ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அந்த பதவியில் இருந்து விலக உள்ளார். இந்நிலையில் அந்தப் பதவிக்கு மர்சுகி தருஸ்மன் நியமிக்கப்பட உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் ஓகஸ்ட் மாதம் முடிவடையுள்ள நிலையில், மனித உரிமை ஆணையாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் தருஸ்மன் முன்னணியில் இருக்கின்றார். இலங்கையின் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனக்கு அறிக்கையொன்றை பெறுவதற்காக நியமித்த நிபுணர்கள் குழுவின் தலைவராக தருஸ்மன் செயற்பட்டார். இந்த நிபுணர்கள் குழு இலங்கைக்கு வர அரசாங்கம் அனுமதிக்கவில்லை என்பதுடன் அது பற்றி ராஜதந்திர ரீதியில் பரவலாக பேசப்பட்டு வந்த விடயமாக இருந்தது.
இந்தோனேசியாவின் பிரபலமான அரசியல்வாதியான மர்சுகி தருஸ்மன், அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சுகாட்டோவின் லோக்கார் கட்சியின் முக்கிய உறுப்பினராவார். இதனை தவிர தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை ஆணைக்குழு உட்பட பலவற்றில் உயர் பதவிகளை வகித்துள்ள தருஸ்மன், ஆசிய மனித உரிமை வள மத்திய நிலையத்தின் ஆரம்பகர்த்தா என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் அமைப்பு வட கொரியா தொடர்பில் விசாரணை நடத்த நியமித்த குழுவின் உறுப்பினரான பணியாற்றிய தருஸ்மன், இராஜதந்திர ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளராவார்.
எது எப்படி இருந்த போதிலும் நவநீதம்பிள்ளையின் செயற்பாடுகளை விட தருஸ்மனின் செயற்பாடுகள் இலங்கைக்கு பாதகமாக அமையும் என இராஜதந்திர வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.