மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் யானையைக் கோபமடையச் செய்வது போன்றது - TK Copy மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் யானையைக் கோபமடையச் செய்வது போன்றது - TK Copy

  • Latest News

    மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் யானையைக் கோபமடையச் செய்வது போன்றது

    ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது.
    காட்டுராசாவாகிய அந்தச் சிங்கத்திற்கு இந்தக் காட்டின் ராசாதான் தான் என்பதை மற்றைய மிருகங்கள் தெரிந்து வைத்திருக்கின்றனவா? என்பதை அறியவேண்டும் என்று ஆவல். காட்டில் நடமாடும் மிருகங்களை எல்லாம் கூப்பிட்டு டேய்! இந்தக் காட்டின் ராசா யார்? என்று அந்தச் சிங்கம் கேட்கும்.

    அந்த மிருகங்களோ பயந்து நடுங்கி ராசாவே தாங்கள்தான் ராசா என்று பதில் அளிக்கும். ஒரு நாள் அந்தக் காட்டின் வழியாக முயல் ஒன்று வந்தது. முயலைப் பார்த்த சிங்கம்; டேய்! இந்தக் காட்டிற்கு யாரடா ராசா? என்று கேட்க, முயல்பிள்ளை பயந்தவாறு நீங்கள்தான் பிரபு என்றது. முயலைத் தொடர்ந்து கரடி, குரங்கு இப்படியாக ஒவ்வொன்றிடமும் இந்தக் காட்டின் ராசா யார்? என்று சிங்கம் கேட்க, அவை அனைத்தும் நீங்கள் தான் ராசா என்று கூறி விட்டு ஓட்டமும் நடையுமாக சென்று விட்டன. 

    இவற்றைத் தொடர்ந்து அலியானை ஒன்று அந்த வழியாக வந்தது. அலியானையைப் பார்த்த சிங்கம், டேய்! மதம் பிடித்த யானையே! இந்தக் காட்டின் ராசா யாரடா? என்று சிங்கம் மிடுக்கோடு கேட்டது. சிங்கத்தின் கேள்விக்கு யானை பதில் எதுவும் அளிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த சிங்கம் மீண்டும் டேய்! அலியானையே இந்தக் காட்டின் ராசா யார் தெரியுமாடா? என்று கேட்டது. இப்போது அலியானைக்குக் கோபம் முற்றிக் கொண்டது. 

    எதுவும் பேசாமல் சிங்கத்திற்கு அண்மையாகச் சென்று தனது துதிக்கையால் சிங்கத்தை விலாவாரியாகத் தூக்கி நிலத்தில் ஓங்கிப் பலமாக அறைந்தது. யானை தூக்கி அடித்ததில் விலா எலும்பு முறிந்த சிங்கம்; வீழ்ந்து கிடந்து கொண்டே, யானை யாரே! தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லாமல் இந்த வேலையை ஏன் செய்தீர்? என்று அழாக்குறையாக யானையைக் கேட்டது. இந்தக் கதை கற்பனை மட்டுமல்ல; இதற்குள் ஆழமான கருத்துக்களும் உண்டு. 

    எல்லாத் தனகல்களும் எல்லோரிடமும் செய்தல் ஆகாது. முயலிடம் குரங்கிடம் கேட்ட அதே கேள்வியை யானையிடமும் கேட்கப்போய் சிங்கம் வாங்கிக் கட்டியது. நான் ராசா என்பதற்காக எல்லாம் செய்யலாம் என்று நினைப்பதும் எல்லோரையும் ஆட்டிப் படைக்கலாம் என்று கனவு காண்பதும் ஆபத்தாக முடியும். இவ்வாறு நடக்கின்றவர்கள் சில வேளைகளில் அடிபட்டு திருந்த வேண்டியும் இருக்கும் என்பதற்கு இந்தக் கதை நல்ல எடுத்துக்காட்டு. 

    இப்போதெல்லாம் இந்தியப் பிரதமர் மோடி அமைதியாக தன் நாட்டுப் பிரச்சினையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இலங்கையின் தென்பகுதி சிங்களவர்கள் சிலரும் பெளத்த பிக்குகளும் சேர்ந்து பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தைப் பார்த்த போது, சிங்கம்- யானைக்கதைதான் ஞாபகத்திற்கு வருகின்றது. அதாவது அமைதியாகச் சென்று கொண்டிருந்த யானையைப் பார்த்து, டேய்! இந்தக் காட்டுக்கு யார் ராசா என்று சிங்கம் கேள்வி எழுப்பப் போய், விலா எலும்பு முறிந்த கதையாகத்தான் இது இருக்கிறது. 

    எதுவாயினும் மோடியோடு இலங்கை மோதிக் கொண்டால்தான் அது எங்களுக்கு நன்மை பயக்கும். நடக்கட்டும். நாம் அமைதியாக இருந்து பார்ப்போம்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் யானையைக் கோபமடையச் செய்வது போன்றது Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top