ஐனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் வடக்கிலும் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் இதன் போதான தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு இம்முறை பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் யாழ் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவீந்திர வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்களிப்பு மற்றும் வாக்கெண்னும் நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் மாவட்டத்தில் நீதியான நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் இதற்கமையவே பொலிஸாரின் செயற்பாடுகள் அமையும் என்றும் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தல் குறித்த முன்னேற்பாடுகள் மற்றும் மாவட்டத்தின் பாதுகாப்புக்கள் என்பன தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் உயர்மட்டக் கலந்துரையாடலொன்று நேற்று மதியம் இடம்பெற்றது.
இதன் போது தேர்தல் திணைக்கள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள், மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு பொலிஸாரும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இடம்பெறுகின்ற தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் மற்றுமு; வாக்கெண்டும் நிலையங்களிலும் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு விசேட கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு இத்தேர்தலில் மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி நீதியான நியாயமான தேர்தல் இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.