இலங்கை அரசியல் யாப்பின் 18ஆவது சட்டத் திருத்ததிற்கு
அமைய மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது சம்பந்தமாக சட்ட விளக்கம் ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். அரசியல் யாப்பின் 129 (1) பிரிவின் கீழ் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் யாப்பின் 18ஆவது திருத்தம் அமுலுக்கு வந்த நேரத்தில் தான் இரண்டாவது பதவிக் காலத்தை வகித்துவந்ததால், அத்திருத்தத்திற்கேற்ப மூன்றாவது முறையாகவும் போட்டியிடுவதில் சட்ட ரீதியான சிக்கல் ஏதும் உள்ளதா என்பது பற்றி உச்சநீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டுமென ஜனாதிபதி தனது மனுவில் கோரியுள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதி பதவியை ஒருவர் இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் என்றிருந்த நிபந்தனையை 18ஆவது சட்டத் திருத்தம் நீக்கியிருந்தது. ஜனாதிபதியின் இந்த மனு சம்பந்தமாகக் கருத்துத் தெரிவிக்க விரும்புவோர் எதிர்வரும் 7ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்குள் அதனை நீதிமன்றத்திடம் எழுத்து மூலமாகச் சமர்ப்பிக்க வேண்டுமென உச்சநீதிமன்ற பதிவாளர் எம்.எம்.ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை திறந்த நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படுமா என்பது பற்றி இப்போதைக்கு உத்தியோகபூர்வமாகத் தன்னால் பதில் சொல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாகக் கருத்து கூறுமாறு கோரி உச்சநீதிமன்றத்திடம் இருந்து தனக்கு கடிதம் ஒன்று வந்துள்ளதாக இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் உபுல் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இந்த மனு விசாரிக்கப்படுகின்ற திகதி பற்றி அறிவிக்குமாறு உச்சநீதிமன்றத்தின் பதிவாளரிடம் தான் கேட்டுள்ளார் என ஜெயசூரிய கூறினார்.