பெண்களின் வாழ்க்கையில் டீன் ஏஜ் என்பது
வசந்தகாலம் போன்றது. பொதுவாக, 13-19 வயது வரையிலான பருவத்தை டீன் ஏஜ் என்கிறோம். இந்த, டீன் ஏஜ் பருவம் பெண்களின் வாழ்வில் முக்கியமான காலகட்டம்.
இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால், தாய்மார்களாகிய நீங்கள், குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்து கொண்டீர்களோ அதே போல், இந்தப் பருவத்திலும், கவனிக்க வேண்டியது அவசியம்.
டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள்:
பூப்பெய்துவதில் சில குழந்தைகளுக்கு காலதாமதம் ஏற்படலாம்; உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால், 16 வயது வரை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில், உடன் மருத்துவரை அணுகுவது நல்லது. * சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண நிகழ்வே இது.
ஆனால், இந்த வயதுப் பெண்கள் இதை, ஒரு நோய் போல கருதுவர். எனவே, இது குறித்து, தாய்மார்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், பருக்களை கிள்ளாமல் இருக்க அறிவுறுத்துவது அவசியம்.
* தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித் தர வேண்டும். உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், உணர்வுப்பூர்வமாக பலவிதமான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதனால், இந்த பருவத்தில் எல்லாருக்கும் இப்படித்தான் உடல் வளர்ச்சி இருக்கும். பெற்றோர் எடுத்துக் கூறுவது அவசியம். அதோடு, வெளியிடங்களில், தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற வேண்டும்.
* வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின், டீன் ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி மனம் விட்டு பேச வேண்டும். இது, அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், தாயுடனான நெருக்கத்தையும், பாசத்தையும் மேம்படுத்தும்.
* இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்னைகளால் டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிடமாட்டார்கள். இதனால், ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப்படுத்துவதுடன், ஹீமோகுளோபின் அளவை, 10-க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.