ஜனாதிபதி பதவியின் அதிகார சுகத்தை அனுபவிக்கும்
நோக்கில் அண்ணன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு குழிபறிக்கும் நடவடிக்கைகளை கோத்தபாய மேற்கொள்வதாக தெரிய வந்துள்ளது.
நோக்கில் அண்ணன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு குழிபறிக்கும் நடவடிக்கைகளை கோத்தபாய மேற்கொள்வதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
விடுதலைப் புலிகளுடான யுத்த வெற்றியின் பின்னர் பிரதமர் பதவி மீது கண் வைத்து கோத்தபாய காய் நகர்த்தினார். அதன் பின் மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக் காலத்தின் பின் தான் ஜனாதிபதி பதவியை அடையும் எண்ணம் அவருக்குள் இருந்தது. எனினும் அவருக்கு குறைந்த பட்சம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கூட கிட்டவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் தேர்தலின் பின் அவரை பிரதமர் பதவிக்கு நியமிக்க கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ள ஜனாதிபதி, எவ்வாறாக இருந்த போதிலும் தனக்குப் பின் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக கொண்டு வரும் வகையிலேயே காய் நகர்த்தி வருகின்றார். இது கோத்தபாயவிற்கு கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அது மாத்திரமன்றி சிங்கள பௌத்தர்களின் பெரும்பாண்மை பலத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பொது பல சேனா கும்பலை ஜனாதிபதி தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இவற்றை வைத்துப் பார்க்கும் போது கோத்தபாயவிற்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிலையில் கோத்தபாய ராஜபக்ஷ தனது பொறுமையைக் கைவிட்டுள்ளதுடன், தனது சகோதரன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக காய் நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளார். அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒதுக்கிவிட்டு தான் போட்டியிடும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்துள்ளன.
மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு சட்டச் சிக்கல்களை ஏற்படுத்துவது, பெரும்பாண்மை சிங்கள மத்தியில் பௌத்தத்தின் உண்மையான காவலனாக தன்னை இனங்காட்டிக்கொள்வது, சிங்கள பௌத்த சிந்தனை கொண்ட ஒருவரே அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற கருத்தியலுக்கு வலுச் சேர்ப்பது போன்ற விடயங்கள் ஊடாக அவர் தனது இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றார்.
இதற்காக அவர் சம்பிக்க ரணவக்க போன்ற சிங்கள இனவாதத்தலைவர்கள் மற்றும் மகாநாயக்கர்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதுடன், சுதந்திரக் கட்சிக்குள்ளும் படிப்படியாக தனது ஆதரவுத் தளமொன்றைக் கட்டி எழுப்பி வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.