விடுதலைப்புலி பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு
அவரைப் பற்றி திரைப்படம் எடுப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். காரணம் பிரபாகரனை வைத்து படம் எடுத்தால், உலகம் முழுக்க பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்கள் அந்தப் படத்தை பெருமளவில் பார்ப்பார்கள். அதன் மூலம் எப்.எம்.எஸ். ஏரியாவில் நன்றாக பணம் பார்க்க முடியும் என்ற கணக்குதான்.சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் பிரபாகரனைப் போன்ற கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரபாகரனின் கதையை மையமாக வைத்து தற்போது இரண்டு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
வேந்தர் மூவீஸ் மதன் தயாரிப்பில், பிரவீண்காந்தி இயக்கும் புலி பார்வை என்ற படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் எஸ்.மதனே பிரபாகரன் வேடத்தில் நடிக்கிறார். பிரபாகரனை கதாநாயகனாக சித்தரித்து எடுக்கப்பட உள்ள மற்றொரு படத்தை வ. கௌதமன் இயக்குகிறார்.
தமிழ் தேசியவாதியான இவர் ஈழ ஆதரவாளர். எனவே பிரபாகரனைப் பற்றி இயக்க உள்ள படத்துக்காக பல வருடங்கள் ஹோம்வொர்க் செய்து உண்மைத்தன்மை குறையாமல் ஸ்கிரிப்ட்டை உருவாக்கி உள்ளாராம். பிரவீண்காந்தியோ மசாலாப்பட இயக்குநர். இவர் பிரபாகரனை எப்படி சித்தரிப்பார்? அவர் படத்தினால் நம் படத்துக்கு பாதிப்பு வருமா என்ற கவலையில் வ.கௌதமன் இருக்கிறார்.
கௌதமன் படம் திரைக்கு வருவதற்குள் தன் படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்ற அவசரத்தில் இருக்கிறார் பிரவீண்காந்தி.