இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐக்கிய
நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை விசாரணைக் குழுவை அமைத்து வெளிமட்ட விசாரணைகளை ஆரம்பித்தால் அதனை எதிர் கொள்வதற்கு அரசாங்கத்திடம் திட் டம் உள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் உயர்மட்டம் மற் றும் வெளிவிவகார அமைச்சு என்பன இந்த விடயத்தில் வெறுமனே இருக்கவில்லை.அனைத்து விடயங்களையும் ஆராய்ந்துகொண்டே இருக்கின்றோம். அது தொடர்பில் எம்மிடம் ஒரு திட்டம் உள்ளது. அதனை உரிய நேரத்தில் நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஐ.நா.மனித உரிமைகள் பேரவை யின் 26ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமர் வில் உரையாற்றவுள்ள நவநீதம் பிள்ளை இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பான விசாரணைக் குழுவின் விபரங்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையிலேயே அரசாங்கம் அதனை எதிர்கொள்ள தம்மிடம் திட்டம் ஒன்று உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அந்த உரையின்போது இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்து விசாரிப்பதற்கான குழு குறித்த தகவல்களை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த விடயம் குறித்து அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிடுகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை முற்றாக நிராகரித்துவிட்டது. அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை பக்கச்சார்பானது என்பதனையும் தெளிவாக குறிப்பிட்டுவிட்டோம்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மனித உரிமைப் பேரவையில் ஆற்றிய உரையிலேயே நவநீதம் பிள்ளை பக்கச்சார்பாக செயற்படுகின்றார் என்பதனை தெளிவாகவே குறிப்பிட்டுவிட்டார். இந்நிலையில் இவ்வாறு இலங்கை அரசாங்கம் பிரேரணையை நிராகரித்துவிட்ட நிலையில் விசாரணை செயற்பாடுகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை இதன் பின்னர் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு நாம் பொறுப்பாகமாட்டோம். அதேவேளை அரசாங்கத்தின் உயர்மட்டம் மற்றும் வெளிவிவகார அமைச்சு என்பன இந்த விடயத்தில் வெறுமனே இருக்கவில்லை.
அனைத்து விடயங்களையும் ஆராய்ந்துகொண்டே இருக்கின்றோம். எவ்வாறு இந்த விடயங்களை எதிர்கொள்வது என்பது குறித்தும் அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராய்ந்துவருகின்றோம். அந்தவகையில் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை விசாரணைக் குழுவை அமைத்து வெளிமட்ட விசாரணைகளை ஆரம்பித்தால் அதனை எதிர்ககொள்வதற்கு அரசாங்கத்திடம் திட்டம் உள்ளது. அதனை உரிய நேரத்தில் எதிர்கொள்வோம் . அது எவ்வாறான திட்டம் என்பதனை தற்போது கூற முடியாது. ஆனால் எம்மிடம் அதற்கான வேலைத்திட்டம் உள்ளது என்றார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில் உரையாற்றவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனது உரையின்போது ,இலங்கை குறித்து கருத்து வெளியிடுவார் என்றும் விசாரணை குழு நியமனம் மற்றும் மற்றும் அதன் காலவரையறை தொடர்பான அறிவிப்பை செய்யலாம் எனவும் வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன. இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்த ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் நியமிக்கப்படவுளள உறுப்பினர்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தற்போது ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் 13 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கொபி அனானின் பெயர் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதாவது குறித்த விசாரணைக் குழுவின் தலைவராக கொபி அனான் நியமிக்கப்படலாம் என்பதும் மேலதிக தகவலாக உள்ளது. மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் ஆரம்பமாகும்போது முன்னைய கூட்டத் தொடரின் பின்னர் அதுவரை காலமும் இடம்பெற்ற விடயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனித உரிமை ஆணையாளர் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு விளக்கமளிப்பது வழக்கமாகும்.
அதன்படியே இலங்கை குறித்த விசாரணைக் குழு குறித்து பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அவர் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டே இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டிருந்தது. இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் பிரேரணையை எதிர்த்து 12 நாடுகளும் வாக்களித்தன. அத்துடன் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்படுவது தொடர்பான வாய்மூல அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடரிலும் பரந்துபட்ட முழுமையான ஆவண அறிக்கை எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 28 ஆவது அமர்வுக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.