தெனாலிராமன் - சினிமா விமர்சனம் - TK Copy தெனாலிராமன் - சினிமா விமர்சனம் - TK Copy

  • Latest News

    தெனாலிராமன் - சினிமா விமர்சனம்

    'வந்துட்டேன்யா... வந்துட்டேன்!’ என்று வடிவேலு 'ரீ-என்ட்ரி’ கொடுத்திருக்கும் படம்.
    ஆனால், 'காமெடி வெடி’ வெடிக்காமல், 'மாமன்னர், தெனாலிராமன்’ என்று இரட்டை அவதார் ஹீரோ கதை பிடித்து வந்திருக்கிறார் வடிவேலு!


    மக்கள் நலனுக்காக மன்னனைத் திருத்தும் மதியூக அமைச்சரே 'தெனாலிராமன்’!
    விகட புரத்தின் மாமன்னரை, (வடிவேலு) அவரது அமைச்சரவை சகாக்கள் தவறாக வழிநடத்துகிறார்கள். சூதுவாது அறியாத மன்னன், அரண்மனைக்குள்ளேயே 36 மனைவிகளோடும், 52 வாரிசுகளோடும் குதூகலமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்க, அவரை தெனாலிராமன் (வடிவேலு) திருத்தி, மந்திரிசபையை எப்படி மக்கள் சபையாக மாற்றி அமைக்கிறார் என்பதே கதை!
    'குழந்தைத்தன’ மன்னன், 'புத்திசாலி’ தெனாலிராமன் என இரண்டு கேரக்டர்களுக்கும் வடிவேலு பாடிலாங்வேஜில் 'பன்ச் வித்தியாசம்’ காட்டியிருப்பது க்ளாசிக்! 'ஆகட்டும்... ஆகட்டும்... டும்...’ என்று அப்பாவி மன்னனாக அதிகாரத்தொனி செலுத்துவதும், தெனாலிராமனாக 'பவ்ய பக்குவம்’ காட்டுவதும் ஆல்ரவுண்ட் அட்டகாசம். ஆனால், தெனாலிராமனின் வியூகங்கள்தான் திரைக்கதைக்குக் கெத்து சேர்க்கவில்லை!
    'வடிவேலு’ என்பதற்காகக் கெக்கே பிக்கே காமெடிகளாக அடுக்காமல், அந்நிய முதலீடு, நாட்டு மக்களை எப்படி வாட்டி வதைக்கும் என்பதை யதார்த்தமாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன். ஆனால், பள்ளிக் காலத்தில் படித்த திருடர்கள் - கிணறு, வாயில் காப்பாளன் - சாட்டைப் பரிசு, 'நடப்பதெல்லாம் நன்மைக்கே’ நீதிக் கதைகளைத் தொகுத்து இத்தனை நீட்டி முழக்கிச் சொல்வதற்காக ஒரு படமா? ஏற்கெனவே பரிச்சயமான கதைகளின் முடிவுகளை யூகித்து, அந்த அத்தியாயம் கடக்கப் பொறுமையாகக் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறதே!  
    'காமெடியன்’ வடிவேலு வேண்டாம் என்று முடிவான பிறகு, 'ஹீரோ’ வடிவேலுவுக்கு எனத் திரைக்கதையில் சுவாரஸ்யச் சரக்குகளை 'அள்ளி அப்பியிருக்க’ வேண்டாமா? காமாசோமா அத்தியாயங்களாக 'நாடக பாணியில்’ படம் பயணிக்க, இரண்டாம் பாதியின் சம்பவங்களும், நீட்டி முழக்கப்படும் வசனங்களும்... 'மாறி மாறி மாறி மாறி மாறி மாறி’ சோதிக்கிறதே தெனாலி!?
    'ஒருவேளை இது குழந்தைகளுக்கான படமோ?!’ என்ற எண்ணத்தையும் அடித்து உடைக்கிறது ஹீரோயின் மீனாட்சி தீட்ஷித்தின் ஆடை அலங்காரங்களும் வளைவு நெளிவுகளும்! மதியூக வித்தையோ, நகைச்சுவை கலாட்டாவோ... எந்த அத்தியாயமும் கடைசி வரை களைகட்டவே இல்லை.
    எம்.ஜி.ஆர். ரசிகரான வடிவேலு, எம்.ஜி.ஆர். பாணி 'மன்னன் கதை’யில் நடித்திருக்கிறார். ஓ.கே.!
    'நகைச்சுவை மன்னன்’ வடிவேலுவை விரைவில் திரையில் எதிர்பார்க்கிறோம்... வடிவேலு ரசிகர்களின் இந்த ஆசை... அப்படியே ஆகட்டும்... டும்ம்ம்!

    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: தெனாலிராமன் - சினிமா விமர்சனம் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top