இந்தியா ஐ.நா.வில் ஒரு தீர்மானத்தை முன்மொழிய வேண்டும்
என்று நான் கோருகிறேன். அதில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையைக் கண்டிப்பதோடு அதில் தொடர்புடையவர்கள் அனைவரும் பொறுப்பாக்கப்படுவதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அதோடு மேற்படி தீர்மானமானது சிறிலங்காவில் வாழும் தமிழர்கள் மத்தியிலும் உலக பூராகவும் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் தனித் தமிழ் ஈழத்துக்கான ஒரு பொது வாக்கெடுப்பையும் கோர வேண்டும்........................இது அண்மையில் செல்வி ஜெயலலிதா திரு. நரேந்திர மோடியைச் சந்தித்த போது வழங்கிய மனுவில் காணப்படும் ஒரு கோரிக்கை.
இது அண்மையில் செல்வி ஜெயலலிதா திரு. நரேந்திர மோடியைச் சந்தித்த போது வழங்கிய மனுவில் காணப்படும் ஒரு கோரிக்கை.
அம்மனுவில் இது இரண்டாவதாகக் காணப்படுகிறது. முதலாவது நீர்ப் பிரச்சினை பற்றியது. இரண்டாவது ஈழத் தமிழர்கள் பற்றியது. இம்மனுவில் மட்டுமல்ல, அவர் தனது தேர்தல் பிரசார மேடைகளிலும் ஈழத் தமிழர் விவகாரத்திற்கு இதேயளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். தமிழ் நாட்டுத் தேர்தலில் ஈழத் தமிழர் விவகாரம் ஒரு பிரதான தீர்மானிக்கும் காரணி இல்லைத்தான். ஆனால், அது ஓர் உப காரணி. வெற்றி பெறுகிறவரின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தவும், தோல்வியுறுபவரின் தோல்வியை மேலும் உறுதிப்படுத்தவும் அதைக் கையாள முடியும்.
நடந்து முடிந்த தேர்தலில் ஜெயலலிதா அதைத்தான் செய்தார். ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த பேரழிவிலிருந்தும், பெரும்தோல்வியிலிருந்தும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஒரு குற்றவுணர்ச்சி தமிழ் நாட்டில் உண்டு. இக்குற்றவுணர்ச்சியை ஜெயலலிதா கருணாநிதிக்கு எதிராக வெற்றிகரமாகத் திரும்பியிருக்கிறார். குறிப்பாக, நாலாம் கட்ட ஈழப்போரின் இறுதிக் கட்டத்திலிருந்து அவருடைய ஈழம் தொடர்பான நடவடிக்கைகளில் ஒருவிதத் தொடர்ச்சியையும் விட்டுக் கொடுப்பின்மையையும் கவனிக்க முடிகிறது. ஆனால், அதேசமயம், விடுதலைப்புலிகள் இயக்கம் பலமாக இருந்த கால கட்டத்தில் குறிப்பாக, ரஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் அவர் மிகவும் மூர்க்கமாக அந்த இயக்கத்தை எதிர்த்தார். 2008ஆம் ஆண்டு 10ஆம் மாதம் 23ஆம் திகதி அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது...
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு நளினி உட்பட ரஜீவ் கொலைக் குற்றவாளிகளை முதல்வர் கருணாநிதி மரண தண்டனையிலிருந்து தப்புவிக்க முயற்சி செய்கிறார். கருணாநிதி ஆட்சிக்கு வரும் போதெல்லாம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழகத்தில் பகிரங்கமாக நடைபெறுகின்றன. அவர் இதையெல்லாம் தடுத்து நடவடிக்கை எடுப்பதில்லை. என் ஆட்சியாக இருந்தால் நான் கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பேன்...............
புலிகளின் நிர்வாக மையமாக இருந்த கிளிநொச்சியும் வீழ்ச்சியுற்ற பின் வெளிவந்த அறிக்கை இது. ஆனால், இப்பொழுது அவர் தனித் தமிழ் ஈழத்தை விடாப்பிடியாக ஆதரிக்கின்றார். குறிப்பாக, நாட்டில் கூட்டமைப்பு தமிழீழத்தைக் கைவிட்ட பின்னரும் அவர் பொதுசன வாக்கெடுப்பைக் கேட்கிறார்.
தமிழ் நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் மத்தியில் பொதுவான ஓர் அபிப்பிராயம் உண்டு. அதாவது, கருணாநிதியின் ஆட்சிக் காலத்தையும் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஜெயாவின் ஆட்சிக் காலத்தில் வெளிப்படையாக ஒரு எதிர்நிலைப் போக்குக் காணப்பட்டாலும் நடைமுறையில் கருணாநிதியின் ஆட்சிக் காலங்களில்தான் ஈழத் தமிழர்கள் மீதான நெருக்கடிகள் அதிகமாயிருப்பதுண்டு என்பதே அது.
ஆளுமை தொடர்பில் ஒப்பிடும்போதும் ஜெயா, கருணாநிதியை விடவும் வெளிப்படையானவர் என்றும் தந்திரங்கள் குறைந்தவர் என்றும் ஒரு பொதுவான அபிப்பிராயம் உண்டு. அவர் எதையும் வெளிப்படையாகவே கதைப்பதோடு முடிவுகளையும் வெட்டொன்று துண்டிரண்டாக எடுப்பவர் என்றும் ஒரு அபிப்பிராயம் உண்டு.
ஆனால், வை.கோவை சிறை வைத்தவர் அவர் தான் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அது மட்டுமல்ல, தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்கள் வாழும் முகாம்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் நிலைமைகள் இப்பொழுதும் அப்படியே தானிருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
ஜெயா உண்மையாகவே ஈழத் தமிழர்கள் நலனில் அக்கறையுள்ளவராக இருந்தால் தமிழ் நாட்டில் உள்ள அகதி முகாம்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் தொடர்பிலும் அதிரடியான முடிவுகளை எடுத்திருக்க வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்படுகின்றது. அதாவது அவர் தனது ஆட்சியதிகாரத்துக்குட்பட்ட ஒரு விவகாரத்தில் காட்டாத மனிதாபிமானத்தை தனது ஆட்சியதிகாரத்திற்கு வெளியில் உள்ள விவகாரத்தில் காட்டுவது அவருடைய விசுவாசத்தை சந்தேகிக்க வைப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இத்தகையதொரு பின்னணியில் ஈழத் தமிழர்கள் தொடர்பிலான ஜெயலலிதாவின் தீவிரம் குறித்து பின்வரும் வியாக்கியானங்கள் முன்வைக்கப்படுகின்றன.
முதலாவது, அவர் இயல்பாகவே வெளிப்படையானவர் வெட்டொன்று துண்டிரண்டாகப் பேசுபவர். எனவே, ஈழத் தமிழர்கள் தொடர்பில் தமிழ் நாட்டில் நிலவும் குற்றவுணர்ச்சிக்குத் தலைமை தாங்குவதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு மெய்யாகவே எதாவது ஒரு தீர்வைப் பெற்றுத் தர விரும்புகிறார் என்பது.
இரண்டாவது, அவ்விதம் குற்றவுணர்ச்சிக்குத் தலைமை தாங்குவதன் மூலம் அதற்கு ஏனைய தீவிர இனமானக் கட்சிகள் அல்லது இயக்கங்கள் தலைமை தாங்குவதைத் தடுக்க முடியும். இதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அலையை எப்பொழுதும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். அதோடு பெரிய பிரதான கட்சிகள் அல்லாத ஏனைய செயற்பாட்டு இயக்கங்கள் அரங்கின் முன்னணிக்கு வந்து எதிர்காலத்தில் அவை தீர்மானிக்கும் சக்திகளாக வளர்ச்சி பெறுவதைத் தடுப்பதும். அதாவது, எல்லாத் தீவிர சக்திகளை விடவும் அதிதீவிர சக்தியாகத் தன்னைக் காட்டிக் கொள்வதன் மூலம் தமிழ் நாட்டில் ஈழத் தமிழர் விவகாரத்தை எப்பொழுதும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது.
மூன்றாவது, அவ்விதம் தமிழ் நாட்டில் ஈழத் தமிழர் அரசியலைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம் தேர்தலில் கருணாநிதியும் உட்பட ஏனைய இனமான கட்சிகளையும் இயக்கங்களையும் தனக்குக் கீழ்ப்பட்டவைகளாக வைத்திருப்பது.
நாலாவது, இவ்வாறு ஈழத் தமிழர் விவகாரம் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் இருப்பதை நடுவண் அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் புலனாய்வுக் கட்டமைப்புக்களும் ஆதரிக்கும் என்று ஒரு விளக்கமும் உண்டு.
ஏனெனில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான அரசியலுக்கு செயற்பாட்டு இயக்கங்கள் தலைமை தாங்கினால் அது அதிகம் இலட்சியபூர்வமானதாக இருக்கும். எனவே, அதைக் கட்டுப்படுத்துவது கடினம். பதிலாக அதை தேர்தல் அரசியலுக்காகப் பயன்படுத்தும் கட்சிகள் கையாண்டால் அவற்றைக் கட்டுப்படுத்துவது ஒப்பீட்டளவில் இலகுவானது.
இவ்வாறு ஜெயலலிதாவின் தீவிரத்தை அனுமதிக்க வேண்டிய ஒரு தேவை நடுவண் அரசுக்கு உண்டு. தமிழ் நாடு கொந்தளிக்கிறது. எனவே, ஈழத் தமிழர் விவகாரத்தில் தலையிட வேண்டியிருக்கிறது என்று அவர்கள் கொழும்புக்கும் உலக சமூகத்திற்கும் எடுத்துக் காட்ட முடியும்.
எனவே, ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் ஜெயலலிதாவின் தீவிரத்தை ஒரு அழுத்தக் காரணியாகப் பேணி வைத்திருக்க நடுவண் அரசு விரும்பக்கூடும்.
ஆறாவது, ஜெயலலிதாவைப் பொறுத்த வரை அவருடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அது வெற்றிதான். ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் அது வெற்றிதான். எப்படியெனில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது அவருடைய சாதனையாகக் கொண்டாடப்படும். அதேசமயம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் இக்கோரிக்கையின் தீவிரம் காரணமாக இது தொடர்பில் கருணாநிதி ஜெயாவை முந்திச் செல்ல முடியாதிருக்கும். அப்படி முந்திச் செல்வதாக இருந்தால் ஒன்றில் அவர் உண்மையாக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவேண்டும். அல்லது அவருடைய தொண்டர்கள் தீக்குளிக்க வேண்டியிருக்கும்.
ஏழாவது, விடுதலைப்புலிகள் இயக்கம் பலமாக இருந்த வரை உலகத்தமிழர்களுக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் தமிழகத் தலைவர்களுக்கு சில சங்கடங்கள் இருந்தன.ஆனால் இப்பொழுது ஜெயலலிதாவுக்கு அத்தகைய தடைகள் இல்லை.உச்சதீவிர நிலைப்பாட்டை எடுப்பதன் முலம் அவர் உலகத்தமிழர்களுக்குத் தலைமை தாங்க எத்தனிக்கிறார்.
மேற்கண்ட வியாக்கியானங்களைத் தொகுத்துப் பார்த்தால் பின்வரும் முடிவுக்கு வரலாம். ஜெயலலிதா தமிழீழத்தை தமிழீழத்திற்காக ஆதரிக்கிறாரோ இல்லையோ தமிழகத்தில் அரசியல் செய்வதற்காக ஆதரிக்கிறார் என்பது ஓர் அடிப்படை உண்மை. இது, தமிழர்கள் மத்தியில் அவருக்குள்ள படிமத்தை (இமேஜை) மேலும் உயர்த்த உதவும். அதோடு அடுத்த தேர்தலுக்குரிய மிகப் பலமானதொரு முதலீடாகவும் அமையும். அதேசமயம் ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை அது உடனடிக்கு நம்பிக்கையூட்டும் மிகப் பிரகாசமான ஒரு சமிக்ஞைதான். நீண்ட எதிர்காலத்தில் அது எத்தகைய பின் விளைவைக் கொண்டு வரும் என்பது ஈழத் தமிழர்கள் தமிழ் நாட்டை எந்தளவுக்கு வெற்றிகரமாகக் கையாளப் போகிறார்கள் என்பதில் தான் தங்கியுள்ளது.
ஜெயாவின் தீவிரம் ஒரு பிரதான கதவை ஆகக்கூடிய பட்சம் அகலத் திறந்திருக்கிறது. அதனூடாக நிலைமைகளைக் கையாள வேண்டியது ஈழத் தமிழர்கள் தான். கூட்டமைப்பு அதை செய்யுமா?
சில வாரங்களுக்கு முன்பு கூட்டமைப்பு ஜெயாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அக்கடிதத்தின் உள்ளடக்கத்தின் அடிப்படையிலும் கூட்டமைப்பின் தலைவர் பல மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் வைத்துத் தெரிவித்தவற்றின் அடிப்படையிலும் கூறின் அவர்களுடைய மனதிலிருப்பது வடக்கு-கிழக்கு இணைந்த ஒரு அரைச் சமஷ்டி முறைமைதான். இந்தியாவில் இருப்பதைப் போன்ற ஒரு அரைச் சமஷ்டிதான். கடந்த ஆண்டு இலங்கைக்கு வந்து போன சுஸ்மா ஸ்வராஜ் இதைத் தமிழ் நாட்டில் வைத்துத் தெரிவித்திருந்தார். ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் தமிழ் நாட்டுத் தலைவர்கள் தீவிரமாகப் பிரிவினையைக் கோருகிறார்கள். ஆனால் அங்குள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பிரிவினையைக் கோரவில்லை என்ற தொனிப்பட சுஸ்மா ஸ்வராஜ் கருத்துத் தெரிவித்திருந்தார். இப்பொழுது வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் அவர் அநேகமாக அதே நிலைப்பாட்டுடன் தான் இப்பொழுதும் இருப்பார் என்று கருத இடமுண்டு. ஏனெனில், மோடி அரசாங்கமும் 13 சக வைப் பற்றியே கூறி வருகிறது.
13 சகவோ, சயவோ 13ஆவது திருத்தம் பற்றி இந்தியா வற்புறுத்துவது தமிழர்களுக்கு ஒரு தீர்வு வழங்கப்படவேண்டும் என்ற நோக்கில் மட்டுமல்ல, அதைவிட ஆழமான ஒரு காரணமும் உண்டு. பெருமளவுக்குக் காலாவதியாகிவிட்ட இலங்கை - இந்திய உடன்படிக்கையின் ஒரே தப்பிப் பிழைத்திருக்கும் உறுப்பு – அதாவது பதாங்க உறுப்பு – 13 ஆவது திருத்தம் தான். எனவே, அதைப் பற்றிப் பிடிப்பதன் மூலம் இலங்கை - இந்திய உடன்படிக்கைக்கு மேலும் உயிர் கொடுக்கலாம் என்று புதுடில்லி சிந்திக்க இடமுண்டு. ஏனெனில், அந்த உடன்படிக்கை பலமாக இருக்கும் வரை இச்சிறு தீவின் மீதான இந்தியாவின் மேலாண்மையை அங்கீகரிக்கும் ஒரு அனைத்துலகப் பெறுமதி மிக்க ஆவணமும் அமுலில் இருக்கும். எனவே, 13ஆவது திருத்தத்தைப் பற்றி இந்தியா பிரஸ்தாபிக்கிறது என்றால் அது மறைமுகமாக இச்சிறு தீவின் மீதான தனது மேலாண்மையையும் நினைவுட்ட முயல்கிறது என்றே பொருள்.
இத்தகையதொரு பகைப்புலத்தில் அரைச் சமஷ்டியைக் கோரும் கூட்டமைப்பானது முழுப் பிரிவினையைப் கோரும் ஜெயலலிதாவை எப்படிக் கையாளப்போகிறது?
நடந்து முடிந்த தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வெற்றியைக் கண்டு அவருடைய எதிரிகள் மட்டும் திகைக்கவில்லை. தமிழ் நாட்டில் உள்ள சில மனித உரிமை ஆர்வலர்களும் அது பற்றிக் கவலைப்படுகிறார்கள். இவ்வெற்றி காரணமாக ஜெயலலிதா மேலும் கட்டுப்படுத்தப்பட முடியாதவராக வளர்ச்சி பெறக்கூடும் என்பதே அவர்களுடைய கவலைக்குக் காரணம். உலகின் ஆகப் பெரிய ஜனநாயகத்தில் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவியாக அவர் பேரெழுச்சி பெற்றிருக்கிறார். தமிழ் நாடானது நடுவண் அரசிடமிருந்து மேலும் மேலும் தூரமாகப் போய்விடக்கூடாது என்று டில்லியில் இருப்பவர்களைக் கவலைப்பட வைக்கும் ஒரு வெற்றி அது. தமிழ் நாடு ஏற்கனவே பிரிவினைக் கோரிக்கையை முன்வைத்த ஒரு மாநிலம். அந்த மாநிலத்தின் முதலமைச்சர் அயலில் உள்ள சிறிய நாட்டில் வாழும் தமிழர்களுக்கான பிரிவினையைக் கோரி நிற்கிறார்.
இந்நிலையில், மைய நீரோட்டத்திலிருந்து தமிழ் நாடு விலகிச் சிந்திப்பதை இயன்றளவுக்குக் குறைக்க வேண்டும் என்று புதுடில்லியிலிருப்பவர்கள் சிந்திக்க இடமுண்டு. இதுவும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவைக் கையாள்வதற்குரிய வாய்ப்புக்களைக் கூட்டியிருக்கிறது.
இதன்படி இப்பொழுது ஈழத் தமிழர்கள் மோடியை நேரடியாகவும் கையாளலாம். ஜெயலலிதாவுக்கூடாகவும் கையாளலாம். அது போலவே ஜெயலலிதாவை நேரடியாகவும் கையாளலாம் அதேசமயம் தமிழ் நாட்டில் உள்ள தீவிர இனமானக் கட்சிகள் மற்றும் செயற்பாட்டியங்கங்களுக் கூடாகவும் அழுத்தங்களைப் பிரயோகித்துக் கையாளலாம்.
அதாவது, இந்தியாவை ஈழத் தமிழர்கள் நோக்கு நிலையிலிருந்து கையாள்வதற்குரிய வாய்ப்புக்கள் முன்னெப்பொழுதையும் விட அதிகரித்து வருகின்றன என்று பொருள்.
ஆனால், இப்படி எழுதுவதன் மூலம் இக்கட்டுரையானது ஜெயாவும், மோடியும் ஈழத் தமிழர்களைக் காதலிக்கிறார்கள் என்று கூற முற்படவில்லை. மோடிக்கென்று ஒரு நிகழ்ச்சி நிரலுண்டு. அவர் அதற்கூடாகத்தான் ஈழத் தமிழர்களைப் பார்ப்பார். அவர் அவருடைய நிலையான நலன்களிற்கூடாகவே சிந்தப்பார். அது போலவே ஜெயலலிதாவுக்கு அவருடைய கட்சி சார் நலன்கள் உண்டு. அவர் அவருடைய நலன்களுக்கூடாகவே சிந்திப்பார். இக்குரூர உலகில் ஒவ்வொருவரும் அவரவர் நலன் சார்ந்தே சிந்திப்பார்கள். ஈழத்தமிழர்கள் தான் ஈழத்தமிழர்களுக்காகச் சிந்திக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில் அவர்கள் தமது தலைவர்களை வாக்களித்த மக்களுக்காக சிந்திக்குமாறு தூண்ட வேண்டும்.
ஆய்வாளர் -நிலாந்தன்