வடக்கில் இரு வேறு நிர்வாகங்கள்: ஐ.நா பிரதிநிதியிடம் முதலமைச்சர் - TK Copy வடக்கில் இரு வேறு நிர்வாகங்கள்: ஐ.நா பிரதிநிதியிடம் முதலமைச்சர் - TK Copy

  • Latest News

    வடக்கில் இரு வேறு நிர்வாகங்கள்: ஐ.நா பிரதிநிதியிடம் முதலமைச்சர்

    மக்களின் ஜனநாயக அங்கீகாரத்துடன்
    வட மாகாண அரசாங்கம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் செயற்பாடுகளை முடக்கும் வகையில் அல்லது தாமதப்படுத்தும் வகையில் அந்த அரசாங்கத்திற்கு சமமான மற்றொரு நிர்வாகம் வடக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதனால் மக்களால் உருவாக்கப்பட்ட மாகாண அரசாங்கம் சுமூகமான முறையில் செயற்பட முடியாதுள்ளது. மேற்கண்டவாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும், ஐ.நா சபையின் சர்வதேச அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் ஒஸ்கார் பெர்னாண்டஸ் தரன்கோவிற்குமிடையிலான சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக மேற்படிச் சந்திப்பு தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

    இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், 13ம் திருத்தச்சட்டம் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பாக தரன்கோ எங்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார். எனவே அந்த விடயம் தொடர்பாக பேசும்போதே நாங்கள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றோம். 

    மேலும் 13ம் திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்கள் போதாது, அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவு செய்யவில்லை என கருத்துக்கள் உள்ளபோதிலும் 13ம் திருத்தச்சட்டத்தில் உள்ள அற்ப சொற்ப அதிகாரங்களையும் கூட நாங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்கப்படாத நிலையில் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மாகாண அரசாங்கத்திற்கு சமமான மற்றொரு நிர்வாகத்தை வடமாகாணத்தில் உருவாக்கி, சமகாலத்தில் இருவேறு நிர்வாகங்கள் நடத்தப்படுகின்ற நிலையே இருக்கின்றது. 

    இது ஒட்டுமொத்தத்தில் மக்களால் உருவாக்கப்பட்ட மாகாண அரசாங்கத்தின் செயற்பாடுகளை முடக்குவதற்கு அல்லது தாமதப்படுத்துவதற்காகவே நடத்தப்படுகின்றது என்பதனை நாங்கள் மிக தெளிவாக அந்தச் சந்திப்பில் எடுத்துரைத்துள்ளோம். 

    மேலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதார மேம்பாடு தொடர்பாக சந்திப்பில் பேசப்பட்ட பொழுது வடமாகாணத்தில் வீதி புனரமைப்பு உள்ளிட்ட பெரும் கட்டுமான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு என்னதேவை என்பது தொடர்பாக இதுவரையில் ஒருவிதமான கணிப்பீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. 

    இந்நிலையில் மக்களுடைய அன்றாடத் தேவைகள் மற்றும் வாழ்வாதார தேவைகள் இன்றுவரையில் நிறைவு செய்யப்படாத நிலையில் மக்கள் வாழ்வாதார நெருக்கடிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றமை தொடர்பாக மிக தெளிவான ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருக்கின்றோம். எனவே இந்த விடயங்கள் தொடர்பாக முன்னரும் தகவல்கள் பல தெரிந்திருக்கின்றன. 

    மேலதிக தகவல்களை பெற்றிருக்கின்றோம். குறிப்பாக 13ம் திருத்தச் சட்டத்தினை வடமாகாணசபை நடைமுறைப் படுத்துவதற்கு உள்ள முட்டுக்கட்டைகள் தொடர்பாக உரிய இடங்களில் பேசுவோம் என அந்தச் சந்திப்புக்களில் பெர்னாண்டஸ் தரன்கோ தம்மிடம் சுட்டிக்காட்டியிருப்பதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: வடக்கில் இரு வேறு நிர்வாகங்கள்: ஐ.நா பிரதிநிதியிடம் முதலமைச்சர் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top