சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கு இலங்கையில் அரசியல் மட்டத்தில் மட்டுமன்றி, சுற்றுச்சூழல் அமைப்புகளிடம் இருந்தும் எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துள்ளது.
தாம் ஆட்சிக்கு வந்தால், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை கைவிடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.இந்த திட்டத்தினால், சிறிலங்காவின் மென்மையான கடற்சூழல் பாதிக்கப்படும் என்று, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.
பெரும் எண்ணிக்கையான குடியிருப்புகளுடன் செயற்கையான தீவு அமைக்கப்படுவது, இந்தியப் பெருங்கடலின் கடல்வாழ் உயரினங்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று அந்த அமைப்பினால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
செயற்கைத் துறைமுகத்துக்காக பெருமளவு மண், கல் போடப்பட்டு நிரவப்படும் போது, கரையோரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.மில்லியன் கணக்கான தொன் பாறைகளும், ஏனைய சிதைவுகளும் கடலில் கொட்டப்படும் போது இயற்றையான பவளப்பாறைகளும், கடலடி அமைப்புகளும் சிதைந்து போகும் ஆபத்து உள்ளது.
இந்த திட்டத்தை ஆரம்பிக்க முன்னர் சிறிலங்கா அரசாங்கம் முறையான சுற்றுச்சூழல் ஆய்வை மேறகொள்ளவில்லை என்று சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுக்கான நிலையத்தைச் சேர்ந்த ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இயற்கை வளங்களை அழிப்பதற்கு ஒரு அரசாங்கம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?வர்த்தகர்களால் கொடுக்கப்பட்ட அறிக்கையின் படி மீனவர்களின் வாழ்வாதாரத்தை எப்படி சிதைக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டுபாய் பாம் சிற்றி திட்டத்தினால் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்பை சுட்டிக்காட்டிய காரியவசம், இந்த திட்டத்தினால், பாணந்துறை தொடக்கம் நீர்கொழும்பு வரையான மேற்குக் கடலோரப் பகுதி பாதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை, 1.4 பில்லியன் டொலர் செலவில் சீனா மேற்கொள்ளவுள்ளது.இதன் மூலம் எட்டு ஆண்டுகளில் கடலில் இருந்து 233 ஹெக்ரெயர் புதிய நிலப்பரப்பு உருவாக்கப்படும்.இந்த திட்டத்துக்கு எதிராக நீர்கொழும்பு மீனவர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.