மலைகளை நம்பி வாழ்ந்த மக்கள் மண்ணுக்குள்ளேயே
மாயமாகிப் போன பெருந்துயரம் மீரியபெத்த தோட்டத்தில் நிகழ்ந்து மூன்று நாட்கள் கடந்துவிட்டன. பாரிய மலைச் சரிவில் சிக்கி சிற்றெறும்புகள் போல துடித்து மண்ணுக்குள் புதைந்துபோன உயிர்கள் எல்லாம் இறையதிசயத்தால் உடனேயே உயிருடன் திரும்பிவிடக் கூடாதா என பதைபதைக்கும் ஒவ்வொரு உள்ளமும் கேட்கும் நேரம் இது.
சூரிய உதயத்துடன் எதிர்பார்ப்புகளோடு நாளை ஆரம்பித்தவர்களின் வாழ்க்கை மீரியபெத்தையில் மாத்திரம் அஸ்தமனமாகிப் போனது. அதிகாலையில் தாய் தந்த அன்பு முத்தமும் அரவணைப்பும் சிறுவன் சுரேஷ்குமாரின் கண்களிலிருந்து மறையவில்லை.
"ஓடுங்கள், போய்விடுங்கள்" என தந்தை சொன்ன இறுதி வசனங்கள் அவன் காது மடல்களில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. மீரியபெத்தையில் இயற்கை நடத்திய கோரத் தாண்டவத்துக்கு முகங்கொடுத்து தாய், தந்தையரை இழந்து தவிக்கும் பன்னிரண்டு வயது நிரம்பிய சுரேஷ்குமார் நூற்றுக்கணக்கான அகதிகளில் ஒருவன்.
பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் சுரேஷ் உயிரை வதைக்கும் துன்பத்தை இதயத்தில் சுமந்தவனாய் தன் சகோதரி கஜனியின் தோள்களில் சாய்ந்திருக்கிறான். பதினான்கு வயது நிரம்பிய கஜனி தான் இனி அவனது உலகம். ஆனால் கஜனி உலகம் அறியாத பாலகி. கஜனி சொல்வதைக் கேளுங்கள். "மலையில வெடிப்பு இருக்குது, மண் சரியப் போகுதுனு காலையிலேயே சொன்னாங்க.
அப்பாவும் அம்மாவும் ஓடி வந்து என்னையும் தம்பியையும் லயத்துக்கு அந்தப் பக்கம் கூட்டிவந்து விட்டாங்க. ஆச்சியும் எங்களோட இருந்தாங்க. வீட்டில கொஞ்சம் சாமான் இருக்கு அதையும் எடுத்து வாரோம். நீங்க தூரமா போய் நில்லுங்கனு சொல்லிட்டு அப்பாவும் அம்மாவும் வீட்டுக்குப் போனாங்க. நான் திரும்பியபோது பெரிய சத்தம் கேட்டுச்சி. பார்த்துக்கொண்டிருக்கும் போதே அப்பாவும் அம்மாவும் மண்ணில புதைஞ்சிட்டாங்க" என்கிறாள் கஜினி.
"சுனாமி அலைபோல மண் சரிஞ்சு வந்திச்சு, பெரிய சத்தம் கேட்டிச்சு. அம்மா...அப்பானு கூப்பிட்டேன்.... கண் முன்னாலேயே காணாமல் போயிட்டாங்க..இன்னும் வரல்ல" என்று அவள் மேலும் விபரிக்கையில் கண்ணீர் நிரம்பி விம்முகிறாள்.
இந்தப் பேரவலத்துக்கு முகங்கொடுத்த மக்களும் மண் சரிவு அபாயம் உள்ள பகுதிகளிலிருந்து வெளியேறியவர்களும் மூன்று முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். பூனாகலை தமிழ் மகா வித்தியாலயம், கொஸ்லந்தை ஸ்ரீ கணேசா தமிழ் வித்தியாலயம், பூனாகலை இலக்கம் 2 தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.
இப்படியொரு பேரவலம் நிகழப்போகிறது என்று தெரிந்தும் அதனை தவிர்த்துக்கொள்ள முடியாமல் போனதையிட்டு தம்மைத் தாமே நொந்து கொண்டும் சிறு பூச்சிகளுக்குக் கூட தீங்கு நினைக்காத நம்மையா இறைவன் இப்படிச் சோதிக்க வேண்டும் என புலம்பிக் கொண்டும் இருக்கிறார்கள். சிலர் கதறிக் கதறி அழுது மயங்கிப்போகிறார்கள்,
மேலும் சிலர் மீரியபெத்த தோட்ட காவல் தெய்வம் மகாமுனியின் திருவுருவப் படத்தைப் பார்த்து வேண்டிக்கொண்டிருக்கிறார்கள், இளைஞர்கள் பலர் அகழ்வுப் பணிகளுக்காக சென்றிருக்கிறார்கள். மீரியபெத்தையில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையானது தவறு செய்துவிட்டோமோ என்று இயற்கை வருந்துவதாகவே இருக்கிறது.
அந்த மழையை விட அங்கு மக்கள் சிந்திய கண்ணீரின் அளவு அதிகமாக இருக்கும். முந்நூறு அடி உயரமான மலை சாய்ந்து வந்து முழுக் கிராமத்தையும் அழித்திருக்கிறது. கால்வயிறு அரை வயிறு என உண்டு சிறுகச் சிறுக சேமித்த பொருட்கள் எல்லாம் எல்லை தாண்டி எங்கேயோ தேங்கிக் கிடக்கின்றன. உறவுகளைத் தேடி வந்த மக்கள் எல்லாம் அங்கு சூழ நின்று கண்ணீர் சிந்தச் சிந்த அழுவதை பார்க்கவே நெஞ்சம் கணத்தது.
அங்கிருந்த மகாமுனி ஆலயத்தின் ஆலமரம் வேறோடு சாய்ந்திருந்தது. அதன் ஒரு பகுதி 1 கிலோமீற்றர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டிருந்தது. மலையேறி வியர்வை சிந்தி உழைத்து சிறுகச் சிறுக சேகரித்த பொருட்கள் எல்லாம் கிராமத்தில் கீழ் எல்லையில் தேங்கிக் கிடந்தன.
உண்மையில் இந்தப் பேரவலம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை அந்த சந்தர்ப்பதில் அங்கு இருந்து மக்களை வெளியேற்ற வேண்டும் என முனைப்புடன் செயற்பட்ட என். ஞானசேகர் (32) இப்படி விபரிக்கிறார். "மலையில வெடிப்பு இருக்குனு பார்க்குறதுக்கு நாங்க கொஞ்ச பேர் சேர்ந்து அங்க பார்க்குறதுக்குப் போனோம். மலை சரியப்போகுதுனு எங்களுக்கு தெரிஞ்சிருச்சி. உடனடியா தோட்டத்துக்கு வந்து எல்லோருக்கும் அறிவிச்சோம். கொஞ்சம்பேர் உடனடியா போயிட்டாங்க.
கொஞ்ச நேரத்திலயே மண் சரியத் தொடங்கிருச்சி. நான் என்னோட 1 வயசு குழந்தையை தூக்கிட்டு மற்ற கையில என் மனைவிய பிடிச்சிட்டு ஓடினேன். மண் வேகமா எங்க கிட்ட வரும்போது என் குழந்தைய தூக்கி தூர வீசினேன். மனைவிய இறுகப் பிடிச்சிட்டு ஓடும்போதே பெரிய மண்திட்டு வந்து மனைவிய இழுத்திட்டு போயிடுச்சி. தேவிகானு கத்தினேன். ஆனாலும் காப்பாத்த முடியல்ல. நாம பேசும் வார்த்தையொன்று எவ்வளவு வேகமோ அதே போல வேகத்தில மலை வந்து எல்லாத்தையும் கொண்டு போயிடுச்சி" என்றார்.
"நாங்க யாருக்கும் எந்தக் குற்றமும் பண்ணல சாமி. ஏன் இப்படி சோதிக்கணும்? நான் அன்றைக்கு காலையில வேலைக்குப் போயிட்டேன். வேலைத்தலத்தில தான் இப்படி நடந்திருக்குனு சொன்னாங்க. எங்க குல தெய்வம் மகாமுனி சாமிய வேண்டிக்கிட்டு ஓடோடி வந்தேன். எங்க குடும்பத்தில யாருக்கும் எதுவும் நடக்கக் கூடாதுனு சாமிய வேண்டினேன். ஆனா இங்க வந்து பார்த்தநேரம் எல்லாமே முடிஞ்சிடுச்சி.
என் மருமகள், தங்கச்சிமார் ரெண்டு பேர், அண்ணனின் மனைவி எல்லாருமே நிலத்தில புதைஞ்சிட்டாங்க. குடும்பத்தில எல்லாத்தையும் கொண்டுபோன சாமி என்னை மட்டும் ஏன் உயிரோட வைக்கணும்?" என அழுது அழுது தோய்ந்துபோன குரலில் பேசுகிறார் எஸ்.மாரியாய் (54).
மண்ணுக்குள் குற்றுயிராய் இருந்து மீட்கப்பட்ட ஆர்.இராஜபரமேஷ்வரி (57) தன் அனுபவத்தை இவ்வாறு பகிர்கிறார். "வானத்தில ரெண்டு விமானம் மோதி வெடிச்சா எப்படி சத்தம் கேட்குமோ அப்படியொரு சத்தம் கேட்டிச்சி. நாங்க எல்லாரும் அலறிக்கிட்டு ஓடினோம். தோட்டத்தை தாண்டும்போது நான் மண்ணுக்குள் மூழ்கிட்டேன். என் பின்னால வந்த தம்பி,அவன் மனைவி, அக்காவின் கணவர், பேரப்பிள்ளை எல்லாரும் புதைஞ்சிட்டாங்க. அங்க வந்த ஆம்பிளப் புள்ளைங்க தான் என்னை மண்ணிலிருந்து காப்பாத்தி எடுத்தாங்க"
இயற்கை ஒரு மனித வேட்டையை இங்கு நடத்தியிருக்கிறது. அது இலங்கையர் ஒவ்வொருவர் மனதிலும் பெரும் கவலையை உண்டுபண்ணியிருக்கிறது. உண்மையில் இந்தப் பேரவலத்தை தவிர்க்கக் கூடிய நிலையிருந்தும் அது முடியாமல் போயிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
இங்கு மண்சரிவு அபாயம் உள்ளதாக தோட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அங்கு அடிப்படை வசதிகள் எதுவுமே செய்துகொடுக்கப்படவில்லை. காடுகளை அழித்து அங்கே எப்படி வாழ முடியும் என அந்த மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இருநூறு வருடங்களாக மண்ணுக்காக உழைத்து நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் மக்களுக்கு வழங்கப்பட்ட நியாயம் இதுதானா?
இனியும் வேறு எங்கிலும் இவ்வாறான சம்பவங்கள் நிகழாதவண்ணம் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். மண்ணுக்குள் புதைந்துபோன உறவுகளுக்காக பிரார்த்திப்போம். அவர்களின் மீளெழுச்சிக்காக அனைவருமே இணைந்து காத்திரமான செயற்திட்டங்களை முன்னெடுப்பதே காலத்தின் கட்டாய தேவையாகும்.
- மீரியபெத்தையிலிருந்து இராமானுஜம் நிர்ஷன்-
- மீரியபெத்தையிலிருந்து இராமானுஜம் நிர்ஷன்-