இந்த பங்களாவில் யாமிருக்கும் வரை பயமே!’ என அழிச்சாட்டிய அடம் பண்ணும் பேய் கதை!
திக்திக் பேய் கதை ஒன்றில், திகில் உதறலும் காமெடிச் சிதறலுமாக வெரைட்டி விருந்து வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் டி கே. முதல் முக்கால் மணி நேரம் காமெடி என்ற பெயரில் ராவடி செய்தாலும், பங்களாவுக்குள் கிருஷ்ணா குடியேறியதும் பிக்கப் ஆகி பேய்த்தனமாகச் சிரிக்கவைத்து பயம் காட்டும் இடங்களில்... செம ஸ்கோர்!
'பயந்து வருது’ நாயகனாக கிருஷ்ணா. ரௌடிகளிடம் அடிவாங்கிவிட்டு 'வர்றவன் போறவன் எல்லாம் அடிக்கிறானுங்க’ எனப் புலம்புவதும், காதலி மஞ்சரி, கவர்ச்சி ஓவியாவுக்கு இடையில் அல்லாடுவதும், பேய் 'காட்டு... காட்டு...’ எனக் காட்டும்போது கதறுவதுமாகப் படம் முழுக்க சிக்ஸர் வெளுக்கிறார்.
படத்தின் செகண்ட் ஹீரோ கருணா. தான் சொல்வதெல்லாம் நடக்கும்போது திருட்டு முழி முழிப்பதும், பேய், கிருஷ்ணாவை வெளுக்கும்போது, 'ப்ளீஸ் மேடம்... விட்ருங்க மேடம்...’ எனப் பேயிடம் கெஞ்சுவதும், தன்னைப் பற்றிய ரகசியங்களை தங்கை அடுக்கும்போது அள்ளு தெறிப்பதுமாக... ஆரவார அப்ளாஸ் அள்ளுகிறார்!
பேய், தன் உடலில் ஏறியதும் கிருஷ்ணாவிடம் ஆடும், 'கண்ணா மூச்சி’யின்போது ரூபா திகில் பட்டாசு வெடிக்க, குளுகுளு சுற்றுலாத் தலத்தில் ஜன்னல், கதவு, ஷட்டர் வைத்த உடைகளில் செம சூடு கிளப்புகிறார் ஓவியா. சிற்சில சீன்கள்தான்... ஆனால், அந்தர் பண்ணுகிறார் 'பிரதர்’ மயில்சாமி. பேயை மிரட்ட தன் படத்தைக் காண்பித்து மொத்து வாங்குவதும், பேய் துரத்தும் ரணகளத்திலும் ஓவியாவோடு கிளுகிளு உடான்ஸ் அடிப்பதுமாக... பின்னியெடுக்கிறார் பிரதர்!
பங்களா விருந்தினர்கள் அடுத்தடுத்து இறப்பதை எவரும் கண்டுகொள்ளாமல் இருப்பது, சடலங்கள் காணாமல்போவது என இடைவேளை வரை உதைக்கும் லாஜிக்குகளைப் பின்பாதி திரைக்கதை மேட்ச் செய்யும் இடம் நச்.
'உன்னை எங்கேயோ பார்த்திருக்கேனே..?’ என, கருணாவைப் பார்ப்பவர்கள் எல்லாம் சந்தேகப்படுவது, சாவித் துவாரம் வழியாக ஓவியா கொடுக்கும் அதிர்ச்சி, க்ளைமாக்ஸ் திருப்பத்தில் வந்து மாட்டிக்கொள்ளும் வில்லன்கள்... எனப் பின்பாதி முழுக்க அதிர்வேட்டு அத்தியாயங்கள். ஆனால், பின்பாதியில் 'டெவில் எக்ஸ்பிரஸாக’ பயணிக்கும் படத்தை, முன்பாதியில் 'டெட் ஸ்லோ’ திரைக்கதையுடன் நகர்த்தியிருக்க வேண்டுமா?
மஞ்சரி-ஓவியா இடையிலான சண்டைகள், தேவையே இல்லாத 'வாடா... வாடா... பன்னி வாயா’ கதை, ஃப்ளாஷ்பேக் பாட்டு எல்லாம் எக்ஸ்ட்ரா லக்கேஜ்!
திகில் கூட்டும் பின்னணி இசையில் சிலிர்ப்பூட்டுகிறது எஸ்.என்.பிரசாத்தின் இசை. இருட்டு பங்களா, முரட்டுப் பேய் என ராமியின் ஒளிப்பதிவில் இருள் திகில். பின்னணி உழைப்பாளிகளின் படங்களை டைட்டிலில் காண்பித்திருப்பது... பளிச் ஐடியா!
'கொஞ்சம் பயம்... கொஞ்சம் காமெடி’ என்ற காக்டெயில் ஃபார்முலாவில் ஈர்க்கிறது 'யாமிருக்க பயமே’!