ஐ.நாவினதும், அமெரிக்காவினதும் இரண்டு உயரதிகாரிகள்
இன்னும் இரண்டொரு தினங்களில் திடீர் விஜயமாக கொழும்புக்கு வருகை தருகின்றனர்.
இன்னும் இரண்டொரு தினங்களில் திடீர் விஜயமாக கொழும்புக்கு வருகை தருகின்றனர்.
ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் விசாரணைக்குழு இலங்கைக்கு வருகை தந்து தனது விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதிக்கும்படி இலங்கை அரசுத் தலைமையை வற்புறுத்துவதே இந்த இருவரினதும் விஜயங்களின் பிரதான நோக்கம் என தகவல்.
இருவரும் தனித்தனியான விஜயங்களை மேற்கொண்டு அடுத்த இரண்டு, மூன்று தினங்களில் கொழும்பு வந்து சேருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. அடுத்த வார முற்பகுதியில் கொழும்பு வரும் அந்த மூத்த இரு அதிகாரிகளில் ஒருவர் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியாக வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவர் ஒஸ்கார் பெர்னாண்டஸ் டிரான்கோ (OSCAR FERNANDEZ TARANCO) (வயது - 57) - ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம்.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் சார்பில் திடீர் விஜயம் செய்யவிருக்கும் அதிகாரி அதுல் கேசாப் (ATUL KESHAP) - அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவில் பணியாற்றும் தெற்காசியாவுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர். மூத்த இராஜதந்திரி.
இவர்கள் இருவரும் இங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடக்கம் அரசுப் பக்கத்திலும் எதிர்க்கட்சி வரிசையிலும் பல முக்கிய, மூத்த தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்துவர் என்று கூறப்பட்டது.பிரதானமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்களையும் அவர்கள் சந்தித்து விரிவாகப் பேசுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருவரும் வார முற்பகுதியில் அடுத்தடுத்த தினங்களில் கொழும்பு வந்து சேருவர் எனவும் தெரிகிறது.
ஐ.நா.விசாரணை தொடர்பில் இலங்கை ஆட்சிப் பீடத்துக்கு எதிரான சர்வதேச அழுத்தத்தின் ஆரம்ப வெளிப்பாடாக இவர்களது விஜயம் அமைகின்றது என விடயமறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. அண்மையில் சீனாவில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு வருகை தந்திருந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
ஐ.நா. செயலாளர் நாயகத்தை இலங்கைக்கு வந்து நிலைமைகளைப் பார்வையிடுமாறு இலங்கை ஜனாதிபதி அச்சமயம் அழைப்பு விடுத்திருந்தார் என்பது தெரிந்ததே.அந்த அழைப்பை சாக்காகப் பயன்படுத்தி தமது விசேட பிரதிநிதியாக அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐ.நாவின் உதவிச் செயலாளர் நாயகத்தை மேற்படி விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் தருவதற்காக இப்போது கொழும்புக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் அனுப்பி வைக்கின்றார் என்றும் இராஜதந்திர வட்டாரங்களில் பேசப்படுகின்றது.