வங்கியில் டெபாசிட் செய்யப்படும் பணத் தைத் திருட்டுத்தனமாக ஸ்பீடு வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் கள்ள
ஆட்டமே... 'என்னமோ நடக்குது’!போஸ்டர் ஒட்டும் விஜய் வசந்துக்கு, தன் காதலி மஹிமாவின் கடன் சிக்கலைத் தீர்க்க ஐந்து லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. காதலியைக் காப்பாற்றுவதற்காக, ரகுமானின் 'இல்லீகல் டீலிங்’ வேலையைச் செய்ய ஒப்புக்கொள்கிறார். விஜய் வசந்த், வங்கியில் இருந்து எடுத்துவரும் பணத்தை ஒரு கும்பல் நடுவழியில் அபேஸ் செய்கிறது. காதலியைக் காப்பாற்ற வேண்டும், பறிபோன பணத்துக்கு ரகுமானிடம் பதில் சொல்லியாக வேண்டும் என 'டபுள் டிரபிள்’ வசந்த், அதை எப்படிச் சமாளிக்கிறார் என்பதே கதை!
ஒரு கிரிமினல் வலைப்பின்னலில் சிக்கிக் கொள்ளும் அப்பாவி ஹீரோ, ஒரு நாளுக்குள் பரிமாறிக்கொள்ளப்பட வேண்டிய கோடிகள் என 'டி20’ திருப்பங்களுடன் திரைக்கதையில் சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ராஜபாண்டி. 'என்ன நடக்கிறது’ என்றே சொல்லாமல், மயக்கத்தில் இருக்கும் விஜய் வசந்த், காதலனைத் தேடித் தவிக்கும் மஹிமா, தம்பி ராமையாவின் இல்லீகல் டீல்... என கதையை நகர்த்திச்சென்ற விதமும், யார் அந்த அபேஸ் பார்ட்டி என்று சஸ்பென்ஸ் கலைக்கும் இடமும் செம க்ரைம் கேம்!
சென்னை பாஷை பேசித் திரியும் உதார் இளைஞனாக விஜய் வசந்த், கெத்து! அசால்ட் டாகக் காதலை டீல் செய்வதும், அம்மாவுக்கு அடங்காத மகனாகக் கோபமும் பாசமும் காட்டித் திரிவதுமாக ரசிக்க வைக்கிறார். ஆனால், எது மாதிரியும் இல்லாத புது மாதிரி ஹேர் ஸ்டைல்தான் துருத்துகிறது. படத்தின் ஹீரோயின்... சரண்யாதான்! வழக்கமாக அவருக்கு அலெர்ட் செய்யப்படும் 'பாச நேச அம்மா’ பாத்திரம்தான். ஆனால், இந்த முறை பக்கா 'சென்னை அம்மா’வாக அடி, உதை வாங்குவதும், பொய்க் கோபத்துடன் 'அடுத்த தடவை சண்டை போட்டா மட்டன் பிரியாணிதான் வாங்கிட்டு வரணும்’ என சமாதானம் பேசுவதும், மகனுடைய காதலியைக் கண்டு உருகுவதுமாக... ஆஹா!
பக்கத்து வீட்டுப் பெண் போல பாந்தமாக இருக்கிறார் மஹிமா. 'படித்த வக்கீலாக’ தம்பி ராமையா அதகளம்!
சரசர விறுவிறுவென நூல் பிடித்து முன்னேறும் சம்பவங்கள்தான் படத்தின் பலம். ஆனால், அதற்கு இடையில் ஆளுக்கொரு பாட்டு, ஃபைட்டு தேவையா?! ஹீரோவுக்கு, ஹீரோயினுக்கு, அம்மாவுக்கு, பிரபுவுக்கு என்று தலைக்கொரு பாட்டு, ஃபைட்டு வைத்து... ப்பா!
'எம்.ஜி.ஆர்.’ காலத்திலேயே அரசியலில் நுழைந்துவிட்ட 'அமாவாசை’ ரகுமான், ஒரு எம்.எல்.ஏ. சீட் பெறுவதற்கு கால் நூற்றாண்டு ஆகுமா? ரகுமானைப் பழிவாங்க பிரபுவும் அத்தனை வருடங்கள் காத்திருப்பாரா?
சேஸ் ரேஸ் கதைக்கு பின்னணி இசை தீப்பிடித்திருக்க வேண்டாமா? ஆனால், பிரேம்ஜியின் இசையோ... 'என்னமோ போடா மாதவா’!
அட, 'என்னதான் நடக்குது?’ என்று விறுவிறுப்பை எகிறவைத்த வகையில், ஸ்கோர் செய்திருக்கிறது 'என்னமோ நடக்குது’ டீம்!