விடுதலைப்புலிகள் மீதான தடை தொடர்வது எதனால்? – நிலாந்தன் - TK Copy விடுதலைப்புலிகள் மீதான தடை தொடர்வது எதனால்? – நிலாந்தன் - TK Copy

  • Latest News

    விடுதலைப்புலிகள் மீதான தடை தொடர்வது எதனால்? – நிலாந்தன்

    விடுதலைப்புலிகள் இயக்கம் வீழ்ச்சியுற்று ஐந்தாண்டுகளாகிவிட்டன. இவ் ஐந்தாண்டு
    காலப் பகுதியில் தமிழ் அரசியல் தொடர்பில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்கள், மாற்றமின்மைகளை பிரதானமாக மூன்று பரப்புக்களிற்கூடாகப் இன்று இக்கட்டுரை  பார்க்கிறது.மேற்கு நாடுகள், இந்தியா மற்றும் தென்னிலங்கை ஆகியனவே இம்மூன்று பரப்புகளுமாகும்.முதலில் மேற்கு நாடுகள். கடந்த ஐந்தாண்டுகளில், ஈழத் தமிழர்களை நோக்கி ஓர் அனுதாப அலை உருவாகியிருக்கிறது. ஊடகங்கள் – மனித உரிமை நிறுவனங்கள், மனிதாபிமான அமைப்புகள், புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகள் போன்றோரால் உருவாக்கப்பட்டிருக்கும் இவ்வனுதாப அலை காரணமாகவும், ஆண்டு தோறும் ஜெனிவாவில் நிகழும் மனித உரிமைக் கூட்டத் தொடர் காரணமாகவும் மேற்கு நாடுகள் ஈழத் தமிழர்களைத் தத்தெடுத்துவிட்டது போலவும், ஈழத் தமிழ் அரசியலின் ஈர்ப்பு மையம் மேற்கை நோக்கி நகர்ந்துவிட்டது போலவும் ஒரு தோற்றம் உருவாகப் பார்;க்கிறது.
    ஆனால், இது ஒரு தோற்றம் மட்டுமே. சீனாவை நோக்கிச் சரியும் இலங்கை அரசாங்கத்தை முறிக்காமல் வளைப்பதற்கு ஈழத் தமிழர்களை ஒரு கருவியாக மேற்கு நாடுகள் கையாண்டு வருகின்றன. இத்தேவை கருதி அவை அப்படியொரு தோற்றத்தை அதன் உண்மையான அளவை விட பெரியதாக உருப்பெருக்கிக் காட்டி வருகின்றன. அது போலவே தமிழ் டயஸ்பொறாவுக்கும், அதன் வல்லமைக்கு மீறிய ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
    கடந்த ஐந்தாண்டுகளாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான மேற்கு நாடுகளின் தடையை நீக்க தமிழ்  டயஸ்பொறாவினால் முடியவில்லை. அதேசமயம், அந்த இயக்கத்தின் ஆயுதம் ஏந்தாத பலவீனமான நீட்சிகளாகக் கருதத்தக்க நாடு கடந்த தமிழீழ அரசு போன்றவற்றை மேற்கு நாடுகள் தடை செய்யவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
    இதில் தமிழர்களுக்குத் திட்டவட்டமாக ஒரு செய்தி உணர்த்தப்படுகிறது. அதாவது, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வன்சக்தியை மேற்கு நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அதன் மென் சக்தியை அவை ஓரளவுகு;கு கண்டும் காணாமல் விடுகின்றன. லண்டனில் வசிக்கும் ஒரு ஆவணச் செயற்பாட்டாளர் ஒருமுறை கூறினார், ரணில் – பிரபா உடன்படிக்கை எனப்படுவது விடுதலைப்புலிகள் இயக்கமானது அதன் வன் சக்தியைப் பேணிய படி மேற்குக்கு பிரச்சினையில்லாத ஒரு மென்சக்தியாக மாறுவதற்குத் தரப்பட்ட ஒரு சந்தர்ப்பம் தான் என்று, எனவே, கடந்த ஐந்தாண்டு கால மேற்கத்தைய அரசியல் அரங்கைப் பொறுத்த வரை புலிகள் இயக்கத்தைக் குறித்த அணுகுமுறையில் எதுவித மாற்றமும் நிகழவில்லை.
    ஆனால், இது புலிகள் இயக்கத்துக்கு மட்டும் எதிரான ஒரு போக்கு அல்ல. அந்த இயக்கத்தை ஒத்த உலகெங்கிலுமுள்ள எல்லா ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கும் எதிரான ஒரு நிலைப்பாடுதான். குறிப்பாக, செப்ரெம்பர் 11இற்குப் பின்னிருந்து முடுக்கிவிடப்பட்டிருக்கும் உலகளாவிய ஒரு எதிர் வியூகம் இது. பின்வரும் அம்சங்களைக் கொண்ட எந்த ஒரு ஆயுதப் போராட்ட அமைப்புக்கும் இது எதிரானது.
    முதலாவது அம்சம் – அந்த இயக்கம் அனைத்துலக யதார்த்தத்தை நோக்கித் தனது கனவுகளை வளைக்கத் தயாரற்றிருப்பது.

    இரண்டாவது – வளைவதை விடவும் முறிந்து போவதே மேல் என்று நம்புவது.

    மூன்றாவது – தனது கனவுகளை  அடைவதற்காக வன்சக்தியைப் பிரயோகிப்பது.

    நாலாவது – அவ்வாறு வன்சக்தியைப் பிரயோகிக்கும்போது பலவீனமானவர்களின் பலமான ஆயுதமாக தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வது.

    ஐந்தாவது – தேர்தல் வழிமுறைகளில் நேரடியாக ஈடுபடுவதில் ஆர்வமற்றிருப்பது.
    மேற்சொன்ன பிரதான பண்புகளைப்பெற்ற எந்தவொரு அமைப்பையும் மேற்கு நாடுகள் தடை செய்துள்ளன. எனவே, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சியாக மேற்கில் செயற்படும்; எவரும் அந்த இயக்கத்தின் வன்சக்தியின் தொடர்ச்சி என்று சந்தேகிக்கப்பட்டால் அவர்கள் கண்காணிக்கப்படும் ஓர் அரசியல் மற்றும் படைத்துறை யதார்த்தமே இப்பொழுது மேற்கில் காணப்படுகிறது.
    அண்மையில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டிருக்கும் அறிக்கையை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டிருக்கும் மேற்படி அறிக்கையில், ”புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருகிறது. அது இலங்கைக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும். வெளிநாடுகளில் உள்ள புலம் பெயர் அமைப்புகளில் உள்ள நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் புலிகள் ஆயுதக் கொள்வனவிலும் ஆர்வம் காட்டி வருகன்றனர்….’ என்று கூறப்பட்டுள்ளது.
    புலிகள் இயக்கமானது தமிழ் டயஸ்பொறாவின் உதவியுடன் மீளச் செயற்பட முயல்வதாக இலங்கை அரசாங்கம் கூறிவரும் பின்னணியில் மேற்படி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை வெளிவந்திருப்பதை இங்கு உற்றுக் கவனிக்க வேண்டும்.
    அது மட்டுமல்ல, ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகமும் இது விசயத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மனோரதியப் படுத்தக்கூடாது என்ற ஒரு நிலைப்பாட்டுடனேயே காணப்படுகிறது. அதாவது, இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நகர்வுகளின் விளைவாகவோ அல்லது அத்தகைய நகர்வுகளிற்காகத் தமிழ் லொபிக் குழுக்கள் செயற்பாட்டியக்கங்கள், கட்சிகள் போன்றவற்றைக் கையாள்வதின் விளைவாகவோ விடுதலைப்புலிகள் இயக்கம் மகிமைப்படுத்தப்படக்கூடாது என்ற ஒரு நிலைப்பாடே அந்த அலுவலகத்திடமும் இருப்பதாகத் தெரிகிறது.
    இவையெல்லாம் இலங்கை அரசாங்கத்திற்குச் சாதகமானவை. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற சுலோகம் இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த வரை அனைத்துலக அரங்கில் ஒரு இன்றியமையாத கவசத்தைப் போன்றது.
    எனவே, புலிகள் இயக்கம் வீழ்ச்சியுற்று ஐந்தாண்டுகளிற்குப் பின்னரும் உலகம் புலிகளின் வன்சக்தி அரசியலுக்கு எதிராகவே காணப்படுகிறது. அதேசமயம் அந்த இயக்கத்தின் தொடர்ச்சியாக அல்லது விசுவாசிகளாகக் காணப்படும் மென்சக்திகளின் அரசியலையும் உத்தியோக பூர்வமாக அங்கீகரிக்காத ஒரு போக்கே தொடர்கிறது. அதாவது, இக்கட்டுரையில் முன்பு கூறப்பட்டதுபோல ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஒரு அனுதாப அலை மேற்கில் உருவாகியிருக்கிறது. ஆனால், அந்த அனுதாப அலையானது வெளியுறவுக் கொள்கை முடிவுகளாக அல்லது அரசியல் தீர்மானமாக பண்பு மாற்றம் பெறவில்லை. அதை அப்படி மாற்ற தமிழ் லொபிக் குழுக்களால் இதுவரையிலும் முடியவில்லை என்பதையே கடந்த மூன்று ஜெனிவாத் தீர்மானங்களும் எண்பித்திருக்கின்றன. கடந்த ஐந்தாண்டு கால மேற்கத்தைய அரசியல் பரப்பில் ஈழத்தமிழர்களுடைய நிலைமை இதுதான். இனி இந்தியாவைப் பார்க்கலாம்.
    இந்தியாவிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை தொடர்கிறது. உண்மையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கெதிரான தாய்த் தடை அதுதான். அதைத் தொடர்ந்தே ஏனைய வெளி நாடுகள் அந்த இயக்கத்தைத் தடை செய்தன. மேலும் அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் இன்று வரையிலும் இந்தியாவானது, இலங்கை அரசாங்கத்தை ஆபத்தான தருணங்களில் பாதுகாக்கும் ஒரு அயலவனாகவே காணப்படுகின்றது. புலிகள் இயக்கம் தான் பிரச்சினை என்றால் அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் இந்தியாவின் நிலைப்பாட்டில் பெரிய திருப்பகரமான மாற்றம் எதுவும் ஏன் ஏற்படவில்லை?
    அதேசமயம், புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின் ஈழத் தமிழ் அரசியலுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவிய சட்டப்பூட்டு அதாவது ராஜீவ் கொலைக் கேசின் விளைவாக உருவாகிய சட்டப்பூட்டு இப்பொழுது இல்லை. இது முதலாவது முக்கிய மாற்றம்.
    அடுத்த மாற்றம் புலிகள் இயக்கத்தின் அரசியலைப் பிரதிபலிக்கும் நாம் தமிழர் போன்ற அமைப்புகள் தமிழ் நாட்டில் எழுச்சி பெற்றிருப்பது. குறிப்பாக, படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியிலிருந்து தோன்றிய சேவ். தமிழ் மே 18 போன்ற செயற்பாட்டமைப்புகள் அரங்கின் முன்னணிக்கு வந்திருக்கின்றன. தமிழ் நாட்டின் பெரிய கட்சிகளின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கக்கூடிய புதிய வளர்ச்சிகள் இவை. இவற்றுடன் இரண்டாவது ஜெனிவாவின்போது தமிழ் நாட்டில் நிகழ்ந்த மாணவர் எழுச்சியானது இந்தியாவின் முடிவுகளில் சலனங்களை ஏற்படுத்தியதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இவையெல்லாம் கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்.
    ஆனால், ஈழத்தமிழ் நோக்கு நிலையிலிருந்து தமிழ் நாட்டைக் கையாள்வது எப்படி என்ற கேள்விக்குப் பதிலாக இது வரையிலும் அறிவுபூர்வமான ஓரளவுக்கு எல்லாரையும் அரவணைத்துப் போகக்கூடிய ஒரு வழிவரைபடம் வரைப்படவே இல்லை. இது முதலாவது, இரண்டாவது தமிழ் நாட்டில் உள்ள கட்சிகளும் செயற்பாட்டியக்கங்களும்  தங்களுக்கிடையிலான கட்சி சார் முரண்பாடுகளைக் கைவிட்டு ஈழத்தமிர்களுக்காக ஒரு பொதுத் தடத்தில் இணைவதற்காக முயற்சிகள் போதாமலிருப்பது.
    உண்மையில் இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஈழத்தமிழ் நோக்கு நிலையிலிருந்து தமிழ் நாட்டை எப்படிக் கையாள்வது என்ற கேள்விக்கு விடை கண்டுபிடித்தால்தான் தமிழ் நாட்டில் அதற்கு வேண்டிய ஒரு பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அமைப்புக்களையும் கட்சிகளையும் ஒன்று திரட்ட முடியும்.
    ஆனால், தமிழ் நாட்டில்  கடந்த ஐந்தாண்டுகளாக இது தொடர்பில் பெரிய திருப்பகரமான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. காலத்துக்குக் காலம் யாரவது மேலெழுந்து ஈழத் தமிழ் அரசியலைத் தத்தெடுப்பது மட்டுமே நிகழ்ந்து வருகிறது. எனவே, இது விசயத்தில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட போதிருந்த ஏறக்குறைய அதே நிலைமைதான் தமிழ் நாட்டில் இப்பொழுதும் உண்டு. இது இரண்டாவது.
    மூன்றாவது தென்னிலங்கை. புலிகள் இயக்கத்தின் மீது பெற்ற கிடைத்தற்கரிய வெற்றியை முதலீடாக்கி தனது ஆட்சக்காலத்தை நீடித்துவரும் ஓர் அரசாங்கம் இது. வெற்றிவாதம் எனப்படுவது வெற்றியைக் கொண்டாடுவது மட்டுமல்ல, தோற்கடிக்கப்பட்ட எதிரியை நினைவு கூர்வதும் தான். தோற்கடிக்கப்பட்ட எதிரியை மக்கள் மறந்துவிட்டால் அவர்கள் வெற்றியையும் மறந்துவிடுவார்கள். எனவே, சிங்கள மக்கள் எதிரியை மறக்கவிடாமல் வைத்திருக்க வேண்டியது வெற்றிவாதத்தின் இன்றியமையாத் தேவைகளில் ஒன்று. கடந்த ஐந்தாண்டுகளாகப் புலம் பெயர்ந்த தமிழர்களையும் தமிழகத்தையும் முன்னிறுத்தி அரசாங்கம் அதைச் செய்யக் கூடியதாயுள்ளது. ஒவ்வொரு ஜெனிவாக் கூட்டத் தொடரின்போதும் வெற்றிவாதம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்றாவது ஜெனிவாவின் பின் புலிகள் இயக்கம் மீள உயிர்பெற முயற்சிப்பதாக வந்த தகவல்கள் வெற்றிவாதத்தை மேலும் உயர்த்துடிப்புடன் முன்னெடுக்க உதவும்.
    வெற்றிவாதத்திற்கு தலைமை தாங்கும் ஓர் அரசாங்கம் கொழும்பில் தொடர்ந்தும் ஆட்சியிலிருக்கும் வரை புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட போதிருந்த அதே நிலைமைகள் தான் தொடர்ந்தும் பேணப்பட்டு வரும். அதாவது, புலிகள் இயக்கம் இல்லையென்றாலும் குறைந்தது அதன் ஆவியோடாவது சண்டை செய்ய வேண்டிய தேவை வெற்றிவாதத்திற்குண்டு.
    எனவே, மேற்கண்டவைகள் அனைத்தையும் கோர்த்துப் பார்த்தால் ஒரு விடயம் தெட்டத் தெளிவாகத் தெரியவரும். அதாவது புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான கடந்த ஐந்தாண்டு காலப் பகுதிக்குள்ளும் அந்த இயக்கத்தைப் பொறுத்த வரை அது தோற்கடிக்கப்படும் போதிருந்த அதே உலகம் தான் பெருமளவுக்கு மாற்றமின்றி இப்பொழுதும் இருக்கிறது. அது அந்த இயக்கத்தின் வன்சக்திக்கு எதிரானது. ஆனால், அதன் மென்சக்தி நீட்சிகளை சகித்துக்கொள்ளக் கூடியது.
    இத்தகையதொரு உலகளாவிய பின்னணியில் தமிழர்கள் முன் இப்போதைக்கு இரண்டு பிரதான தெரிவுகள்தான் உண்டு. ஒன்று புலி நீக்கம் செய்யப்பட்ட மென் சக்தி அரசியல். மற்றது வன்சக்தி நீக்கம் செய்யப்பட்ட புலிகளின் மென்சக்தி அரசியல்.
    நாட்டில் கூட்டமைப்பு இதில் முதலாவதை முன்னெடுத்து வருகிறது. அக்கட்சியின் உயர் மட்டம் தன்னை கூடுதலான பட்சம் புலி நீக்கம் செய்திருக்கிறது. அதேசமயம் தாய்நாட்டில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் புலம் பெயர்ந்த நாடுகளில் செயற்படும் அமைப்புக்களும் லொபிக் குழுக்களும் பெருமளவுக்கு இரண்டாவது அரசியலை முன்னெடுத்து வருகின்றன. அல்லது இரண்டுக்கும் இடையிலான ஒரு நடு வழி அரசியலை முன்னெடுத்து வருகின்றன. ஆனால், அண்மையில் இலங்கை அரசாங்கம் மேற்படி அமைப்புகளை ஒரே பைக்குள் போட்டு தடை செய்துவிட்டது.
    புலிகள் இயக்கத்தின் அரசியலானது அதன் வன்சக்தி வடிவிலும் சரி மென்சக்தி வடிவிலும் சரி இலங்கைத்தீவில் செயற்பட முடியாது என்பதை அரசாங்கம் திட்டவட்டமாக வெளிக்காட்டியிருக்கிறது.
    அதேசமயம், அரசியலில் வன்சக்தி அல்லது மென்சக்தி பற்றிய உரையாடல்கள் அனைத்தையும் உக்ரெய்ன் நெருக்கடி கேள்விக்குள்ளாகிவிட்டதாக மேற்கத்தைய விமர்சகர்களில் ஒரு பகுதியினர் கூறத் தொடங்கிவிட்டார்கள். பொதுவாக ராஜிய முன்னெடுப்புக்கள் மென்சக்தி அரசியலாகவே வகைப்படுத்தப்படுவதுண்டு. ஆனால், உக்ரெய்ன் விவகாரத்தில் ரஷ்யாவானது மென்சக்தி அணுகுமுறைகளைத் தோற்கடித்துவிட்டதாக மேற்படி விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
    உக்ரெய்ன் விவகாரமானது மென்சக்திக்குள்ள வரையறைகளை உணர்த்தியிருப்பதாகவும், ரஷ்யாவின் இதே உதாரணத்தை சீனாவும், சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் பிரயோகிக்க முற்பட்டால் நிலைமை என்னவாகும் என்றும் கேள்விகள் எழுத் தொடங்கிவிட்டன.
    இத்தனைக்கும் ரஷ்யாவும் சரி, அதைக் கண்டிக்கும் மேற்கு நாடுகளும் சரி வன்சக்தியின் மூலம் பெறப்பட்ட ஒரு வலுச்சமநிலை தளம்பும்போதே மென்சக்திப் பிரயோகத்தைப் பற்றி உரையாடி வருகின்றன என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
    ஆனால், ஈழத் தமிழர்களின் நிலைமை அத்தகையது அல்ல. கடந்த ஐந்தாண்டுகளாக ஈழத் தமிழர்களிடம் வன்சக்தியும் இல்லை. அதன் சரியான பொருளில் மென்சக்தியும் இல்லை என்பதே இங்குள்ள கொடுமையான கையறு நிலையாகும்.
    இந்த வெற்றிடம் காரணமாகவே தமிழ் அரசியலானது கடந்த ஐந்தாணடுகளாக பெருமளவுக்கு வெளியாருக்காகக் காத்திருக்கும் ஓர் அரசியலாக அல்லது வெளியாரிடம் முறையீடு செய்யும் ஓர் அரசியலாக உருவாகியிருக்கிறது.
    ஆனால், பிரதான வெளித் தரப்பாகிய இந்தியாவோ பதின் மூன்றாவது திருத்தத்தை ஒரு சாதனை என்று காட்ட முற்படுகின்றது. இடமாற்றம் பெற்றுச் செல்லும் யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சலற் ஜெனரல் அத்தகைய தொனிப்பட உரையாற்றியிருக்கிறார்.
    அதாவது இந்தியா மாகாண சபையை, அதுவும் பிரிக்கப்பட்ட மாகாண சபையை ஒரு சாதனை என்று வர்ணிக்கிறது. அதே சமயம் ஜெனிவாத் தீர்மானமோ தமிழர்கள் என்ற சொல்லையே தீர்மானகரமாக நீக்கிவிட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் வன்சக்தியுமின்றி, அதன் மெய்யான பொருளில் மென்சக்தியுமின்றி தடுமாறும் தமிழர்கள் எவ்வளவு காலத்துக்கு வெளியாருக்காகக் காத்திருக்கப்போகிறார்கள்?
    - நிலாந்தன் -
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: விடுதலைப்புலிகள் மீதான தடை தொடர்வது எதனால்? – நிலாந்தன் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top