இந்தியாவின் மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பி.யூ.சி.எல்) அமைப்பு ஏற்பாடு செய்துள்ள கே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்வில் "பாதுகாப்பையும் இறையாண்மையும் காத்தல்'' என்ற தலைப்பில் நினைவுப் பேருரையை முதலமைச்சர் ஆற்றுகிறார்.
தென்னாப்பிரிக்க நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சக்கரியா யாகூப்இ எழுத்தாளர் வசந்த் கண்ணபிரான் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்
தனிப்பட்ட நிகழ்ச்சி என்பதால் 9ம் திகதி தான் விக்னேஸ்வரன் சென்னை செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென தனது பயணத்திட்டத்தை மாற்றினார் விஸ்னேஸ்வரன். அதன்படி இன்றே சென்னை சென்றுளார். வடக்கு மாகாண முதல்வர் வருகையையொட்டி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் குவிந்திருந்தனர். ஆனால் அவர்களிடம் எதுவும் பேசாமல் விக்னேஸ்வரன் சென்றுவிட்டார். இன்னும் இரு நாட்களுக்கு அவர் சென்னையில்தான் தங்கியிருக்க உள்ளார். முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ்நாட்டுக்கு மட்டுமே இம்முறை பயணம் செய்வார் என்றும் டெல்லிக்கு செல்லமாட்டார் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.