ஆச்சரியம்.
    ஆனையிறவு வெற்றி, கருணாவின் அர்ப்பணிப்பு, வேகம் மற்றும் பிரபாகரனிடம் அவர் காட்டிய மரியாதை இவையெல்லாம் இந்தத் திரைக்குப் பின்னே நடந்துகொண்டிருந்த துரோகத்தை அவர் கண்களுக்குப் புலப்படவிடாமல் செய்துவிட்டன. இத்தனைக்கும் கருணா பற்றிப் புலிகளின் உயர்தரப்புத் தலைவர்கள் சிலர் பிரபாகரனிடம் சொன்னபொழுது அதை நம்ப மறுத்து, பொறாமையால், கருணாவின் செல்வாக்குப் பெருகுவதால் அப்படிச் சொல்கிறார்கள் என்றே அவர் நினைத்தார். 

    ஆனால் அடுத்தடுத்து கருணாவின் நடவடிக்கைகள் வேறுவிதமாக மாறிவருவதை விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் பிரபாகரனுக்குத் தெரியப்படுத்தினார். தன்னை விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு கண்காணிக்கிறது என்பதை உணர்ந்த கருணா மிகவும் உஷாராகி மட்டக்களப்பு உளவுப் பிரிவைக் கைதுசெய்து தனக்கெதிரானவர்களைச் சுட்டுத்தள்ளினார்.
    இந்த நேரத்தில் பள்ளிக்கூடங்களில் உயர் வகுப்புப் பரிட்சைகள் நடந்துகொண்டிருந்தன. பிரபாகரன் இதைக் கருத்தில்கொண்டு எந்தக் குழப்பமும் பள்ளி மாணவர்களின் படிப்பைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காகக் கருணாவின் மீதும் அவருடைய சக தோழர்களின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் பொறுமைகாத்தார். 41 நாட்களுக்குப் பிறகு பரிட்சை முடிந்ததும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் பிரபாகரன்.

    கருணாவின் தம்பி ‘றெஜி’யைப் படைப் பிரிவுக்கும் நிதிப் பொறுப்பாளராகக் குகனேஷ்வரனையும் தொழிற் பொறுப்பாளராக இப்போதைய கிழக்கிலங்கை முதலமைச்சர் பிள்ளையானையும் கருணா நியமித்தார். மாவட்டப் பொறுப்பாளராகத் தனது நம்பிக்கைக்குரிய தீபன் என்பவரை நியமித்தார்.
    இதன் பிறகு ‘மக்கள் விடுதலைப் புலிகள்’ என்னும் கட்சியைத் தொடங்கி அதற்குத் தலைவரானதோடு அதை ஒரு அரசியல் கட்சியாகவும் பதிவுசெய்தார். கருணா தொடர்ந்து இலங்கையில் இருக்க முடியாத சூழலில் லண்டன் புறப்படும்பொழுது, கிழக்கிலங்கையில் தேர்தல் வந்தது. ராஜபக்சேயால் பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். லண்டனிலிருந்து திரும்பியதும் பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் நிர்வாகப் பிரச்சினைகள் தலைதூக்கின. நிதி மோசடி செய்தார் கருணா என்று அறிக்கைவிட்டு ரகு என்பவரைப் பிள்ளையான் கட்சியின் தலைவராக்கினார். கருணா எப்படி இதை ஏற்றுக்கொள்வார்? கருணாவால் ரகு சுட்டுக்கொல்லப்பட்டார்.

    காட்டிக்கொடுத்தமைக்குக் கூலியாகப் பணம் மட்டும் கிடைத்தது. பதவி இல்லாமல் கருணாவால் இருக்க முடியவில்லை. கருணாவைத் தனிமைப்படுத்தினால் ஆபத்து என்றுணர்ந்த ராஜபக்சே அவரைப் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து இப்பொழுது அமைச்சர் பதவியும் வழங்கியுள்ளார்.
    கருணாவுக்கு ஒரு சகோதரர், மூன்று சகோதரிகள். இதில் சகோதரர் ‘றெஜி’ சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார். சகோதரிகள் மூவரும் கணவர்மார்களுடன் தாய்லாந்தில் அகதிகளாக உள்ளனர். கருணாவின் மனைவி விடுதலைப் புலிகளின் தளபதிகளுள் ஒருவரான சூசை என்பவரின் சகோதரி. அண்மையில் கடற்புலிகளின் தாக்குதலில் ஒரு சூப்பர் பீரங்கிப் படகை இலங்கைக் கடற்படை இழந்ததும் மற்றொன்று கடும் சேதமுற்றதும் சூசையின் தலைமையில்தான்.

    கடந்த கால வரலாற்றில் கருணாவுக்குப் பல விஷயங்கள் சாதகமாகவே அமைந்துவிட்டன. உண்மையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தளபதியாக வந்திருக்க வேண்டியவர் குமரப்பா. கொக்கட்டிச்சோலை என்னும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வந்தவர் குமரப்பா. இவர்தான் அந்த மாவட்டத் தளபதியாக இருந்தார். இவர் மனைவி மருத்துவர். கிட்டு, புலேந்திரன் மற்றும் குமரப்பாவோடு 11 தளபதிகள் இந்தியக் கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்தார்கள். இந்தியக் கடற்படை புலிகளின் கப்பலைச் சோதனையிட வந்தபொழுது அதனை வெடிவைத்துத் தகர்க்க அனைவரும் மூழ்கி இறந்தனர். குமரப்பாவும் அதில் இருந்தார். இதன் பிறகே கருணாவிற்கு மட்டக்களப்புக்குத் தளபதியாகும் வாய்ப்பு கிடைத்தது.

    பிள்ளையான் முதலமைச்சர் பதவி வகிப்பது கருணாவிற்கு ஏகப்பட்ட எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளையான் முதலமைச்சர் பதவிக்கு லாயக்கற்றவர் என்றுகூடப் பகிரங்க அறிக்கைவிட்டார். இருவருக்குமான இந்தப் பதவிப் போராட்டத்தைத் தணிக்கவே ராஜபக்சே கருணாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். பிள்ளையான் தனது துணை ராணுவக் குழுவைக் கலைத்துவிட்டு ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளார். அதுபோலவே தனது 2000 பேர் கொண்ட படையையும் சிங்கள ராணுவத்தோடு இணைத்துவிட்டார் கருணா.
    பிரபாகரனின் விடுதலைப் புலிகள் படைக்கும் கருணாவின் விசுவாசப் படைக்கும் நடந்த சண்டைகள் ‘தாயாதி’ச் சண்டைகள். ஆனால் சிங்களப் படையில் இணைந்து கருணாவின் படையில் உள்ளவர்கள் புலிகளுக்கு எதிராக எப்படித் துப்பாக்கி தூக்குவார்கள் என்பதுதான் இப்பொழுதுள்ள மிகப் பெரிய கேள்வி.
    கருணாவின் துரோகத் தாவலுக்கு இந்திய ‘ரா’ உளவுப் பிரிவுடன் கூட்டாக வழியமைத்த செய்யது அலி ஷாகிர் மௌலானா இப்பொழுது அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்கேயே ஒளிந்து வாழ்கிறார். கருணாவும் பிள்ளையானும் எதிர் எதிர் நிலையில் செயல்படுகிறார்கள். இவர்கள் எங்கே போய் ஒளியப் போகிறார்கள்? கருணாவும் பிள்ளையானும் துரோகத்தால் பெற்ற பணம், பதவி இவர்களைக் காப்பாற்ற உதவுமா? தமிழர்களுக்குச் சிங்கள அரசால் ஏற்பட்ட இன்னல்களைவிடக் கருணா, பிள்ளையான் மூலம் ஏற்பட்டவையே அதிகம். காட்டிக்கொடுப்பதும், கைக்கூலி வாங்குவதும் அதற்குத் தமிழனே காரணமாக இருப்பதும்தான் மிகப் பெரிய துயரம்.
    மறைந்த மலேசியக் கவிஞர் கா. பெருமாள் எழுதிய கவிதைதான் எனக்கு இப்பொழுது ஞாபகத்துக்கு வருகிறது.

    தமிழனுக்குத் தமிழனே உயிராம் - அந்தத்
    தமிழனுக்குத் தமிழனே தூக்குக்கயிறாம்.

     சை. பீர்முகம்மது
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: காட்டிக்கொடுக்கும் கருணா ஒரு போராளி துரோகியான கதை Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top