பிரபஞ்சம் காணாத தமிழீழத் தாயகன்.(...) - TK Copy பிரபஞ்சம் காணாத தமிழீழத் தாயகன்.(...) - TK Copy

  • Latest News

    பிரபஞ்சம் காணாத தமிழீழத் தாயகன்.(...)

    பிரபஞ்சம் காணாத தமிழீழத் தாயகன்.(...)
    சுடரும் விழிகள் கொண்டான் - விரல்
    சுட்டும் திசையில் வென்றான்
    படரும் தமிழின் அழகில் - பல்
    இடர்கள் பொடிபட நின்றான்.
    இடியும் மின்னலும் தாங்கும் 
    இதயம் படைத்த தீரன் - அண்ணன் 
    இலவம் பஞ்சும் தோற்கும் 
    இளகிய நெஞ்சுக்காரன்.  

    தனக்கென ஒன்றையும் வேண்டிலன்
    தமிழர்க்காய் வாழ்க்கையை வேண்டினன்
    பல முறை சதிகளைத் தாண்டினன்
    தமிழரின் தலைமகனாகினன்.

    அண்ணன் பெயர் எங்கள் மந்திரம்
    அவர்வழி தொடரின் சுதந்திரம் நிரந்தரம் 
    அன்பு பண்புடை ஆளுமைத் தந்திரம்
    அண்ணனின் வாழ்வியல் வழிகாட்டும் விசித்திரம்.

    அச்சத்தைத் துச்சம் செய்து அஞ்சச் செய்தவன்
    வஞ்சப் பகையதற்கு அச்சம் விதைத்தவன்
    ஆயிரம் போர்க்களத்தை அதிரடியில் ஆடி 
    வீரியம் புகட்டிடும் வேங்கைப்புலியிவன்.     

    சிந்தனைச் சிறகிலே புதுமைகள் சேர்த்து 
    விந்தைகள் புரியும் வேகத்தின் வீச்சவன்
    முந்தைச் சந்ததிக்கும் பிந்திய தலைமுறைக்கும்
    முத்தமிழ்த் திரளான வேதத்தின் மூச்சவன்.

    முப்படை கொண்டொரு போர்ப்படை கண்டு 
    இத்தரையிற் தனித்துவனாகச் சிறப்பவன்.
    வேளை அறிந்துடன் கட்டளை வழங்கிடும் 
    வேள்வித் தீயிடை காவியப் பிறப்பவன்.

    சுற்றிவளைத்துப் பகை வந்து சூழ 
    பற்றி எரிந்த ஆனந்தபுரத்திலே
    சற்றும் சளைக்காது நேருக்கு நேர் நின்று 
    சமர்ப்படை நடத்திய தளபதி எம் தலைவன்.     

    எதிர்ப்படை தகர்த்திடும் விடுதலைத் தீப்பொறி
    எதிர்கொண்டாடிடும் தமிழ்ப்படைச் சரவெடி
    தலைவனே தற்க்கொடைப் போராட்ட வடிவம்
    கரும்புலி மாவீரம் காண்கின்ற இமயம்.

    சித்திரம் தீட்டிடும் பெண்களின் கைகளில் - சன்னம் 
    சீறிப் பாயும் துப்பாக்கி தந்தவன்
    அத்தனை துணிவையும் அள்ளிக் கொடுத்து - தமிழ் 
    மங்கையர் வீரத்தை உலகறியச் செய்தவன்.

    காந்திய மண்ணிற்கே அகிம்சை சொன்னவன் - உளம் 
    ஏந்திய இலட்சிய உறுதியில் முன்னவன் 
    சாதனைகள் சொல்லும் சரித்திரச் சான்றினன் - பெரும்
    சமுத்திரம் போலவே வற்றாத நீரவன்.  

    தக்கத் தருணத்தில் தாதி ஆவான் - தலைவன் 
    நிர்க்கதியானோர்க்குத் தன்கை கொடுப்பான்  
    பாதிப்புற்றோர்க்கு நீதி தருவான் - தலைவன் 
    ஜாதி பேதம் கடந்த ஜோதியாவான்.

    பக்கப் பலமாகத் தோழமை செய்வான்
    மக்கள் மனங்களைச் சேவையால் வெல்வான்
    துக்கம் துடைத்திடும் அன்பினை நெய்வான் 
    நித்தம் அதிசயக் கோலங்கள் செய்வான்.

    விசும்பின் விசாலம்கொள் வெளிப்படைக் குணத்தவன்
    விரிந்திடும் விளக்கமாய் வியாபிக்கும் குலமகன் 
    வேதனை முழுவதும் சாதனையாக்குவான் 
    வீரப் புலிப்படை யார்த்திட்ட வேந்தனவன்.

    வல்வை மண்மடி வாய்த்த திருமகன் 
    வள்ளுவன் நெறிகளில் வாழும் குறள்மகன்
    வாரி வழங்கிடும் வள்ளற் குணத்தவன் 
    யாரும் உவமை இல்லாப் பெருமகன்.

    பிரபஞ்சம் காணாத பிறவியாய் நிமிர்ந்தனன் 
    பிரமிக்கும் வல்லமையால் பேருலகில் உயர்ந்தனன் 
    நிகரற்ற வீரத்தின் நிதர்சன நாயகன் - தமிழ்  
    நெஞ்சங்கள் வாழ்த்திடும் தமிழீழத் தாயகன். 

    சுயநலம் இல்லாப் பொதுநலம் பேணும் 
    சுத்தத் தமிழ் வீரன் 
    பிரபலம் விரும்பா பிரபலன் - அண்ணன் 
    வரமாகி வந்த பிரபாகரன்.

    உடல் பொருள் ஆவி துறக்க  
    உறுதி பூண்ட கரிகாலன்
    உரிமைப் போர்த் தவமாய் 
    பெருகிப் பாய்ந்த நதிமூலன்.

    உற்றமனையாள் பெற்ற மக்கள் 
    சுற்றம் சுகம் அனைத்தும் 
    பெற்ற தாய் மண்ணிற்கென்றே   
    அர்ப்பணித்த அனலவன்.

    சொல்லுமுன் செயாலாய்க் காணும் 
    வல்லவச் செயலாளன் - ஓர் 
    சொல்லிலே விளக்க முடியா 
    சுடுகலக் கையாளன்.

    தலைவரைப் பெற்றி உரைக்கா 
    வாய்களும் உளதோ இங்கே? 
    தலைவரைச் சுற்றிப் பறக்கா
    மனங்களும் உளதோ இங்கே?

    தலவரைப் போற்றிப் பாடா 
    தமிழிசைக்கு ஏது சுதி?
    தலைவரைச் சாற்றி எழுதா
    இயற்றமிழ் ஆகுமோ கவி?

    தாயெனக் கண்டோம் - தலைவன்
    தமிழ்ப்பற்றை ஊட்டும் போது
    தந்தையாய்க் கொண்டோம் - தலைவன் 
    தைரியத்தைக் கூட்டும் போது.

    அண்ணாய்ப் பார்த்தோம் - அவர் 
    தங்கையரைத் தாங்கிடும் போது 
    தனயனாய் ஏற்றோம் - அவர் 
    தாய்க்குலத்தைப் போற்றிடும் போது.

    தமிழனாய்ப் புரிந்தோம் - அண்ணன் 
    உயிர்கொடுக்கத் துணிந்த போது
    தலைவனாய் வியந்தோம் - அவர் 
    தரணிக்கே சவாலான போது.

    வரலாறு என்பது தலைவரின் வாழ்க்கை - தமிழர் 
    வாழ்க்கை என்பதோ தலைவரின் வழிகாட்டல்
    தத்துவம் என்பது தலைவரின் செயல்கள் - தமிழர் 
    தனித்துவம் என்பதோ தலைவரின் சிந்தனைகள்.

    தலைவர் உதித்த அக்கணமே
    தமிழர் விடியலின் பொற்கணமே
    தமிழும் தலைநிமிர்ந்தது அப்பொழுதே
    தாய்நிலம் மீண்டும் ஒளிர்ந்ததும் அப்பொழுதே.

    வாழ்க வாழ்க என்று அண்ணனை வாழ்த்த
    வார்த்தைகள் மழையெனப் பொழியும் 
    வானமும் பெருமழை பொழியும் 
    பூமியில் பசுமைகள் விளையும்.

    கார்த்திகை மாதமும் சிலிர்க்கும் 
    காந்தள்ப் பூக்களும் சிரிக்கும்
    சாத்தியமாகும் விடிவினை ஓர் நாள்
    சாத்தியமாக்கும் சரித்திரனைப் பாடும்.

    பூரணனாய்ப் பொலியும் எங்கள் 
    காரணனைக் கவிதை செய்யும் 
    புன்னைகை பூத்த புலியை 
    போற்றி நின்று கூத்தாடும்.

    என்னோடு சேர்ந்து கொண்டு 
    இயற்கையே கொண்டாடும் 
    மன்னவன் அண்ணன் தோன்றிய 
    மாரிப் பொழுதினைப் புகழ்ந்தாடும்.

    வாழ்க வாழ்க வாழ்க அண்ணன் - தமிழை 
    ஆள்க ஆள்க ஆயிரங் காலங்கள் 
    நீள்க நீள்க இசையுடன் என்றும் 
    வாழ்க வாழ்க திசையெல்லாம் அவர் புகழ்.


    -கலை மகள்-
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: பிரபஞ்சம் காணாத தமிழீழத் தாயகன்.(...) Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top