சூரிய சக்தியில் இயங்கும் விமானம் ஒன்று அடுத்த ஆண்டு
உலகைச் சுற்றி பறக்கவிருக்கின்ற நிலையில், பரிசோதனை வெள்ளோட்டமாக சுவிட்சர்லாந்தில் அவ்விமானம் முதல் முறையாக பறக்கவிடப்பட்டுள்ளது.சென்ற வருடம் அமெரிக்காவின் குறுக்காக பறந்த சோலார் இம்பல்ஸ் 1 என்ற விமானத்தின் பெரிய மற்றும் மேம்பட்ட வடிவம் தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த சோலார் இம்பல்ஸ் 2 விமானம் ஆகும். வடிவ முன்மாதிரியான இந்த விமானம் ஏற்கனவே பல உலக சாதனைகளை செய்துள்ளது. மனிதரை சுமந்து தொடர்ந்து நெடுந்தூரம் பறந்த சூரிய சக்தி விமானமாக 26 மணி நேரம் இந்த விமானம் பறந்துள்ளது.
மாற்று ஆதார எரிசக்தியின் எல்லைகளை விரிவாக்க தாம் விரும்புவதாக இந்த விமானத்தின் விமானிகளான பெர்ட்ராண்ட் பிக்கார்ட் மற்றும் ஆந்த்ரே போர்ஷ்பெர்க் ஆகியோர் கூறுகின்றனர். கரிம இழைகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமானத்தின் இறக்கைகள் போயிங் 747 ரக விமானத்தின் இறக்கைகளை விட அகலமானவை என்றாலும், இந்த விமானத்தின் எடையோ ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவு.