இறுதிக்கட்டப் போரின் போது நடந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்துவதற்கு ஒத்துழைக்காமல், சூடானில் ஏற்பட்ட நிலைமையே சிறிலங்காவிலும் ஏற்பட அரசாங்கம் வழியேற்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்துவதாக அனைத்துலகத்துக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத படியாலேயே, சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணை நடத்தப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு விசாரணையை நடத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை மூன்றாண்டு காலம் அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால் அந்த உள்நாட்டு விசாரணை நடக்கவில்லை. இதில் அடைப்படைத் தவறு இழைத்தது சிறிலங்கா அரசாங்கம் தான்.
அனைத்துலக விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்ற முடிவை ஏற்கனவே எடுத்துள்ள அரசாங்கம், நாடாளுமன்றத்திடம் தீர்மானம் எடுக்கும் உரிமையை கொடுப்பது கேலிக்கூத்தானது.
கடந்த பல ஆண்டுகளில் சிறிலங்கா தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவை பல தீர்மானங்களைக் கொண்டு வந்தது. அந்தக் காலத்தில் நாடாளுமன்றத்திடம் எதுவும் கேட்கப்படவில்லை. அப்போதெல்லாம் நாடாளுமன்றத்துக்கு வெளியில் தான் முடிவுகளை அரசாங்கம் எடுத்திருந்தது.
சூடான் உள்நாட்டுப் போரின் போது, விசாரணை நடத்துமாறு ஐ.நா சூடானிடம் கேட்டுக் கொண்டது. ஆனால் சூடான் அதனைச் செய்யவில்லை. அதனால் இந்த இரண்டு இனங்களும் ஒன்றாக வாழமுடியாது என்று ஐ.நாவில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இறுதியில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தி நாட்டைப் பிரித்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.