வடக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தை திருப்பியனுப்பவும், பிரிந்திருக்கும் வடக்கையும் கிழக்கையும் ஒன்று சேர்க்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது அபாயகரமானது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
13ஆவது திருத்தச் சட்டத்திலே இருக்கக்கூடிய பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்குவோம். இப்போது பொலிஸ் படைக்கு ஒரே அதிகாரத்தின் கீழ் மிகவும் சுதந்திரமாக தொழிற்பட்டு வருகின்றது. ஆனால், இந்த திருத்தத்தின் மூலம் முதலமைச்சரின் கீழ்தான் பொலிஸ் அதிகாரம் வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு பொலிஸ் அதிகாரம் முதலமைச்சரின் கைகளுக்கு போய் விட்டால் அது பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கூறி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
பொத்துவில் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் ஏ.எம்.அப்துல் மஜீட் தலைமையில், பொத்துவில் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பொத்துவில் பிரதேச மக்கள், கடந்த 30 வருடத்துக்கு மேலாக பயங்கரவாதத்தாலும் 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தாலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
இன்று நீங்கள் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. உங்கள் பிள்ளைகள் படிப்பதற்கும் பாடசாலை செல்வதற்கும் உங்களுடைய வயல்களுக்கு சென்று விவசாயம் செய்வதற்குரிய சூழ்நிலையொன்று ஏற்பட்டிருக்கின்றது.
எனது முதலாவது 5 வருட காலத்துக்குள் இந்த நாட்டில் புரையோடிப் போயிருந்த கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தேன். அதனைத் தொடர்ந்து இந்த நாட்டின் பல பகுதிகளிலும் அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தது.
இன்று இந்த பகுதியில் இருக்கும் பாதைகள் எவ்வளவு சிறப்பாக அமைந்துள்ளன. மணிக்கணக்கில் பயணம் செய்த நீங்கள் தற்போது நிமிடக்கணக்கில் பயணம் செய்கின்றீர்கள். வெளிநாடு செல்வதாயின் கொழும்புக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
பொத்துவில்லுக்கு மிக அண்மையிலுள்ள மத்தல விமான நிலையம் ஊடாக மிக விரைவாக வெளிநாடு செல்ல முடியும். அதே போன்று பொத்துவிலில் இருந்து மத்தல விமான நிலையத்துக்கு செல்வதற்கு மிக விரைவில் புகையிரத சேவையொன்றையும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளேன்.
எதிர்கால சந்ததியினரான எமது பிள்ளைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி முன்னோக்கிச் செல்வதா என்ற விருப்பத்தைக் கேட்பதற்காக நான் இன்று உங்கள் முன்னே வந்துள்ளேன்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் என்னுடன் போட்டி போடுவதற்காக எங்களுடன் இருந்து பாய்ந்து ஓடிப்போன ஒருவர் இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர்கள் ஒரு கொள்கைப் பிரகடனமொன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் விவசாயிகளுக்கு நான் வழங்கி வருகின்ற மானிய அடிப்படையிலான உரத்தை வழங்குவதா இல்லையா என்ற விடயம் உள்ளடக்கப்படவில்லை.
எனது 2015ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களும் நிதி ஒதுக்கீடுகளும் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.
அந்த விடயங்கள் அனைத்தையும் தான் அவர் ஜனாதிபதியாக வந்தால் செய்வேன் என்று கூறியிருக்கின்றார். அதாவது எனது வரவு- செலவு திட்ட முன்மொழிவை இவர்கள் பிரதியெடுத்திருக்கின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஓர் ஒப்பந்தம். அதில் என்ன கூறியுள்ளார்கள் என்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வட மாகாணத்தில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தை திருப்பி அனுப்புவோம் என்றும் அதுமட்டுமல்லாது பிரிந்திருக்கும் வடக்கையும் கிழக்கையும் ஒன்று சேர்ப்போம் என்றுதான்.13ஆவது திருத்தச் சட்டத்திலே இருக்கக்கூடிய பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்குவோம்.
இப்போது பொலிஸ் படைக்கு ஒரே அதிகாரத்தின் கீழ் மிகவும் சுதந்திரமாக தொழிற்பட்டு வருகின்றது. ஆனால், இந்த திருத்தத்தின் மூலம் முதலமைச்சரின் கீழ்தான் பொலிஸ் அதிகாரம் வருகின்றது.அவ்வாறு பொலிஸ் அதிகாரம் முதலமைச்சரின் கைகளுக்கு போய் விட்டால் அது பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து வந்து எம்முடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுபவர்களுக்கு நாங்கள் கூறி வருகின்றோம் 13ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் இருக்கும் பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாது என்று.
7 இலட்சமாக இருந்த அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை 15 இலட்சமாக அதிகரித்தோம். இத்திட்டங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி விட்டு இலங்கையை சிங்கப்பூர் மொடலாக மாற்றப் போகின்றார்களாம். இலங்கையை சிங்கப்பூர் மொடலென்று நடைபெறப்போவது அவர்களுக்கே தெரியாது.
அது தனியார் மயப்படுத்தலில் தான் கொண்டு போய் எம்மையெல்லாம் சேர்க்கப் போகின்றது. இதேவேளை, கடந்த வரவு- செலவு திட்ட முண்மொழிவில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிதாக அரசேவையில் உத்தியோகம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளேன்.
அதையெல்லாம் குறைத்து அவர்கள் தனியார் மயப்படுத்த முனைகின்றார்கள். அதற்காக நான் விரும்புவது எங்களுக்கு இப்போதும் எப்போதும் தேவையானது ஸ்ரீலங்கா மொடல்தான். எனவே, நீங்கள் அனைவரும் எங்களோடு கைகோர்த்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். உங்களுக்காக உங்களின் எதிர்கால சந்ததிக்காக அவர்களின் ஒளிமயமான வாழ்க்கைக்காக நீங்கள் ஒன்றுபட வேண்டும் என்று தெரிவித்தார்.