இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் ஒன்றை
தயாரிப்பதற்கு பொது அமைப்புக்கள், பொதுமக்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். இன்று காலை நீர்வேலியில் அமைந்துள்ள கூட்டமைப்பின் பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் முடிந்து 5 வருடங்கள் கடந்தும் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். யுத்தத்திற்கு முன் பட்ட துன்பத்தை விட இப்போது அதிமான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். தற்போது தென்னாபிரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசு முன்வந்துள்ளது. அதற்காக தென்னாபிரிக்காவின் சிறப்பு பிரதிநிதி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த மாதமளவில் அவர் தனது பணிகளை ஆரம்பிக்கவுள்ளார்.
இதேவேளை மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஐ.நா சபை ஆரம்பிக்கவுள்ள நிலையில் எமக்கு வேண்டிய தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களிடமிருந்து கருத்துக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. கருத்துக்களை அனுப்ப விரும்புபவர்கள் மார்டின் வீதி மற்றும நீர்வேலியில் அமைந்துள்ள கூட்டமைப்பின் அலுவலகங்களில் நேரடியாக தெரிவிக்கலாம்.. அல்லது tnaproposal@Gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாக அனுப்பலாம் என தெரிவித்தார்.
கடந்த 2011 ம் ஆண்டில் நாம் ஏற்கனவே தீர்வு திட்டம் ஒன்றை அரசுக்கு வழங்கியிருந்தோம். சிலர் அதில் தமது கருத்துக்கள் உள்ளடக்கப்படவில்லை என தெரிவித்திருந்தனர். அதனைத் தவிர்ப்பதற்காகவே இம் முறை அனைவரிடமிருந்தும் தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதற்கான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இதேவேளை இம் மாத இறுதிக்குள் கருத்துக்களை அனுப்பிவைக்க வேண்டும் என்றும் இவ்வாறு பெறப்படும் கருத்துக்கள் எதிர்வரும் மாதம் பரிசீலிக்கப்பட்டு தீர்வு திட்டம் தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.