விசாரணைகள் இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகும் அதேவேளை- குறித்த விசாரணை தமிழரின் அரசியல் தீர்வுக்கான வழியினை உறுதி செய்யும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில்- சமகால அரசியலும் ஜெனிவாத் தீர்மானமும எனும் தலைப்பிலான மக்களைத் தெளிவுபடுத்தும் கூட்டங்கள் அம்பாறை- மட்டக்களப்பு மாவட்டங்களில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றன. குறித்த கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது :-
”ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசால் சர்வதேச சமூகத்திற்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில்- ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை ஜூன் மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மைகள் வெளிப்பட வேண்டும் என்பதே இந்த விசாரணையின் நோக்கமாகும்.
குறித்த விசாரணை- குற்றத்துக்காகத் தண்டிக்கப்படுவதகு அப்பால் எமது தமிழின அரசியல் தீர்வுக்கான வழி வகையை உறுதி செய்யும். எனவே- தமிழினத்துக்கு நீதியான விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை வீண்போகாது என்பதற்காகக் கட்டுக்கோப்புடனும்- நிதானமாகவும் நாம் செயற்பட வேண்டும்” என்றும் கூறினார்.