பாரம்பரியம் பயன்படட்டும்! விளக்குகிறார் அழகியல் ஆலோசகர் - TK Copy பாரம்பரியம் பயன்படட்டும்! விளக்குகிறார் அழகியல் ஆலோசகர் - TK Copy

  • Latest News

    பாரம்பரியம் பயன்படட்டும்! விளக்குகிறார் அழகியல் ஆலோசகர்

    சீயக்காய் தேய்த்துக் குளிப்பது, விளக்கெண்ணெயைக் கண்களில்
    விட்டுக் கொண்டு தூங்குவது, மஞ்சள் பூசுவது போன்ற பாரம்பரியமான பல அழகு-ஆரோக்கியப் பழக்கங்கள் இன்று இல்லை. காணாமல் போன அவற்றுடன் சேர்ந்து நாம் தொலைத்தது நம் அழகையும் இளமையையும்தான். அந்தக் காலத்தில் பின்பற்றிய எந்த விஷயமுமே அர்த்தமற்றவையல்ல என்பதைக் காலம் கடந்த பிறகுதான் உணர்கிறோம்.

    ஆனாலும், இதுவும் தாமதமில்லை… பாரம்பரிய அழகுக் குறிப்புகளைப் பின்பற்றும் உங்கள் முயற்சியை இன்றிலிருந்தே தொடங்குங்கள்!shot எல்லோருக்கும் பயன்படக்கூடிய அத்தகைய அழகுக் குறிப்புகள் சிலவற்றை விளக்குகிறார் அழகியல் ஆலோசகர் ராஜம் முரளி. அந்தக் காலத்தில் காலையில் எழுந்ததுமே, கொல்லைப் பக்கத்துக்குப் போய், அங்குள்ள புல் தரையில் கால்களை நன்கு தேய்த்துக் கழுவுவார்கள். அந்தப் புல்லின் சாறு பட்டால், கால்கள் சுத்தமாவதுடன், வெடிப்புகள் வராமல் தடுக்கும். இன்றோ கால் கழுவுகிற பழக்கமே இல்லை. 

    அதனால்தான் சிறுவயதிலேயே பாதங்கள் வறண்டு, வெடித்துக் காணப்படுகின்றன. உங்கள் வீட்டுக் குளியலறையில் கரகரப்பான கல் ஒன்றைப் பதித்துக் கொள்ளுங்கள். குளிக்கும் போதும், ஒவ்வொரு முறை கால்களைக் கழுவும் போதும், அந்தக் கல்லில் தேய்த்துக் கழுவலாம். பாதங்கள் பட்டுபோல இருக்க வேண்டும் என விரும்பினால், அந்தக் கல்லை நன்கு சுத்தப்படுத்திவிட்டு, அதிலேயே நல்ல மஞ்சளை இழைத்துவிட்டு, அதன் மேல் கால்களைத் தேய்த்துக் கழுவலாம். 

    ஆரோக்கியத்துக்காக நிறைய பேர் தினமுமோ, அடிக்கடியோ இளநீர் குடிக்கிறார்கள். 30 ரூபாய் கொடுத்து வாங்கும் இளநீரில் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு, உள்ளே இருக்கும் வழுக்கையை கஷ்டப்பட்டு சாப்பிடுவது அல்லது தூக்கி எறிவதும்தான் நடக்கிறது. அதற்குப் பதில் அந்த வழுக்கையை அரைத்து உடல் முழுக்கத் தேய்த்துக் குளித்தால் சருமம் பட்டு போல மென்மையாகும். தோட்டம் வைத்துப் பராமரிக்கிற அளவுக்கு இன்று யாருக்கும் இட வசதியோ, நேரமோ இல்லை. ஆனாலும், சின்னச் சின்ன தொட்டிகளில் திருநீற்றுப் பச்சிலை, துளசி, நித்ய கல்யாணி போன்றவற்றை வைத்துப் பராமரிக்கலாம். இவற்றுக்கு மருத்துவக் குணங்கள் உண்டு. 

    துளசி மற்றும் நித்யகல்யாணியிலிருந்து வீசும் காற்றானது நம் நுரையீரலுக்கு மிகவும் நல்லது. சாம்பிராணி போடுவது இன்று சர்ச்சைக்குரிய விஷயமாகி விட்டது. தரமான சாம்பிராணியை வாங்கிப் பொடித்து, அத்துடன் சந்தனக் கட்டையின் சீவல் (கிடைத்தால்) சேர்த்து தணலில் போட்டுப் புகைய விட்டு, ஒரு மூங்கில் கூடையால் கவிழ்த்து விடவும். 200 மி.லி. நல்லெண்ணெயில் பாதியை தலைக்கும், மீதியில் மஞ்சள் குழைத்து உடல் முழுவதிலும் தேய்த்து ஊறியதும், வெந்நீரில் குளிக்கவும். புகை வருகிற கூடையின் மேல் தலை முடியை விரித்தபடி காட்டவும். சாம்பிராணிப் புகையானது கழுத்திலும் மண்டையிலும் உள்ள நீரை எடுக்கும். 

    அந்த வாசனை நல்ல, ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும். அந்தக் காலத்தில் எல்லாம் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கவென சிறப்புப் பொருட்கள் ஏது? பால் காய்ச்சியதும் படிகிற ஏட்டில், சிறிது புளிப்பான தயிர் சேர்த்து நன்கு அடித்து, அதில் சிறிது கடலை மாவையும் சேர்த்துக் குழைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்து விடுவார்கள். இது சருமம் வறண்டு போவதைத் தடுத்து, சருமச் சுருக்கங்களையும் தள்ளிப் போடும். வெண்ணெய், தயிர், பாலாடை, சிறிது கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றுடன் சில துளிகள் பாதாம் எண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ கலந்து உடல் முழுக்கத் தடவி, சிறிது நேரம் ஊறியதும் குளிக்கலாம். அரப்புத்தூள் என நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். பார்ப்பதற்குப் பச்சையாக இருக்கும். 

    ஒரு பங்கு அரப்புத்தூளுடன், 1 பங்கு சீயக்காய் தூள் கலந்து தலையில் எண்ணெய் வைத்தோ, வைக்காமலோ, தலைக்குத் தேய்த்துக் குளித்தால், கூந்தல் மென்மையாகும். இன்று யாரும் கஞ்சி வடித்தெல்லாம் சாதம் வைப்பதில்லை. தலைக்குக் குளிக்கிற நாட்களில் மட்டும், கைப்பிடி அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு, நிறைய தண்ணீர் விட்டு, வெந்ததும் கஞ்சியை வடித்து, தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் பளபளப்பாவதுடன் வளர்ச்சியும் தூண்டப்படும். விளக்கெண்ணெயில் திரி போட்டு விளக்கேற்றவும். சந்தனத்தூளைக் கரைத்து ஒரு தட்டில் தடவி, அதை விளக்கின் மேல் கவிழ்த்துப் போட்டு, புகை அதில் படியும்படி வைக்கவும். அதில் படிகிற கருமையான படிவத்துடன், சிறிது விளக்கெண்ணெய் கலந்து கண்களுக்கு மையாக உபயோகிக்கலாம். 

     இந்தக் கண் மையில் ஒவ்வாமை என்ற பேச்சுக்கே இடமில்லை. கண்களுக்கும் குளிர்ச்சி. கண்கள் பளபளப்பாகும். வெற்றிலைப்பாக்கு போடுகிற பழக்கமும் இன்று மறைந்து வருகிறது. அந்தப் பழக்கம் இருந்தவர்களுக்கு அதிலுள்ள கால்சியம் சத்து காரணமாக மூட்டுவலிகள் வராமலிருந்தது. வெற்றிலை போடுகிற பழக்கமுள்ள தாய்க்குப் பிறக்கும் குழந்தைக்கும் கால்சியம் குறைபாடு வராது. அஜீரணத்துக்கும் நல்லது… அழகுக்கும் உதவும்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: பாரம்பரியம் பயன்படட்டும்! விளக்குகிறார் அழகியல் ஆலோசகர் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top