நியதிச்சட்டங்களுக்கான அனுமதியை வழங்குவதற்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி இரண்டுவாரகால அவகாசம் கோரியிருக்கின்றார். இதனால் நிதி, நியதிச் சட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று முன்தினம் வடமாகாணசபை கூடியபோதிலும், ஆளுநரின் வேண்டுதலுக்கு இணங்க இரண்டு வாரகாலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபை தேர்தல் நடைபெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சபையைக் கைப்பற்றி எட்டு மாதகாலங்கள் ஆகின்றன. முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரன் பெருவெற்றிபெற்று வடமாகாணசபையின் செயற்பாடுகளை மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் கொண்டு செல்ல வேண்டுமென்ற எண்ணத்தில் செயற்பட்டு வந்தார். முதலமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ முன்னிலையில் பதவியேற்றுக்கொண்ட அவர் அமைச்சுப் பொறுப்புக்களைக்கூட ஜனாதிபதி முன்னிலையிலேயே பொறுப்பேற்றுக்கொண்டார்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மத்திய அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து வட மாகாணசபையை முன்னெடுக்கவேண்டும் என்ற நல்நோக்கத்தின் காரணமாக ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில் மாகாண சபையின் பிரதம செயலாளரை இடமாற்றி புதியவரை நியமிக்கவேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷவை கடந்த ஜனவரிமாதம் 2ஆம் திகதி நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன் வடமாகாண சபையின் ஆளுநராக சிவில் நிர்வாக அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த விடயங்களுக்கு இணக்கம் தெரிவித்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அதற்கான நடவடிக்கை எதனையும் இதுவரை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கூட்டமைப்புத் தரப்பில் சுமத்தப்பட்டு வருகின்றது. அத்துடன் வடமாகாணசபையின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் மத்திய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியாத சூழலை அரசாங்கம்
ஏற்படுத்தி வருகின்றது என்றும் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனும் கூட்டமைப்பின் தலைவர்களும் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டிவருகின்றனர். ஆனால் அரசாங்கத்தரப்போ வடமாகாணசபையை கைப்பற்றியுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்களுக்கு எந்தவகையான சேவைகளையும் மேற்கொள்ளவில்லை. வேண்டுமென்றே அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களுக்கான சேவைகளை கூட்டமைப்பு தட்டிக்கழித்து வருகின்றது என்று குற்றம் சாட்டிவருகின்றது.
அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக் ஷ, வடமாகாணசபை உருவாக்கப்பட்ட பின்னர் வடக்கை மீளக்கட்டியெழுப்புவதற்கான வடக்கு செயலணி கலைக்கப்பட்டது. ஆனால் கடந்த எட்டு மாதங்களாக வட மாகாணசபை மக்களுக்கு உரிய முறையில் சேவையாற்றவில்லை. மாகாணசபைக்கு வருமானங்களைப் பெற்றுக்கொள்வதற்கான பல்வேறு சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு காணப்பட்டும் வடக்கு முதலமைச்சர் அவற்றைச் செய்யாமல் இருக்கின்றார்.
முதலமைச்சர் தமது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விடயங்கள் குறித்து பேசுகின்றாரே தவிர மக்களுக்கு சேவையாற்றும் எண்ணத்தில் செயற்படவில்லை என்று கடும் விசனம் தெரிவித்திருந்தார். எந்தவொரு மாகாணசபைக்கும் வழங்காத 5000 மில்லியன் ரூபாவை மத்திய அரசாங்கம் வடமாகாணசபைக்கு வழங்கியது. ஆனால் வடக்கு மாகாண நிர்வாகம் எதனையும் செய்யாமல் இருக்கின்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வடமாகாணசபை விவகாரம் தொடர்பில் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை சந்திப்பதற்கு அமைச்சர் பஷில் ராஜ பக் ஷ கடந்த ஒரு மாதகாலத்திற்கு முன்னர் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் இந்த அழைப்பினை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையிலேயே அமைச்சர் பஷில் ராஜ பக் ஷ இத்தகைய குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கின்றார். கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பனர் எம்.ஏ. சுந்திரனும் சந்தித்துப் பேசியிருந்தனர். இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியுடன் அவரது செயலாளர் லலித் வீரதுங்க, திறைசேரியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தச் சந்திப்பில் வடமாகாண பிரதம செயலாளரை இடமாற்றுவது தொடர்பிலும் ஏனைய விடயங்கள் குறித்தும் இணக்கப்பாடுகள் காணப்பட்டிருந்தன. இந்த இணக்கப்பாடுகள் ஐந்து மாதங்களாகியும் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மத்திய அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்த நிலையில் காணப்படுகின்றார். இந்த நிலையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷவை சந்திப்பதன் மூலம் எத்தகைய நன்மை ஏற்படப்போகின்றது என்ற கேள்வியே முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் மனதில் காணப்படுகின்றது.
வடமாகாணசபை விடயத்தில் மத்திய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் மீண்டுமொரு சந்திப்பு தேவைதானா என்ற நிலைப்பாடே தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் மத்தியில் காணப்படுகின்றது. வடமாகாணசபைக்கும் மத்திய அரசாங்கத்திற்குமிடையில் ஏற்பட்டுள்ள இத்தகைய முறுகல் நிலையானது மாகாணசபையின் செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் குந்தகம் விளைவிப்பதாகவே அமைந்திருக்கின்றது.
இந்நிலையில் வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகளை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள நிதி, நியதிச்சட்டங்களுக்கு அனுமதி வழங்கும் விடயத்தில் ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி இழுத்தடிப்புப் போக்கை கடைப்பிடிப்பதாகவே தெரிகின்றது. இதனால் தான் நிதி, நியதிச்சட்டங்களுக்கு அனுமதி வழங்கும் விடயத்தில் இருவார கால அவகாசம் அவர் கோரியுள்ளதாக தெரிகின்றது. வரி அறவீடு மற்றும் நிதி வசூலிப்பு என்பவற்றுக்கு நிதி, நியதி சட்டங்கள் மாகாணசபையில் நிறைவேற்றப்படவேண்டியது இன்றியமையாததாகும்.
வடமாகாணசபையினால் தயாரிக்கப்பட்டுள்ள நிதி, நியதிச்சட்டமானது கிழக்கு மாகாணசபையின் நிதி, நியதிச்சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கிழக்கு மாகாணசபையின் நிதி, நியதிச்சட்ட பிரதியின் வரைபும் வடமாகாணசபையினால் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனவே கிழக்கு மாகாணசபையின் நிதி, நியதிசட்டத்தை ஒத்த வடமாகாணசபையினால் உருவாக்கப்பட்டுள்ள நிதி, நியதிச் சட்டத்திற்கு அங்கீகாரம் அளிப்பதில் எந்தவித பிரச்சினையும் ஆளுநருக்கு ஏற்படவாய்ப்பில்லை.
இந்த நிலையில் இது குறித்து தனது முடிவை அறிவிக்க இருவார அவகாசம் ஆளுநரால் கோரப்பட்டுள்ளமை இழுத்தடிப்பு நடவடிக்கை என்று கருதவேண்டியுள்ளது. மாகாணசபைக்கு வருமானங்களைப் பெற்றுக்கொள்வதற்கான பல்வேறு சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்டும் வடக்கு முதலமைச்சர் அவற்றை செய்யாமல் இருக்கின்றார் என்று அமைச்சர் பஷில் ராஜபக் ஷ குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால் தற்போது வடமாகாணசபை நிதி, நியதிச்சட்டங்களை உருவாக்கி அவற்றை நிறைவேற்ற முற்படும்போது அதற்கு தடை போடும் வகையிலேயே ஆளுநரினதும் மத்திய அரசாங்கத்தினதும் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து தமிழ் மக்களின் மனங்களை மாற்றமுற்படுவதைவிடுத்து வடமாகாணசபையும் நிதி, நியதி சட்டங்களை நிறைவேற்றுவதற்கு அனுமதித்து மாகாணசபையின் செயற்பாட்டிற்கு மத்திய அரசாங்கம் ஒத்துழைக்கவேண்டும். வடமாகாணசபை விடயத்தில் அரசாங்கமானது உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாதிருப்பது நன்று என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.