தமிழ் மக்கள் வகை தொகையின்றிக் கொல்லப்பட்ட
போரை நினைவு கூர்ந்து, உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதைக் கூட மே 18ஆம் நாளில் தடுத்திருந்தனர். விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட நாள் அது. எனவே அந்த நாளில் அஞ்சலி எதனையும் செலுத்தக்கூடாது என்றனர்.சரி! அந்த நாளுடன் இந்தப் பிரச்சினைகள் முற்றுப் பெற்றுவிடும் என்று எண்ணினால், அதுதான் இல்லை, பிரச்சினை மே 18ஆம் நாள் மட்டுமே இல்லை என்பதை இப்போது இராணுவத்தினர் வெளிப்படுத்தி விட்டார்கள். ஒரு வார காலமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூடப்பட்டுக் கிடந்ததால் அது மீள ஆரம்பமாகிய பின்னர் உயிரிழந்த தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது ஒரு நல்ல முயற்சி.
தடுக்கப்பட்ட ஒரு நிகழ்வை நடத்துவோம் என்று பலவந்தமாக பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து வன்முறை எதிலும் ஈடுபடாமல், சட்டமும் ஒழுங்கும் சொன்னதன்படி கேட்டு நடந்த பின்னர், தங்கள் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்குப் பல்கலைக்கழகச் சமூகம் தீர்மானித்தது. ஒரு நாட்டின் குடிமக்களாக இதைவிடச் சிறப்பாக எவராலும் நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க முடியாது.
அப்படி இருந்தபோதும் இந்த விடயத்தில் மீண்டும் தலையிட்டுள்ள இராணுவம், பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்த, இராணுவத்தின் பிரதிநிதி, நயமான மிரட்டலாக இதனைக் கூறியுள்ளார்.
போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்குத் தமிழர்க ளுக்கு உரிமை உள்ளது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளபோதும் அதனை நடைமுறைப்படுத்த அனுமதிக்க முடியாது என்றிருக்கின்றார் அந்தப் பிரதிநிதி. அப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றால் இராணுவம் தலையிட வேண்டியிருக்கும் என்றும் கூறியிருக்கிறார் அவர். அதனைப் பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் இது என்ன கொடுமை என்று புரியவில்லை.
கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சிகளில் மட்டுமே இப்படி நடக்க முடியும். நாகரிகமுள்ள ஜனநாயகப் பாரம்பரியம் உள்ள எந்தவொரு நாட்டிலும் இத்தகைய அடாவடி அணுகுமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இராணுவ ஆட்சியிலுள்ள நாடுகளில் மட்டுமே இப்படி நிகழக்கூடும். இலங்கையில் ஜனநாயக ஆட்சியே நீடிக்கிறது என்று கூறிக் கொண்டாலும், வடக்கில் மட்டும் இராணுவத்தின் ஆட்சியே நீடிக்கின்றது என்பதற்கான மற்றுமொரு தெளிவான உதாரணமே இது.
வடக்கின் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் தலையிடுவதில்லை என்று இனி ஒருபோதும் கூறமுடியாது. ஒரு புறத்தில் இராணுவத்தினர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து இப்படி நயமாகப் பேசிக்கொண்டிருக்க, மறுபுறத்தில் பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சில ஊடகவியலாளர்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் சில துண்டுப் பிரசுரங்கள் பல்கலைக்கழக வளாகத்திலே நேற்றுக் காலையில் காணப்பட்டன என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் மீண்டும் நீதிக்குப் புறம்பான கொலைகள் தலைதூக்கி விடுமோ என்ற அச்சத்தை இது ஏற்படுத்தியிருக்கிறது. 1995 முதல் 1998 வரையிலும் 2006 முதல் 2009 வரையிலும் இத்தகைய நீதிக்குப் புறம்பான கொலைகளால் யாழ். குடா நாடு பீதியில் உறைந்து கிடந்ததை யாரும் இன்னும் மறந்து விடவில்லை. அத்தகைய நிலை மீண்டும் உருவாகிவிடக்கூடும் என்ற அச்சம் மக்களிடம் எழுவது சர்வதேச அரங்கில் இலங்கை அரசுக்கும் நல்லதல்ல.
இவை எல்லாவற்றுக்கும் இடையே கொழும்பு அரசு என்னும் கோலியாத்துடன் தாவீதுகள் போன்று தமிழ் மக்கள் முரண்பட்டு நிற்க, அவர்களுக்கான அரசாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசு என்ன செய்கிறது என்பது தெரியவில்லை. இங்கே இப்படி மே 18ஆம் நாள் மட்டுமல்ல எந்த நாளுமே போரில் உயிரிழந்த பொதுமக்களுக்கு நினைவேந்தல் நடத்த அனுமதிக்க முடியாது என்று தடுக்கையில் தமிழ் மக்களுக்கான அரசு அது குறித்து மெளனமாக இருக்க முடியாது.
எனவே, அடுத்து வரும் அமர்வில், மே மாதம் முழுவதையும் படுகொலை மாதமாகப் பிரகடனப்படுத்தி, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அந்த மாதத்தின் அனைத்துத் தினங்களிலும் பொதுமக்களும், பொது அமைப்புகளும் நினைவேந்தல் நிகழ்வுகளையும் அதனுடன் தொடர்புடைய ஆக்கபூர்வமான நிகழ்வுகளையும் நடத்தவேண்டும் என்று உடனடியாக ஓர் அவசரத் தீர்மானத்தை வடக்கு மாகாணசபை நிறைவேற்ற வேண்டும்.
அதனை முன்னின்று முன்னுதாரணமாகச் செயற்படுத்தவும் வேண்டும். தமிழர்கள் என்று கூறிக்கொண்டு வாக்குக் கேட்ட மாகாணசபை உறுப்பினர்கள் அதனை உடன் செய்வார்கள் என்று நம்புகின்றோம்.