கிழக்கில் தொடரும் அடைமழை! பலர் பாதிப்பு - TK Copy கிழக்கில் தொடரும் அடைமழை! பலர் பாதிப்பு - TK Copy

  • Latest News

    கிழக்கில் தொடரும் அடைமழை! பலர் பாதிப்பு

    மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காணரமாக கல்குடாத் தொகுதியில் கோறளைப்பற்று வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை மற்றும் ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


    29 இடைத்தங்கள் முகாம்களில் மூவாயிரத்தி அறுபத்திரெண்டு குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குறித்த பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் தெரிவித்தனர்.

    இதன் அடிப்படையில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயாளர் பிரிவில் ஐந்து இடைத்தங்கள் முகாம்களில் தொன்நூற்றி ஒரு குடும்பங்களைச் சேர்ந்த இருநூற்றி நாற்பத்தொன்பது போர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளத்தினால் மொத்தமாக ஆறாயிரத்தி எழுநூற்றி நாற்பத்தினாலு (6744) குடும்பங்களைச் சேர்ந்த இருபத்திரெண்டாயிரத்தி எழுநூற்றி ஐம்பத்தி மூன்று (22753) பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ரீ.தினேஸ் தெரிவித்தார்.

    இதேவேளை வாழைச்சேனை ஜூனியன்கொலனி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயாரான 49 வயதுடைய ஐயாத்துரை வசந்தி என்பவர் நேற்றிரவு தனது வீட்டு முற்றத்தில் உள்ள நீரில் விழுந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

    ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் ஐந்து இடைத்தங்கள் முகாம்களில் நாநூற்றி என்பத்திமூன்று (483) குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்தி ஐநூற்றி தொன்னூற்றி ஆறு (2596) பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், இவ் வெள்ளத்தினால் ஏழாயிரத்தி இருநூற்றி தொன்னூற்றி ஆறு (7296) குடும்பங்களைச் சேர்ந்த இருபத்தையாயிரத்தி எழுபத்தைந்து (25075) பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத் தெரிவித்தார்.

    வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் பதினேழு (17) இடைத்தங்கள் முகாம்களில் இரண்டாயிரத்தி முன்நூற்றி நாற்பத்தொன்பது (2349) குடும்பங்களைச் சேர்ந்த எட்டாயிரத்தி இருநூற்றி முப்பத்திநாலு (8234) பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், ஏழாயிரத்தி என்பத்தாறு குடும்பங்களைச் சேர்ந்த இருபத்தி நாலாயிரத்தி எந்நூற்றி அறுபத்தி மூன்று (24863) பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி தெரிவித்தார்.

    ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு முகாம்களில் நூற்றி முப்பத்தொன்பது (139) குடும்பங்களைச் சேர்ந்த அறுநூற்றி இருபத்தைந்து பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் ஏழாயிரத்தி இருநூற்றி எழுபத்தாறு (7276) குடும்பங்களைச் சேர்ந்த இருபத்தாராயிரத்தி நாநூற்றி மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தெரிவித்தார்.

    இதேவேளை வாழைச்சேனை மீன் பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆழ்கடல் படகுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானம், ஓட்டமாவடி சிறுவர் பூங்கா, வணக்கஸ்தலங்கள், பாடசாலைகள் மற்றும் சில இடங்கள் என்பன நீரில் மூழ்கியுள்ளன.

    குறித்த பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை பிரதேச செயலகங்கள், பிரதேச சபை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ.றபீல் மற்றும் இராணுவத்தினர் கவனித்து வருகின்றனர்.

    வெள்ளத்தில் மூழ்கும் சித்தாண்டி பிரதேசம்

    மட்டக்களப்பு சித்தாண்டி பெரும்பாலான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி ஆறு போன்று காட்சியளிக்கின்றது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மற்றும் உறுகாமம் குளத்தினுடைய வான் கதவுகள் திறக்கப்பட்டமை போன்றவற்றினால் தொடர்ச்சியாக வெள்ள நீர் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    இதன்போது உதயன்மூலை, மதுரங்காட்டு கொலணி ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. குறிப்பாக சித்தாண்டி 04 கிராம அபிவிருத்திச் சங்க கட்டத்திற்கு முன்னாலுள்ள வளைவு வீதியில் சுமார் 7 அடி வரையான நீர் காணப்படுவதுடன், உதயன்மூலை பாலர் பாடசாலை முன் வீதியில் சுமார் 4 அடி வரையிலான நீரும், சித்தாண்டி 4 பழைய சந்தை வீதியில் 6 அடி வரையிலான நீரும் காணப்படுகின்றது.

    சில உள் குறுக்கு வீதிகள் 6 அடிக்கு மேற்பட்ட நீரைக் கொண்டும் காணப்படுகின்றன. சித்தாண்டி 3 மாரியம்மன் ஆலயத்தை அண்டிய பகுதி மற்றும் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. இங்கு நீரினுடைய மட்டம் 6 அடிக்கு மேல் காணப்படுகின்றது.

    சித்தாண்டி 02, சித்தாண்டி 01 மற்றும் மாவடிவேம்பு ஆகிய கிராமங்களும் பகுதியளவில் வெள்ள நீரினால் மூழ்கியுள்ளன. சித்தாண்டி 03, 04 ஆகிய கிராம சேகவர் பிரிவுகளிலிருந்த மக்கள் இடம்பெயர்ந்து தற்போது பாடசாலை, பொதுச் சந்தை மற்றும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். சில குடும்பங்கள் தத்தமது வீடுகளில் உள்ள மேல் தளங்களில் அல்லது பரன் அமைத்து தொடர்ந்து தமது உறவிடங்களிலே தங்கியுள்ளர்.

    வீடுகளிலே வளர்க்கப்பட்ட நாய்கள் உறவினர்களால் கொண்டு செல்லப்பட்டவை தவிர ஏனையவை உயிரிழிக்கும் நிலையிலும், குளிரில் நடுங்கிய நிலையிலும் காணப்படுவதுடன், ஒரு சில இடங்களில் நாய்கள் உயிரிழந்து மிதப்பதையும் காண முடிகின்றது.

    குறிப்பிட்ட பகுதிகளின் மலசல கூடங்களின் கழிவு நீர் மற்றும் இன்னோரன்ன கழிவுகள் நீரில் கலந்திருப்பதனாலும், கிணறுகளை மேவி வெள்ள நீர் காணப்படுவதனாலும் தூய நீரை பெறுவதில் வெள்ளப் பிரதேசத்தில் தங்கியுள்ள குடும்பங்கள் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதுடன், தொலைவிலிருந்து நீரை எடுத்து வரவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

    நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க கிராம உத்தியோகத்தர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
    சித்தாண்டி சந்தணமடு ஆற்றில் மணல்கள் அகழ்ந்து எடுக்கப்படுவதை தடுத்து நிறுத்தினால் வெள்ள அபாயத்தில் இருந்து ஓரளவேனும் குறைத்துக் கொள்ளலாம் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    கல்முறை மாநகரசபை ஊழியர்களுக்கான விடுமுறைகள் ரத்து

    கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற அடைமழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு கல்முனை மாநகர சபையின் சுகாதார மற்றும் வேலைப் பகுதி ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலிக்கு இதற்கான விசேட உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழையினால் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தில் இருந்து கல்முனைப் பிராந்தியத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் உயர்மட்டக் கூட்டமொன்று நடாத்தப்படு சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

    இதன் பிரகாரம் வெள்ள அபாய முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை நேர்த்தியாக மேற்கொண்டு வந்ததாகவும் இதனால் தற்போது பெய்து வருகின்ற மழையினால் கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புகள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி சுட்டிக்காட்டினார்.

    எவ்வாறாயினும் எதிர்வரும் நாட்களில் எமது பணியை மேலும் பலப்படுத்தி அனைத்து பிரதேசங்களையும் மக்களையும் வெள்ள அபாயத்தில் இருந்து முழுமையாக பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மாநகர சபையின் சுகாதார மற்றும் வேலைப் பகுதி ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளையும் ரத்து செய்யுமாறு முதல்வர் பணிப்புரை விடுத்திருப்பதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: கிழக்கில் தொடரும் அடைமழை! பலர் பாதிப்பு Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top